திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,
’’புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை தவிர்த்த மற்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பொங்கலை கொண்டாட தயாராகி வருகிறார்கள். புதுவை போர் நடந்த பகுதி போல் காட்சி தருகிறது. புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்ட சேதங்கள் இதுவரை சரியாக மதிப்பிடப்படவில்லை. எந்தவிதமான நிவாரணம் வழங்குவது எனவும் உறுதி செய்யப்படவில்லை.
தொண்டு நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை வைத்து ஆய்வு செய்து அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறேன்.
முந்திரி தோப்பு பகுதிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். மற்ற கட்சிகளும் வலியுறுத்தின. ஆனால் 3 ஆயிரத்து 200 ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளனர். இந்த தொகை சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தக்கூட போதாது.
தமிழக அரசு நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.5 ஆயிரத்து 600 கோடி வழங்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஆனால் தமிழகத்திற்கு ரூ.500 கோடியும், புதுவைக்கு ரூ.125 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை மந்திரி ப. சிதம்பரம் மற்றும் மத்திய மந்திரி நாராயணசாமி ஆகியோர் பேரழிவை பார்த்துவிட்டு உரிய நிவாரணத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தர வில்லை. புயல் பாதித்த இடங்களில் மின் இணைப்பு பொங்கலுக்குள் வழங்குவதாக கூறியுள்ளனர். கொடுத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் முடியாது என்று தெரிகிறது.
தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். ராணுவம் அல்லது துணை ராணுவத்தை கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்ய வேண்டும். நிவாரண தொகைகளை மதுக்கடைக்கு கொண்டு சென்று மக்கள் செலவிடும் நிலை ஏற்படலாம். எனவே நிவாரணம் கொடுக்கும் மாவட்டங்களில் மதுக்கடைகளை மூடிவிட வேண்டும். பொங்கல் பண்டிகையையொட்டி போகி முதல் கரிநாள் வரை 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்.
புத்தாண்டு பிறந்தால் புதிய நன்மைகள் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். சென்னையில் 9 நாளில் 9 கொலைகள் நடந்துள்ளன. திண்டுக்கல்லில் நேற்று ஒரு கொலை நடந்துள்ளது. 6 மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். திறமையான அதிகாரிகளை வைத்து சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும். வரலாற்று படியும், தமிழ் அறிஞர்களின் கூத்து படியும் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்க வேண்டும்.
தேனியில் பென்னிகுக் சிலையும், மணிமண்டபமும் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை பாராட்டுகிறோம்’’ என்று கூறினார்.
0 Responses to பொங்கலையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ்