Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதற்காக முதல்வர் ஜெயலலிதா ரூ 350 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இலவச

வேட்டி, சேலை வழங்குவது பொங்கல் பண்டிகையின்போது தொடங்கப்பட்டு தமிழ்ப் புத்தாண்டுக்குள் அனைவருக்கும் வழங்கி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் தயாரிப்பில் தற்போதுள்ள நிலை மற்றும் விநியோகம் குறித்து முதல்வர் ஜெயலலிதா 5.1.2012 அன்று ஆய்வு மேற்கொண்டார்.1981ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்த கைத்தறி துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு, நெசவாளர்களுக்கு தொடர்வேலைவாய்ப்பு வழங்கப்படும் நோக்கத்துடனும், கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல்பண்டிகையின் போது புத்தாடைகளை இலவசமாக வழங்கும் நோக்கத்துடனும், அகில இந்தியாவிற்கும் முன்னோடி சமூக நல திட்டமான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது.

இத்திட்டம், தமிழக அரசினால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தரமான வேட்டி சேலைகளை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும்என்ற உயரிய நோக்கத்துடன் முதன் முறையாக பருத்தி நூலுடன் பாலியெஸ்டர் நூல் கலந்து வேட்டிகள் மற்றும் சேலைகள் உற்பத்தி செய்து வழங்க முதல்வர் ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2003ஆம் ஆண்டு ஆணையிட்டார். அதன்படியே வேட்டி, சேலைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தின் கீழ் தேவைப்படும் 170.84 இலட்சம் சேலைகள் மற்றும் 169.75 இலட்சம் வேட்டிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்கள்.

அதன்படி தமிழகத்திலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் மூலமே இந்த வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.பொங்கல்-2012 விலையில்லா வேட்டி சேலை திட்டத்திற்காக நடப்பு ஆண்டில் 256 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே ஆணை வழங்கியுள்ளார். இத்திட்டத்திற்காக மேலும் தேவைப்படும் 94 கோடி ரூபாயை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா தற்போது உத்தரவிட்டுள்ளார்.

ஆக மொத்தம் இத்திட்டத்திற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலைகளுக்கான நெசவு கூலியில் 10 விழுக்காடுஉயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா 15.9.2011 அன்று ஆணையிட்டிருந்தார்.

மேலும், இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி, சேலைகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூலி உயர்வினை கனிவுடன் பரிசீலனை செய்து வேட்டி மற்றும் சேலை ரகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நெசவு கூலியினை வேட்டி ஒன்றுக்கு ரூ. 16/-லிருந்து ரூ. 18.40 ஆகவும், சேலை ஒன்றுக்கு ரூ. 28.16/- லிருந்து ரூ. 31.68/-ஆகவும் உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 01.03.2011 முதல் 15.05.2011 முடிய தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபடியாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு 22.09.2011 முதல் 21.10.2011 முடிய தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபடியாலும், நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதிலும், இறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.

இதனால் தேவையான அளவு வேட்டி, சேலைகள் நெய்வதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும். வேட்டி மற்றும் சேலை உற்பத்தி தொடர்ந்து முனைப்புடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் விநியோகம் பொங்கல் பண்டிகையின் போது தொடங்கப்பட்டு, வரும் தமிழ் புத்தாண்டுக்குள் தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கி முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

0 Responses to பொங்கலன்று பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடக்கம்: ரூ 350 கோடி ஒதுக்கீடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com