வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் கணவன்மாரை இழந்து விதவைகளாக வாழும் பெண்களின் மறு வாழ்வுக்காக அரசாங்கம் எதுவிதமான திட்டங்களையும் முன்னெடுக்காது அப்பெண்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஐக்கிய லக் வனிதா அமைப்பின் தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சாந்தினி கோங்காகே ஏற்பாடு செய்திருந்த வைபவம் நேற்று வியாழக்கிழமை ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது கணவன்மாரை இழந்த பெரும்பாலான பெண்கள் அநாதரவாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பிள்ளைகளின் கல்வி மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் நெருக்கடியில் வாழ்கின்றனர். இவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உதவிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கத்திடம் அதற்கான திட்டம் இல்லை. பிரபல ஊடகவியலாளர் எக்னெலியகொடவின் மனைவி கணவனைக் காணாது அநாதரவாகியுள்ளார். சிலாபத்தில் அன்ரனியை இழந்த குடும்பம் நெருக்கடியில் உள்ளது.
கட்டுநாயக்காவில் கொல்லப்பட்ட இளைஞனின் தாய் கஷ்டத்தில் வாழ்கிறார். இவ்வாறு தென் பகுதியிலும் பெண்கள் சொல்லொண்ணாத் துயரங்களை சுமந்து கொண்டு வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவ ஐக்கிய லக் வனிதா அமைப்பு நடவடிக்கை எடுத்தமை நல்லதாகும்.
அதே வேளை எமது நாட்டில் பெண்களின் அரசியல் பிரவேசம் குறைவாகவே உள்ளது. ஜே.ஆர்., பிரேமதாச ஆட்சிக் காலங்களில் மகளிர் விவகார அமைச்சு உருவாக்கப்பட்டு, பெண்களை முன்னுரிமைப்படுத்தும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அன்றைய காலக்கட்டங்களில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதே எமது இலக்காக இருந்தது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியாளர்கள் இதனை ஊக்குவிக்கவில்லை.
அடையாளத்திற்காக ஸ்ரீமாவோ பண்டாரநாயக உலகின் முதல் பிரதமரானார். அதே போன்று சத்திரிகாவும் ஜனாதிபதியானார்.ஆனால் பரந்துபட்ட ரீதியில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு பங்களிப்பு செய்யவில்லை. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் பெருந்தோட்டத் துறை சார்ந்த பெண்களின் உள்ளீர்ப்பை அதிகரிக்க வேண்டும்.
அதே வேளை லக் வனிதா முன்னணியில் தமிழ், முஸ்லிம் பெண்களின் அங்கத்துவம் குறைவாக உள்ளது. எதிர்காலத்தில் இக்குறைபாடு நீக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் ஐக்கிய லக் வனிதா முன்னணி பரந்து பட்டளவில் உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கிராமங்களுக்கு சென்று பெண்களை எமது அமைப்பாளர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் சாந்தினி கோங்காகே.
பெண்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது போராட்டத்தை யார் காட்டிக் கொடுக்கின்றார்களோ அவர்களை வரலாற்றின் குப்பைக் கூடையில் வீசியெறிய வேண்டும் என இங்கு உரையாற்றிய மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய லக் வனிதா முன்னணியின் தலைவியுமான சாந்தினி கோங்காகே தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஐ.தே.கட்சி அரசியலில் தன்னை நீண்ட காலம் அர்ப்பணித்த மக்கள் சேவை செய்த அமைச்சர் மற்றும் எம்.பி பதவிகள் வகித்த அமரா பியசீலி ரத்னாயகாவை எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டி கௌரவித்தார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கணவனை இழந்த பெண் அலுவஞ்சி மற்றும் காணாமல் போன எக்னெலிகொடவின் மனைவிக்கும் நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் எம்பிக்களான திஸ்ஸ அத்தநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோசப் மைக்கல் பெரேரே ,காமினி ஜயவிக்ரம பெரேரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் கணவன்மாரை இழந்த பெண்கள் நடுத்தெருவில்: ரணில்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
09 March 2012
0 Responses to வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் கணவன்மாரை இழந்த பெண்கள் நடுத்தெருவில்: ரணில்