Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2011ம் ஆண்டின் மிக அதிகமாக பகிரப்பட்ட செய்திகளில் முக்கியமானதாக சிரியாவின் மக்கள் எழுச்சி மாறியுள்ளது. இன்னமும் கலவரங்களுடன் 2012 இலும் இது தொடர்கிறது.

அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம் மக்களை அதிகளவு கொண்ட சிரிய பேரரசு 1936 ஆம் ஆண்டு பிரான்சிடம் இருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலை பெற்றது.

இதையடுத்து 1967 இல் இசுரேல் போரிட்டு சிரியாவின் கோகான் மேடுகளை கைப்பற்றியது. எனினும் மிக குறுகிய காலத்தில் அதாவது 1970 இல் இராணுவப் புரட்சி மூலம் ஆளும் கட்சியான பாத் கட்சியை தன் வசமாக்கி நாட்டின் அதிபராக பதவியேற்ற ஹாபிஸ் அல் அசாத் பின்னர் தன்னை சர்வாதிகரியாக நிலை நிறுத்திக் கொண்டார்.

30 ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சியை நிகழ்த்திய அசாத் 2000 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து சிரியாவின் அதிபரான அசாத்தின் மகன் பஷார் அல் அசாத் மூலம் சர்வாதிகார ஆட்சி மேலும் தொடர்ந்தது.. மேலும் பஷார் சொந்தமாக மேற்கொண்ட அரச பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்டங்களால் எதிர் மறையான முடிவுகளையே மக்களிடம் தோற்றுவித்தது.

இவரது வரிக் கட்டணங்கள் தொடர்பான சீர்திருத்தங்கள் குடிமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சிரியாவில் வாழும் மக்களின் எண்ணிக்கையில் 50 வீதத்துக்கும் அதிகமானவர்கள் நடுத்தர மக்கள். இவர்களிடையே இச்சீர்திருத்தங்கள் காரணமாக பணப் புழக்கம் வீழ்ச்சியடைந்தது. மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் இவர்களில் 20 சதவீதம் படித்த வேலையில்லாத இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2002 ஆம் ஆண்டு ஊடகங்களின் தகவல் படி நாட்டின் மொத்த சனத் தொகையில் 75 வீதம் வேலை வாய்ப்பின்றி அவதிப்பட்டுள்ளனர். அங்கு நிரம்பியுள்ள எண்ணெய் வளத்தை பயன்படுத்த முயலும் அந்நிய மேலைத்தேய ஆதிக்கத்தை எதிர்த்து நாட்டில் நிகழும் ஆர்ப்பாட்டங்களும் இதை அடக்கும் அரசின் அளவுக்கு அதிகமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுமே தற்போது மிகப் பெரியளவில் மக்கள் எழுச்சி ஏற்பட காரணமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் சிரியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அமுலில் இருக்கும் அவசரகால சட்டத்தினால் இவர்கள் இராணுவம் மற்றும் காவற்துறையால் மோசமாக ஒடுக்கப்பட்டு வந்தனர்.

அதிபர் முறை குடியரசு ஆட்சியை உடைய சிரியாவில் தற்போது பதவியுலுள்ள பசார் அல் அசாத் இன் ஆட்சிக்கு எதிராக 2011 ஜனவரி 26 இல் மக்கள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் முதன் முதலாக நிகழ்த்தப் பட்டது. இதற்கு முன்னர் துனிசியாவிலும் எகிப்திலும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட மக்கள் எழுச்சியை அடுத்து சிரியாவிலும் அதே பாணியில் தொடங்கப் பட்டது.

இந்த மக்கள் பேரணி இதுவரை 4 கட்டங்களாக நிகழ்ந்துள்ளது. 2011 ஜனவரியில் சிரிய அரசுக்கு எதிராக ஹசன் அலி என்பவர் தன்னைத் தானே பெற்றோல் ஊற்றி தற் கொலை செய்து எழுச்சியைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நிகழ்ந்த மக்கள் எழுச்சி காரணமாக ஜூலை 24 இல் சிரிய பாராளுமன்றத்தில் மதம், பால், அல்லது இன அடிப்படையான கட்சிகள் அங்கம் வகிக்க முடியாத வகையில் சட்ட வரைவு முன் வைக்கப் பட்டது.

