இலங்கை இராணுவத்தால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு ஈழச்சிறுமியின் கதைதான் 'உச்சிதனை முகர்ந்தால். தென்தமிழீழம் மட்டக்களப்பில் நிகழ்ந்த சம்பவமொன்றினை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி நெறிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்.
தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே இத்திரைப்படம் முழுவதும் அவர் பயணித்திருக்கிறார். பாத்திரங்களின் ஆளுமை சிதறடிக்கப்படாமலும் , அவை அதன் எல்லைகளை தாண்டிச் செல்லாமலும், இத் திரைக்கதையை மிகவும் கவனமாகவும், நேர்த்தியாகவும் கட்டமைத்துள்ளார் புகழேந்தி.
பேரினவாத வன்மத்தின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணாக, அதன் குறியீடாக, புனிதவதி என்கிற பாத்திரத்தில் நீநிகா இப்படத்தை ஆக்கிரமித்திருக்கிறார். சக மனிதன் மீது கொள்ளும் நெருக்கம், உறவு, பரிவு என்பவற்றை, நடேசனின் [சத்தியராஜ்] மாமியாரைத் தவிர்த்து, ஆட்டோ சாரதி உட்பட எல்லாக் கதாபாத்திரங்களும் உயர்த்திப் பிடிக்கின்றன.
இப்படத்தை பார்க்கும் போது, ஆழ் மனதில் பதிந்து கிடந்த வலிமிகுந்த உயிர்ப்புள்ள நினைவுகள், மனவெளியில் மீண்டும் மிதக்க ஆரம்பித்தன.
''இது உன் தேசத்தில் நடந்தது... இன்னமும் நடக்கிறது... வலிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து , கற்பனைச் சித்திரங்களை நிஜமென்று நம்பி கைதட்டிக் கொண்டிருக்கிறாயா'' என்று முகத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது.
புனிதவதியை வாழ்வின் நெருக்கடிகள் கடுமையாக முடக்கினாலும், பறவை,நாய், செடிகொடிகள் எல்லாமே அவளுடைய நண்பர்கள்தான்.
அமுதனோடு [நாயின் பெயர்] அவள் பேசுகிறாள். நாய் பேசாது என்று தெரிந்திருந்தும் பேசுகிறாள். அது அவளுக்கான வடிகால்.
விமானம் பறக்கும் இரைச்சலைக் கேட்டவுடன், அவளைத் தாயக நினைவுகள் பலவந்தமாக துரத்துகின்றன.. இன்றும் கூட ,தாயகத்தில் வாழும் இலட்சக்கணக்கான குழந்தைகள் ,பெரியவர்கள் இவ்வகையான உளவியல் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றார்கள். இவர்களை ஆற்றுப்படுத்த எவருமில்லை.
போர்க்காலத்தில் எதிர்கொண்ட அதே ஆக்கிரமிப்பு இராணுவமே இன்றும் அவர்கள் வீதிகளில் உலாவிக்கொண்டிருக்கிறது. கொடூரமான சம்பவங்களை அவை இன்றும் நினைவூட்டுகின்றன. நினைவுகளை அழிக்க முடியவில்லை.
மார்ச் 1 ...அவள் வாழ்வினை சூது கவ்விக் கொண்ட நாள். சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் அவளை குதறிக் கடித்த நாள். ''அன்னைக்குத்தான் எனக்கு வலிச்சது அக்கா'' என்று அவள் குழந்தைத்தனமாக சொல்லும்போது நிர்மலாவின் [சங்கீதா] கண்கள் பனித்தன என்று கூறுவதைவிட, அதில் மனிதத்தின் மீதான நேசிப்பினை கண்டேன் என்று கூறுவது பொருத்தமானது.
இசைஅமைப்பாளர் டி.இமான் பற்றியும் குறிப்பிட வேண்டும். 'உச்சிதனை முகர்ந்தால்...சுட்டிப் பெண்ணே.... இருப்பாய் தமிழா நெருப்பாய்..' போன்ற பாடல்கள், கதை நகர்த்தலுக்கு எவ்விதமான இடையூறையும் விளைவிக்கவில்லை. மிகைப்படுத்தல் இல்லாத, வலிந்து திணிக்காத வகையில் இவை இணைக்கப்பட்டுள்ளன.
