தமிழகத் தலைநகர் சென்னையில் வருடந் தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நேற்று ஆரம்பித்துள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினால் இக் கண்காட்சி நடாத்தப்படுகிறது. 35 வருடமாக இந்த வருடம் நடைபெறும் கண்காட்சியில், 682 அரங்குகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்களின் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, பிரென்ச் மொழி வெளியீட்டுப் புத்தகங்கள் 10% விலைக்கழிவுடன் விற்கப்படுகின்றன.
பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள செயின்ட் ஜோர்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் இக் கண்காட்சி வார நாட்களில் தினமும் மாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நிறைவடைகிறது. சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் காலை 11 மணிக்கு துவங்கி இரவு 9 மணிக்கு நிறைவடையும் எனத் அறியப்படுகிறது.
பல்வேறு புத்தகங்கள் வெளியீடும் நடைபெறும் சென்னை புத்தக கண்காட்சியில், 'அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு' எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு வரும் 8ந் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 36 பக்கங்களுடனும் ,75 முக்கிய விளக்க படங்களுடனும், கடித வடிவில் ஈழ நியாயத்தை எவரும் வாசித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகத்தை, 'என்ன செய்யலாம் இதற்காக?' எனும் ஈழப்படுகொலை தொடர்பான ஆவணப்படங்களுடன் கூடிய நூலை வெளியிட்ட பென்னி குயிக் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
மேற்படி கண்காட்சி அரங்கில், பூவுலகின் நண்பர்களது கடை எண்.71ல் 8ந் தேதி பிற்பகல் 3.00 மணியளவில், நடைபெறும் வெளியீட்டு வைபவத்தில், எழுத்தாளர் எஸ்.இராம கிருஷ்ணன், கவிஞர் காசி ஆனந்தன், இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் வ.கௌதமன் , எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், மற்றும் பலர் கலந்து கொள்வதாக வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Responses to சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 'அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு'!