Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டமைக்கு இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக வாக்களித்தமை மிகவும் முக்கிய காரணமெனவும் இந்தியா தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டமையாலேயே மேலும் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்ததாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை விவகாரங்கள் சர்வதேச மயமாக்கலுக்கு உட்படுத்தப்படுவதனை அரசு வன்மையாகக் கண்டிப்பதாகவும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப் போவதில்லையெனவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான அமெரிக்கா பிரேரணை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு வெளிவிவகார அமைச்சில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றபோது கருத்துத் தெரிவிக்கையிலேயே பேராசிரியர் பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மஹிந்த சமரசிங்க, டக்ளஸ் தேவானந்தா, நிமல் ஸ்ரீ பால டி சில்வா, அனுரபிரியதர்ஷன யாப்பா, ரிசாத் பதியுதீன் ஆகிய அமைச்சர்களும் கலந்துகொண்டிருந்த இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேராசிரியர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

அமெரிக்க தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக சர்வதேச நாடுகளை அணிதிரட்டுவதற்காக அனைத்து அமைச்சர்களும் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளோம்.

தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டே நாம் இவ்வாறு செயற்பட்டிருந்தோம். ஆனாலும் அமெரிக்க பிரேரணை ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் கூட பல்வேறு நாடுகள் எம்முடன் தொடர்புகொண்டு எமக்கு பாராட்டுக்களையே தெரிவித்திருந்தன.அமெரிக்க பிரேரணையானது எமது நாட்டின் அடிப்படை நலனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஒன்றாகும்.

இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை. மோதல்களின் போதான மீறல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக அரசினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சிறந்த முறையில் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட அமெரிக்க ஆதரவு பிரேரணைக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. அதேவேளை 8 நாடுகள் வாக்களிக்கவில்லை. அந்த அடிப்படையில் வாக்களிக்காத எட்டு நாடுகளும் அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாதென்றே கூறியிருந்தன. அதனால், அந்த 8 நாடுகளும் அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டினையே கொண்டிருந்தனர்.
அந்த அடிப்படையில் 24 நாடுகள்அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் 23 நாடுகள் எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தன. அதனால் ஒரு வாக்கு வித்தியாசத்திலேயே அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

அரபு நாடுகள் சில ஆபிரிக்க நாடுகள் எமக்கு முழுமையான ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தன.
இவ்வாறாக ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் அரசு ஆர்வமாக உள்ளது.
ஆனாலும் இலங்கை விவகாரங்கள் சர்வதேச மயப்படுத்தப்படுவதனை நாம் விரும்பவில்லை. அதேவேளை எமது வெளிநாட்டுக் கொள்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையுடனும் நாம் சுமுகமான உறவினையே கொண்டிருக்கின்றோம்.

இப்பிரேரணை ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு அடிப்படையில் மாறுபட்டிருந்தது. இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கினால் வாக்கெடுப்பிற்கு இருநாடுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கை இராஜதந்திர மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்திய பிரதமரின் அறிக்கை மிகவும் உயர்மட்ட அறிக்கையாகும்.

இதனால் இந்த வாக்கெடுப்பில் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு முற்றுமுழுதாக மாற்றமடைந்தது. இந்தியா தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ளாவிடில் வாக்கெடுப்பின் முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கும்.

இந்தியாவின் நிலைப்பாட்டினால் நாம் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தோம். இந்தியஇலங்கை உறவு பாரம்பரியமான வலுவான உறவு அது எதிர்காலத்திலும தொடரும் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இலங்கைக்கு நீண்ட காலமாக தொடர்புகள் பேணப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இலங்கையைச் சேர்ந்த 5000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். அத்துடன் பல்வேறு வர்த்தகத் தொடர்புகள் பேணப்பட்டுவருகின்றன.இவ்வாறான நிலையில் இலங்கையின் தேசிய நலனுக்கு எதிரான தீர்மானத்தினை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது.

இருந்தாலும் நிறைவேற்றப்பட்டிருக்கும் இத் தீர்மானத்தின் மூலமாக இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையினை விதிக்க முடியாது. ஐ.நா. பாதுகாப்பு சபை மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலமே பொருளாதாரத் தடை போன்ற தடைகளை ஒரு நாட்டுக்கு எதிராக விதிக்க முடியும். இவ்வாறான சூழ்நிலையில் கூட அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டனுடனான சந்திப்புக்கு திகதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக அவருடன் கலந்துரையாடப்படும் எனத் தெரிவித்தார்.

0 Responses to இந்தியாவே முக்கிய காரணம் அமைச்சர் பீரிஸ் மீண்டும் குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com