தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து விவாதிக்க, அனைத்து மாநில முதல்வர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
அறிவுறுத்தல்:முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம்:தேசிய பயங்கரவாதம் தடுப்பு மையம் அமைக்கப் படுவதில் உள்ள சில ஷரத்துகளுக்கு, என் கடும் ஆட்சேபனைகளை தெரிவித்து, தங்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தேன். மாநில அரசுகளை ஆலோசிக்காமல், மையம் அமைக்கும் முறையை எதிர்த்திருந்தேன். இதே போன்ற கருத்துக்களை, பல்வேறு முதல்வர்களும், தங்களுக்கு தெரியப் படுத்தினர்.இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், உள்துறைச் செயலர்கள், போலீஸ் டி.ஜி.பி.,க்களது கூட்டத்தை, கடந்த மாதம், 12ம் தேதி கூட்டியது. இந்த விஷயத்தில், எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், கூட்டத்தில் கலந்து கொள்ள, தமிழக அதிகாரிகளை அறிவுறுத்தினேன்.
“ஆச்சர்யம் அளிக்கிறது’:அந்த கூட்டத்தில், பல மாநிலங்கள், தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தன. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் கூட, தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை, தற்போதுள்ள ஷரத்துகளுடன் அமைக்கக் கூடாது என, தெரிவித்து உள்ளன.ஆனால், ஒரு மாநிலத்தின் கேள்விக்கு விளக்கம் அளித்த, மத்திய உள்துறைச் செயலர், “தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான அலுவல் ரீதியான மனு, திரும்பப் பெறப்படவில்லை; எனவே, இது, மார்ச் 1ம் தேதி முதல், அமலுக்கு வந்துவிட்டதாக அர்த்தம்,’ என, தெரிவித்து உள்ளார்.இப்படிப்பட்ட பின்னணியில், உள்நாட்டு பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க, மாநில முதல்வர்களின் கூட்டம், இந்த மாதம் 16ம் தேதி கூட்டப் பட்டுள்ளது, ஆச்சரியம் அளிக்கிறது. இக்கூட்டத்தில் விவாதிக்க உள்ள பொருள்கள் பற்றிய பட்டியலில், பயங்கரவாத தடுப்பு மையமும் இடம் பெற்றுள்ளது.
கருத்துக்கு முக்கியத்துவம்:மாநில முதல்வர்களின் கருத்துக்கள் மற்றும் உணர்வுகளை பரிசீலிக்காமல், பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கப் படுவது, துரதிருஷ்டவசமானது. எனவே, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கப் படுவதை நிறுத்தி வைக்க, முதலில் உத்தரவிட வேண்டும்.இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, முதல்வர்களின் கூட்டத்தை தனியாக நடத்த வேண்டும். பல்வேறு மாநில முதல்வர்களின் கருத்துக்களுக்கு, உரிய முக்கியத்துவம் அளித்தால் தான், பயங்கரவாத எதிர்ப்பு குறித்து, ஆரோக்கியமான விவாதத்தை நடத்த முடியும்.இந்த விஷயத்தில், தங்களது விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்: பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்
பதிந்தவர்:
தம்பியன்
03 April 2012
0 Responses to தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்: பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்