Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென உலக மூத்த தலைவர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.மீண்டும் இப்படியான ஒரு தீர்மானம் வராமல் தவிர்த்துக் கொள்ளுமாறும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் மேலும் அழுத்தங்கள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தலைமையிலான இந்தக் குழு இலங்கை அரசிடம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை அதிகப்படியான வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.இலங்கை அரசு நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதை குறித்த பிரேரணை வலியுறுத்தியிருந்தது. இதற்கமைய குறித்த பிரேரணைக்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நெல்சன் மண்டேலா தலைமை யிலான உலக மூத்த தலைவர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முன்னாள் உலகத் தலைவர்கள் வரவேற்றுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மாரி ரொபின்சன் பீ.பீ.சி. செய்தி சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானம் இலங்கைக்கு எதிரானதாகக் கருதப்பட முடியாது என அந்த அமைப்பின் உறுப்பினரும், அயர்லாந்தின் முதல் பெண் ஜனாதிபதியும் ,ஐ.நா மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளருமான மேரி றொபின்சன் தெரிவித்துள்ளார். உரிய நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் மேற்குலக நாடுகளினால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை எனவும் தீர்மானத்துக்கு இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகளும் ஆதரவளித்துள்ளன எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மீண்டும் ஒரு தடவை இவ்வாறு தீர்மானம் நிறைவேறாத வகையில் நடந்து கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ,மனித உரிமை மேம்பாடு மற்றும் குற்றச் செயல்களுக்குத் தண்டனை விதித்தல் ஆகியவற்றின் மூலம் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

உலக மூத்த தலைவர்கள் அமைப்பில் ஐ.நா முன்னாள் பொதுச் செயலர் கோபி அனான்,தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, தென்னாபிரிக்கப் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு,அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர்,இந்திய மனித உரிமைகள் செயற்பாட்டாளர் எலா பாத்,நோர்வேயின் முன்னாள் பெண் பிரதமர் குறோ புறொண்ட்லான்ட் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to உலகின் மூத்த தலைவர்கள் இலங்கைக்கு எச்சரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com