ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று வாஷிங்டனில் நடைபெறவுள்ளது.
இதற்காக, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வாஷிங்டனுக்குப் புறப்படவுள்ளது.
ஜெனிவா மாநாட்டில் இலங்கை விடயம் குறித்தான பிரேரணையைத் தாக்கல் செய்வதற்கு முன்னர் கொழும்புடன் பேச்சு நடத்துவதற்கு வாஷிங்டன் விரும்பியிருந்தது. வெளிவிவகார அமைச்சர் பீரிஸுக்குக் கடிதம் எழுதியிருந்த ஹிலாரி அம்மையார் அதனூடாகவே அழைப்பு விடுத்திருந்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, இலங்கை அரசின் பொறுப்புக்கூறும் விடயம் உட்பட முக்கிய விடயங்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கு அமெரிக்கா வருமாறு பீரிஸுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்த ஹிலாரி அம்மையார், அதற்கான பதிலை தான் எதிர்பார்க்கின்றார் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அந்தக் கடிதத்திற்கு பதில் எதுவும் அனுப்பாத வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், ஹிலாரியின் அழைப்பை சாதகமான முறையில் பரிசீலித்துப் பார்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி சுவிஸ் தலைநகர் ஜெனிவாவில் ஆரம்பமானது.
எனவே ஜெனிவா விடயத்தில் அமைச்சர் பீரிஸ் தீவிரமாக இருந்தார். அதனால் ஜெனிவா மாநாடு முடிவடையும் வரை அவருக்கு அமெரிக்க அமைச்சரின் கடிதத்திற்குப் பதிலளிக்க முடியாமல் போனது.
அமெரிக்கா வலிந்துவந்து வழங்கிய சந்தர்ப்பத்தைப் புறக்கணிக்கும் போக்கில் செயற்பட்ட கொழும்பு அரசு, வாஷிங்டனின் பிரேரணையைத் தோற்கடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. எனினும், இறுதிக்கட்டத்தில் இலங்கை எதிர்பார்த்த முடிவு கிட்டவில்லை. அமெரிக்காவின் பிரேரணை 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, அதிர்ச்சியடைந்துள்ள இலங்கை அரசு, வெள்ளைமாளிகை விடுத்த அழைப்பை அவசர அவசரமாக மீள்பரிசீலனை செய்து அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேசும் நிலைப்பாட்டையும் எடுத்தது.
இதற்கமையவே ஜெனிவாத் தீர்மானம் குறித்தும் இலங்கை அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் முக்கியமான பதில்களுடன் பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக்குழு வாஷிங்டனுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் செல்கிறது.
குறிப்பாக இலங்கைத் தேசத்தின் இறையாண்மை, சுயாதீனத்தன்மை ஆகியவற்றைக் கருத்திக்கொள்ளாமல் ஜெனிவாவில் அமெரிக்கா பிரேரணையைத் தாக்கல் செய்து அதனை நிறைவேற்றிக்கொண்டமை அநீதியான செயல் என அமெரிக்காவிடம் சுட்டிக்காட்டவுள்ள பீரிஸ் அதற்கான நியாயப்பாடுகளையும் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்தபடியாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகளை இலங்கை அரசு எவ்வாறு ஒருவருட காலத்திற்குள் அமுல்படுத்தும் என்பது தொடர்பிலான விசேட செயற்றிட்டம் குறித்து தெளிவுபடுத்தியுள்ள பீரிஸ், மேலும் பல முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடுவார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Responses to அடுத்த வாரம் பீரிஸ் அமெரிக்கா பயணம்?