அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க ஆதரவைத் திரட்டி வந்த இலங்கை, தங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்றதுமே, இந்தியாவிடம் கடைசி நேரத்தில் ஆதரவு கேட்டு கெஞ்சிப் பார்த்தது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏதாவது செய்யுங்கள் என்று ராஜபக்சேவே கேட்டுக் கொண்டாராம். ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே இலங்கைக்கு தங்களது ஆதரவை முன்பு தெரிவித்திருந்தன. ஆனால் சீனா தயவு இருந்ததால் எப்படியும் தீர்மானம் தோற்கடிக்கப்படும், இந்தியாவும் நமக்கே ஆதரவு தரும் என்று நம்பிய இலங்கைக்கு, ஐரோப்பிய யூனியன் மொத்தமாக எதிர்ப்பு நிலை எடுத்தது பெரும் பீதியைக் கிளப்பியது.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் மொத்தம் 46 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில் ஒரு தீர்மானம் நிறைவேற 24 உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. அமெரிக்காவின் தீர்மானத்துக்கு கிட்டத்தட்ட 24 நாடுகள் -இந்தியா உள்பட – ஆதரவு இருப்பது ராஜபக்சேவுக்கு தெரிந்துவிட்டதால் கடைசி நேர முயற்சியில் தீவிரமாக இறங்கிப் பார்த்து தோற்றார்.
இன்னொரு பக்கம், இலங்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ் ஒரு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதை பெரும்பாலான நாடுகளும் புறக்கணித்து விட்டன. இலங்கை போடும் விருந்தை சுவைப்பதற்காக மேற்கண்ட சில நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே ஆவலோடு வந்திருந்தனராம். இதனால் விருந்தை கசப்புணர்வுடன் இலங்கைத் தரப்பு முடித்ததாம்.
இதற்கிடையே, கடைசி நேர முயற்சியாக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை ராஜபக்சே தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியாவின் நிலையை மாற்றிக் கொள்ளுமாறு கெஞ்சி கேட்டுக் கொண்டாராம்.
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எடுத்துச் சொல்லி இந்தியாவின் நிலையை மாற்ற வேண்டும் என்று அவர் பிரணாப்பிடம் கோரினாராம். ஏற்கனவே நேற்று கிருஷ்ணாவை, சந்தித்த பெரீஸ் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். அதற்கு கிருஷ்ணா, கை விரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தே பிரணாப்பைத் தொடர்பு கொண்டார் ராஜபக்சே என்கிறார்கள்.
நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், சோனியா காந்தியிடமும் கூட ராஜபக்சே பேசி ஆதரவு கோரலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று சொல்லி விட்டதால் இந்திய அரசு தனது நிலையை கடைசிவரை மாற்றிக் கொள்ளவில்லை.
0 Responses to இந்தியாவிடம் கெஞ்சி தோற்ற ‘ராஜபக்சே அண்ட் கோ’!