சமூக தொண்டு செய்கிறேன், கிராமப்புற வளர்ச்சிக்கு பண உதவி வழங்குகிறேன் என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடந்த ஓராண்டில் மட்டும் ரூ 10 ஆயிரம் கோடி நிதியாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெற்று இருப்பதாக உள்துறை அமைச்சசக செயலர் ஆர். கே., சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். இதில் கூடுதல் அம்சம் என்னவென்றால் இந்தியாவுக்கு வந்த நிதியில் தமிழகம் நிதி பெறுவதில் 2 வது இடத்தில் (ரூ. ஆயிரத்து 633 கோடியே 31 லட்சம்) பெற்று இருக்கிறது. இந்த நிதியை முறைகேடாக பயன்படுத்திய 12 நிறுவனங்கள் குறித்து தகவல் கிடைத்து வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும் சிங்மேலும் தெரிவித்துள்ளளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள என்.ஜி. ஓ.க்கள் (அரசு சாரா அமைப்புகள்) தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ரகசிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் படி மொத்தம் 21 ஆயிரத்து 508 என்.ஜி.ஓ.க்கள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று வந்துள்ளன என தெரிய வருகிறது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து தான் அதிகம் நிதி வந்துள்ளது. நிதிகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் ,சமூக சேவைக்கு பயன்படுத்தபடுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 12 என்.ஜி.ஓ.க்கள் வெளிநாட்டு நிதியினை முறைகேடாக பயன்படுத்தி வந்துள்ளன. கடந்த 2009-2010-ம் ஆண்டுகளில் என்.ஜி.ஓ.க்கள் மொத்தம் ரூ. 10 ஆயிரத்து 337 கோடி ரூபாய் அளவுக்கு நிதி பெறப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 2 வது இடம் : இந்த நிதியில் டில்லி பிரதேசம் தான் அதிகபட்சமாக ரூ. ஆயிரத்து 815 கோடியே 91 லட்சம் பெற்று முதலிடத்திலும், ஆயிரத்து 663 கோடியே 31 லட்சம் பெற்று தமிழகம் 2 வது இடத்திலும் இருக்கிறது. ஆயிரத்து 324 கோடியே 84 லட்சம் ஆந்திர மாநில நிறுவனங்கள் பெற்றுள்ளன. தமிழகத்தில் 3 ஆயிரத்து 218 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
மாவட்ட வாரியாக பார்க்கும் போது இந்தியாவில் சென்னை (ரூ. 871 கோடியே 60 லட்சம்) முதலிடத்திலும், பெங்களூரூ (ரூ. 702 கோடியே 43 லட்சம்) 2 வது இடத்திலும், மும்பை (ரூ. 606 கோடியே 63 லட்சம்) 3 வது இடத்திலும் இருக்கின்றன.
கூடங்குளம் விவகாரத்தில் பங்கு? கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து சதி இருப்பதாக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கூறிய நிலையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் ஜெர்மானியர் ஒருவர் வெளிநாட்டு நிதியை கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு வழங்கினார் என்றும் அவரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதும் நினைவுகூறத்தக்கது.



0 Responses to இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு நிதி 10ஆயிரம் கோடி