புனிதவதியின் அசைவியக்கம் இறுதிக் கணத்தை நெருங்கும் வேளையில், ''இருப்பாய் தமிழா நெருப்பாய்..'' என்கிற அற்புதமான போராட்ட இசை, ஒடுக்கப்படும் மக்களின் புதிய குரலாய் எழுகிறது. விழ விழ எழும் போராட்டத்தத்துவத்தை காட்சியோடும் கானத்தொடும், பிசிறல் இல்லாமல் சரிவரக் கலந்து படைத்திருக்கும் புகழேந்தி அவர்கள் நிற்சயம் போற்றுதலுக்குரியவர்.
'உன் தாய் மண்ணை எங்கே புதைப்பார்கள்...'' ..இதுதான் மண் மீதான எமது பிறப்புரிமையை, இறைமையை தெளிவாகச் சொல்லும் வரிகள். காசி அண்ணனின் கவிதைகள் மண்ணின் பெருமூச்சாகவும், மீண்டும் எழுவதற்கான ஊன்றுகோலாகவும் இருக்கிறது. உணர்ச்சிக் கவிக்குள் உண்மையின் உன்னதங்களை இரண்டறக் கலந்திருக்கும் அவரின் கவிதைகள், இசைவடிவத்துள் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றது.
மெட்டிற்கு பாட்டு எழுதுவது இலகுவான விடயமல்ல. இசைக்குரிய சொற்களை கவிதைக்குள் புகுத்தும் வித்தையையும் காசி அண்ணன் கற்றுள்ளார் போல் தெரிகிறது.
பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். காட்சிகளுக்கு ஏற்ப ,தேவையற்ற இடங்களில் பின்னணி இசை தவிர்க்கப்பட்டிருக்கிறது..
பேரிரைச்சல் நிறைந்த தமிழ் திரைப்படங்களைப் பார்த்துப் பழக்கப்பட்ட மக்களுக்கு, இத் திரைப்படம், சில காட்சிகளில் மெதுவாக நகர்வது போன்றதொரு தோற்றப்பாட்டினை கொடுக்கும்.
ஆனாலும் தமிழருவி மணியன் அவர்களின் 'பஞ்ச் டயலக்' இல்லாத நிதர்சனமான வார்த்தைகளும், 'பெரியார்' புகழ் சத்தியராஜ், பிதாமகனில் புது அவதாரமெடுத்த சங்கீதா, நாசர், லக்ஷ்மி, 'செந்தமிழன்' சீமான், மற்றும் திருநங்கையாக நடித்தவர் போன்றோர்களது பங்களிப்பு இப்படத்தை தூக்கி நிமிர்த்தியுள்ளது என்று கூறலாம்.
இதன் படத் தொகுப்பாளர் , 'பா' வரிசையில் பல திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு அளித்த இயக்குனர் பீம்சிங் அவர்களின் புதல்வர் திரு.லெனின் அவர்கள். சென்னை திரைப்பட தணிக்கை சபையின் வாள் வெட்டுக்கள் ஆங்காங்கே தெரிந்தாலும், இயலுமானவரை தனது பணியை அவர் திறம்படச் செய்துள்ளார்.
பிராந்திய மேலாதிக்கவாதத்தின் கழுகுப் பார்வையில், இத்திரைப்படமானது தமிழ் மக்களின் சுயநிர்ணயஉரிமைக்கான விடுதலைப் போராட்டம், மற்றும் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் என்பவற்றை ஆதரிப்பதோடு, தமிழ்நாட்டில் ஈழ மக்களுக்கு ஆதரவான மீண்டுமொரு எழுச்சி உருவாகிவிடுமோவென்கிற அச்சம் தென்படுகிறது.
இவை தவிர, இத்திரைப்படத்தில், சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்திலுள்ள, கண்கள் கட்டப்பட்ட தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்லும் காட்சிகள், மீள் உருவாக்கம் செய்து காண்பிக்கப்படுகின்றது. அதில் ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனைக் கலைஜர்களின் பங்களிப்பில் சில குறைபாடுகளை காணக்கூடியதாக இருந்தது.