எனினும் 1970 முதல் குடும்ப ஆட்சி செலுத்தி வரும் பாசாட் கட்சியின் செல்வாக்கால் இச்சட்டம் முன் வைக்கப்பட்ட போதும் பாராளுமன்றத்தில் இது எடுபடவில்லை. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் ஆயிரக் கணக்கில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். மக்கள் புரட்சி தீவிரமானதை அடுத்து ஏப்ரல் 21 அங்கு அவசர கால சட்டம் தீவிரமாகப் பிரயோகிக்கப் பட்டது.

எனினும் மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று வரை6000 ஐ தாண்டியுள்ளது. சிரிய தலைநகரான டமஸ்கஸில் கடந்த 6ம் திகதி வெள்ளிக்கிழமை நடந்த தற்கொலைத் தாக்குதலில் 23 பேர் மரணமடைந்ததே சமீப தகவல்.

இதே வேளை வெளிநாட்டு நிறுவனங்கள், மனித உரிமைகள் அமைப்பு, மற்றும் மீடியாக்கள் என்பன அனுமதிக்கப் படாத நிலையில் சிரியாவின் உள்ளே என்ன நடக்கிறது என எவராலும் தெளிவாக கூறமுடியவில்லை.

அந்நிய ஆதிக்கம் செல்லுபடியாவதற்கும் தனது முதலீடுகளை மேற்கொள்வதற்கும் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் சிரியாவில் தாராளமய கொள்கை வருவதை விரும்புகின்றன. இதனால் அமெரிக்கா சிரியாவின் மக்கள் கிளர்ச்சியை ஆதரிப்பதாகவும் அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கும் அதே நேரம் மறை முகமாக அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் சுதந்திரமாக செயற்படும் இராணுவத்தினை கண்டித்து பல நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இதில் அரேபிய சமூகம், ஐரோப்பிய ஒன்றியம்,ஐ.நா செயலாளர், இஸ்லாமிய கூட்டுறவு நிறுவனம்,கல்ஃப் கோப்பரேசன் கவின்சில், சவுதி அரேபியா,துருக்கி,அமெரிக்கா, மற்றும் ஈரான் என்பன முக்கியமானவை.

இதில் சர்வதேச அரேபிய சமூகம் அல்லது அரபுலீக் சிரியாவின் அங்கத்துவத்தை ரத்து செய்ததன் மூலம் மக்கள் புரட்சிக்கு ஆதரவளித்துள்ளது. சிரியாவில் நிகழும் அரச ராணுவ அடக்கு முறை காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் அகதிகளாக அயல் நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். இதில் லெபனானுக்கு தப்பிச் செல்ல முனைந்த நபர் ஒருவர் சிரிய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்டதாகவும் தகவல் வெளி வந்திருந்தது.

மேலும் அகதிகள் இடம் பெயராமல் இருப்பதற்காக எல்லைகளில் சிரிய ராணுவம் கன்னி வெடிகளை புதைத்து வருகின்றது. இதில் காலை இழந்த ஒருவரே லெபனானில் முதல் அகதியாக வந்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவித்தன.

இன்னொரு பக்கத்தில் வெளிநாட்டு ஊடகங்கள் சில அயல் நாடான ஈரான் சிரிய அரசுக்கு இராணுவம், புலனாய்வு, தொழிநுட்பம், ஆயுதங்கள்,சினைப்பர்கள் முதலிய விடயங்களில் உதவுவதாக குற்றம் சாட்டியுள்ளன.

இது போன்ற காரணங்களால் இவ்வருடம் 2012 இல் ஆவது சிரியாவில் மக்கள் புரட்சி பாரிய இழப்புக்கு பின்னரும் தொடர்ந்து வெற்றி பெறுமா அல்லது மேற்குலக நாடுகளின் அனுசரையோடு அரசாங்கத்தின் அடக்கு முறை தொடருமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நவன்

0 Responses to விடியலை தேடி தொடரும் சிரியா மக்கள் எழுச்சி போராட்டம்: ஒரு வரலாற்று பார்வை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com