ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு குழுவும், டப்ளின் மக்கள் நீதி மன்றத்தின் தீர்வும், சிறிலங்காவில் மனித நேயத்திற்கு எதிரான குற்றம் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டிருகிறது என்று கூறியிருக்கும் நிலையில்..
இந்த அமைப்புகளின் தீர்வை மறைத்து, சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் முழுமை அற்ற தீர்வை, அதில் குறிப்பிடப்பட்ட சில பரிந்துரைகளை நடைமுறை படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, அமெரிக்க கொண்டு வந்த பிரேரணை ஜெனீவாவில் வெற்றிபெற்றது என்ற அறிவிப்பும் அமெரிக்காவை பாராட்டியும், அதற்கு நன்றி கூறியும் வெளிவரும் பல செய்திகளை நாம் பார்க்கின்றோம்.
இதனால் ஈழத்தமிழர்களுக்கு நன்மைகள் ஒன்றுமே இல்லை. சர்வதேச இராஜதந்திர அரசியலில் சர்வதேச நலன்களில் நாம் பாவிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று தான் கூற வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமர்வில், சிறிலங்கா அரசு மனிதவுரிமையை மீறி நடந்து கொண்டிருக்கிறது என்ற அடிப்படையில், இறைமை உள்ள நாடு, ஐ.நா சபையின் அங்கத்துவ நாடு, ஐ.நா மனிதவுரிமை அமைப்பின் அங்கத்துவ நாடாகிய சிறிலங்காவை இந்த அமைப்புகளின் யாப்பை மதித்து நடக்கும் படி பணிக்கும் பிரேரணை தான் ஜெனிவாவில் வாக்களிப்பிற்கு விடப்பட்டது.
இதில் சிறிலங்கா அரசு இழைத்த போர் குற்றம். மனித நேயத்திற்கு எதிரான குற்றமும், தமிழீழ மக்கள் மேல் 64 வருடங்களாக சிறிலங்கா அரசு இழைத்த இனப்படுகொலையும் மறைக்கப்பட்டுவிட்டது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற, நடைபெற்று கொண்டிருக்கும் மனிதவுரிமை மீறல்கள் மறுக்கப்பட்டோ, மறைக்கப்பட்டோ இருக்கிறது.
சிறிலங்கா, மனிதவுரிமைகளை மீறி இருக்கிறது என்று சர்வதேச நாடுகளின் மனிதவுரிமையை பாதுகாக்கும் சபையில் முன்மொழியப்பட்டு இருப்பது எமக்கு சாதகமான விடயம் என்றாலும், இந்த பிரேரணை முழுவதும் எமது உரிமையை பாதுகாக்கப்பதாக இல்லை. இதனால் தமிழ் மக்களுக்கும் தமிழ்ம க்களின் கட்டமைப்புகளும் எதிர் நோக்கி இருக்கும் செயல்பாடுகள் மிக அதிகம்.
இன்று எமக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை நாம் சரியாக பாவிக்க வேண்டும். மனிதவுரிமை மீறப்பட்டு இருக்கிறது என்று ஏற்று கொள்ளும் நாடுகளிடம் தமிழர்களின் நிரந்தர பாதுகாப்பிற்கான வழிமுறைகளை வலியுறுத்த வேண்டும்.
அத்துடன் தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படையான தாயகம், தேசியம், தன்னாட்சி என்று தமிழீழ மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வட்டுகோட்டை தீர்மானத்தையும் அதற்கு வழிவகுத்த தந்தை செல்வா மற்றும் தமிழர்களின் விடுதலையின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்பட்ட தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போராட்டத்தையும் முற்றாக அழிப்பதற்கான முதல் படியாக கூட நாம் இந்த பிரேரணையை பார்க்கலாம். ஆகவே ஈழத் தமிழர்கள் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
முள்ளி வாய்காலில் நடைபெற்ற போர்குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் அதற்கும் மேலாக சிறிலங்கா இராணுவம் மற்றும் அரசியல்வாதிகள், தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப் படுகொலையின் உச்சகட்ட மாதம் மே ஆகும்.
தமிழர் மண்ணை காக்க, தமிழர் உரிமையை காக்க கடைசி நிமிடம் வரை நின்று தம் உயிர்களை தியாகம் செய்தவர்கள் நினைவாக இந்த மூன்றாவது வலி நிறைந்த ஆண்டுகளை நினைவுபடுத்தி, பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையானது, பிரான்ஸ் நாட்டு அரசியல் கட்சிகளிடம் சிறிலங்காவில் நடைபெற்ற படுகொலையை எடுத்துக் கூறவுள்ளது.
அத்துடன், பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுடன் மற்றும் சகல தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து பிரான்ஸ் உலகத்தின் அமைதி நிகழ உருவாக்கப்பட்ட Ecole Militaire இல் அமைந்துள்ள, அமைதிக்கான சுவரில்(Mur de la Paix) இருந்து Trocadero வில் அமைந்துள்ள மனிதவுரிமை சதுக்கம் வரை ஊர்வலமாக சென்று நினைவு நிகழ்வுகளை நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த வலி நிறைந்த மாதத்தில் சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக செய்யப்பட்ட இனப்படுகொலை சகலருக்கும் விளக்கும் வண்ணம் கலந்துரையாடல்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மே மாதம் 18 ஆம் திகதி காலை மனிதவுரிமை, ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் தமிழீழ மக்களின் தியாகங்களை வலியுறுத்துவதன் முகமாகவும், அந்த போரில் சிந்தப்பட்ட இரத்தத்தை நினைவில் கொண்டு, உலக மனிதநேயத்தின் பாதுகாப்பிற்காகவும் பிரான்சு தமிழ் இளையோர், இரத்ததானம் செய்யும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜெனிவாவில் நடைபெற்றது சர்வதேசம் தமது நலன்களை பாதுகாக்க கொண்டுவந்த பிரேரணை, அதை வழிதவறி போக விடாமல் தமிழர்களின் நிரந்தர விடுதலைக்காக மாற்றி அமைக்க நாம் சகலரும் அரசியல் வழிகளிலும் மக்கள் போராட்டங்கள் மூலமாக உலகத்திற்கு சொல்ல வேண்டிய காலம்.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கும், 45ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளுக்கும், இன்றுவரை காணாமல் போனவர்களாக காட்டப்பட்டு இருக்கும் 146, 679 மக்களுக்கு நாம் தேடி கொடுக்கும் நீதி, தமிழீழ தாயகத்தை அடைவதே!
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.
0 Responses to முள்ளிவாய்க்கால் மே 18 உம் ஜெனிவா பிரேரணையும்