இப்படத்திற்கு வசனமெழுதிய தமிழருவி மணியன் அவர்கள் குறித்து கட்டாயம் பேச வேண்டும். தனது அனுபவங்களை , ஆளுமையை எந்தவொரு பாத்திரத்தின் மீதும் அவர் திணிக்க முற்படவில்லை.
'என் வயிறு பெரிதாகிவிட்டதால் என்னை பள்ளிக்கூடத்திலிருந்து நிற்பாட்டிவிட்டார்கள்' என்று புனிதவதி கூறும் போதும், புனிதவதியிடம் வம்பு பண்ண சில வாலிபர்கள் முயலும் போது 'நீங்களெல்லாம் ஒரு ஆம்பிளையாடா?' என்று அந்தத் திருநங்கை கொதித்தெழும் போதும், இவளின் கடந்த காலத் துயரங்களைப் புரியாமல் 'பதின்மூன்று வயதில் எவன் கூடப் படுத்தாய்' என்று மிகக் குரூரமாக மோசமான வார்த்தைகளில் ஆச்சி வசைபாடும் போதும், மணியன் அவர்களின் இயல்பான மொழி வழக்கின் ஆளுமை புரிந்தது. 'ஒரு நாய்க்கு இருக்கும் உணர்வுகூட .....அதற்கு இல்லாமல் போச்சே' என்று தனது
தாயைப் [ஆச்சி] பற்றி மகள் நிர்மலா விமர்சனம் செய்கையில், அங்கு உயர்ந்து நிற்கிறார் எங்கள் தமிழருவி.
திருநங்கையரை, நல்ல இதயமுள்ளவர்களாக, மனிதம் போற்றும் மகத்தான பிறவிகளாக, இது போல் எந்தத்திரைப்படமும் நேர்மையாகக் சித்தரித்ததாக நினைவில் இல்லை. இவர்களை இலங்கையில் 'அலி' என்று கூறுவார்கள்.
அரவாணி என்பது தற்போது திருநங்கையாக உயர்வு பெற்றுள்ளது தமிழ்நாட்டில். சமூகத்தால் புறக்கணிக்கப்படும் இவர்களால், ஒடுக்குமுறைக்கு உள்ளான அந்தப் புனிதவதியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் குறித்தான சமூகப் பார்வை, மறுவாசிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்கிற வகையில், இவர்கள் உடனான புனிதவதியின் தொடர்பாடல்களை இப்படத்தில் இணைத்த தோழர் புகழேந்தி அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இன்னும் பல விடயங்கள் குறித்து எழுதலாம், பேசலாம். ஆனால் அதுவே , மணியன் அவர்களின் உரைநடைக்கான பொழிப்புரையாக மாறி விடுமென்பதால் இத்தோடு நிறுத்துவது சாலச் சிறந்தது என எண்ணுகிறேன்.
இனி குறிப்பாக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் குறித்து பேச வேண்டும். திரைப்பட உருவாக்கத்தில் திரைக்குப் பின்னால் நின்று உழைத்த மனிதர்கள் இவர்கள்.
நோர்வேயைச் சேர்ந்த இந்த ஈழத்தமிழர்கள், வணிக நோக்கோடு இப்படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்பதை உறுதி செய்ய ,படத்தின் திரைக்கதையே சாட்சி. திரையரங்கை விட்டு வெளியேறும்போது , என்னைக் கடந்து சென்ற பெண்மணி ஒருவர் கூறிய கருத்து.
''கொஞ்சம் கொஞ்சமா எங்கட சனங்கள் எல்லாத்தையும் மறந்து போகுதுகள். இதைப் பார்த்தாவது திருந்தட்டும். இவ்வளவு காலமும் படம் எண்டு சொல்லி என்னைத்தையோ எங்களுக்கு காட்டி இருக்கிறாங்கள். இதுதான் எங்கட படம்.''
இதயச்சந்திரன்
0 Responses to "உச்சிதனை முகர்ந்தால்" - திரை விமர்சனம்