பயங்கரவாத செயல்களை செய்பவர்கள் தமது செயல்களில் வெற்றி பெறுவதைவிட தமது எதிரணியினருக்கு வெற்றியை கொடுப்பதில் என்றும் முன்னணி வகித்து வருகிறார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் ஜோர்ஜ் புஸ்சின் வெற்றிக்கு வழிவகுத்தது, இப்போது பின்லேடன் கொலை ஒபாமாவை வெற்றிப்படியில் நிறுத்தி வைத்திருக்கிறது.
அதுபோல தேர்தல் கருத்துக்கணிப்பில் பின்னணியில் நிற்கும் பிரான்சிய அதிபர் நிக்கொலாய் ஸார்கோஸியும் பிரான்சில் நடைபெற்ற அல் குவைடா பயங்கரவாத செயலை தனக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். பிரான்சில் நடந்து முடிந்த எழு பேர் படுகொலைகளைக் கேள்விப்பட்டதும் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு பயங்கரவாதியை பிடிப்பதில் கவனம் செலுத்திய அதிபர், இப்போது பிரான்சில் நடைபெற்ற படுகொலைகள் அமெரிக்காவில் நடைபெற்ற 2001 செப் 11 தாக்குதல் போன்றதோர் நிகழ்வுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வியாழன் கொல்லப்பட்ட 23 வயது பயங்கரவாத நபர் முகமட் மராச்சின் இறுதிக்கிரியைகள் இஸ்லாமிய முறைப்படி தென் மேற்கு பிரான்சில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெறும் 15 பேர் மட்டும் கலந்து கொண்டார்கள். இறுதிக்கிரியைகள் நடந்து கொண்டிருக்க தெற்கு பிரான்சில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டைகளை நடாத்தி 20 இஸ்லாமிய தீவிரப்போக்குடையவர்களை கைது செய்தார்கள். ஏற்கெனவே முகமட் மராச்சின் சகோதரர் கைது செய்யப்பட்டு படுகொலைகளுக்கு உதவினாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறார். இவரிடம் நடைபெறும் விசாரணைகளை தொடர்ந்து, விரைவான கைதுகள் நடக்கின்றன.
பயங்கரவாத அமைப்பு ஒன்றுடன் தொடர்புபட்டவர்களுடன் மற்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தொடர்பு வைத்திருந்தால், எப்போதாவது குற்றச் செயல்கள் நடைபெறும்போது அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர், ஆதரவாளர்களை அது காவுகொள்ளும். இதற்கு பல உதாரணங்கள் அமெரிக்காவில் செப் 11 ற்கு பிறகு நடைபெற்ற கைதுகளில் உள்ளன. இப்போது பிரான்சிலும் அதுபோன்ற வேட்டை ஆரம்பமாகியுள்ளது. பிரான்சிய போலீசார் எடுத்துள்ள நடவடிக்கை பிரான்சில் வரக்கூடிய ஆபத்துக்களை தடுக்கும் என்று கருதப்படுகிறது. மாறாக தற்போதய பிரான்சிய அதிபர் ஸார்கோஸிக்கு மேலும் செல்வாக்கை அதிகரிக்க உதவும் என்பதையும் மறுக்க முடியாது.
மேலும் இன்று வெளியான நியூயோர்க் டைம்ஸ்சில் பின்லேடனின் 30 வயது இளம் மனைவி அமலாமெல் அப்டுல் பாத்தின் வாக்கு மூலம் வெளியாகியுள்ளது. ஓஸாமா பின்லேடன் சுமார் ஒன்பது வருடங்களாக பாகிஸ்தானிலேயே இருந்துள்ளார். அங்கு வாழ்வதற்கு அவர் ஐந்து வீடுகளை பாவித்துள்ளார், அக்காலத்தே அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்துள்ளன. இரண்டு பிள்ளைகள் சாதாரண பொது வைத்தியசாலையில் பிறந்துள்ளதாகவும் அவர் தனது வாக்கு மூலத்தில் பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்க மரைன் படையின் அதிரடித் தாக்குதலில் 54 வயதுடைய பின்லேடன் உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டது தெரிந்ததே. மேலும் பின்லேடன் பல மனைவிகளை மண முடித்த காரணத்தால் அவர்களுக்குள் ஏற்பட்ட பொறாமையே பின்லேடன் மரணத்திற்கு காரணம் என்று கருதப்படுகிறது. இளம் மனைவி மீதுபொறாமை கொண்ட பின்லேடனின் மூத்த மனைவியே கணவனுக்கு ஆப்பு வைத்ததாக முந்தைய செய்திகள் தெரிவித்திருந்தன.
அன்று நடந்தது ஆவி துடித்தது இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது.. ஸார்கோஸி...
பதிந்தவர்:
தம்பியன்
30 March 2012
0 Responses to அன்று நடந்தது ஆவி துடித்தது இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது.. ஸார்கோஸி...