பர்மீய ஜனநாயக போராட்டத் தலைவரான ஆங் சாங் சுகி அம்மையாருக்கு மக்கள் செல்வாக்கு எப்படியிருக்கிறது என்பதை ஆழம் பார்க்க இராணுவ ஜிந்தாக்கள் நடாத்திய இடைத் தேர்தலில் ஆங் சாங் சுகியின் என்.எல்.டி கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது. மொத்தம் 44 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 43 ஆசனங்களை சுகி அம்மையாரின் கட்சி சுவீகரித்துள்ளது. வெற்றிக்கு பின் கருத்துரைத்த அம்மையார் இது ஜனநாயகத்திற்கும், மியன்மார் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், தமது ஆதரவாளர் இனம்புரியாத மகிழ்ச்சியில் திழைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தேர்தல் உரிய முறையில் நடக்கவில்லை என்று குரல் கொடுத்தவர் இன்று தனக்கு வெற்றி கிடைத்ததும் மக்களின் வெற்றி என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாகும். ஆங் சாங் சுகி அம்மையார் கடந்த 1989ல் இருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இப்போது தேர்தல் களத்திற்கு முதல் தடவையாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்தை ஏற்படுத்த சர்வதேச சமுதாயம் பெரும் பாடுபட வேண்டியிருந்தது. சுகி அம்மையாரின் வெற்றி ஜனநாயக மாற்றத்திற்கான வெற்றி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதன் பின்னர் இராணுவ ஜிந்தாக்கள், சீனா இரண்டும் எத்தகைய சதியில் இறங்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அதேவேளை கடந்த தை மாதம் டேனிஸ் அபிவிருத்தி அமைச்சர் கிறிஸ்டியான் பிறிஸ் பாக் சுகி அம்மையாரை நேரடியாகச் சந்தித்துவிட்டு வந்திருந்தார். இப்போது டென்மார்க் சார்பில் கருத்துரைத்த அவர், பர்மாவில் ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள வெற்றியால் தாம் பெரு மகிழ்வு கொண்டுள்ளதாக தெரிவித்தார். சுகி அம்மையார் கேட்டுக் கொண்டால் ஜனநாயக மறுமலர்ச்சிக்கு உதவ டென்மார்க் தயார் என்றும் கூறினார். மக்கள் பணத்தை சுரண்டி மியன்மார் ஜிந்தாக்கள் கேணல் கடாபி போன்ற சுகபோக வாழ்வு வாழ்கிறார்கள். அவர்களுடைய வரம்பு மீறிய சுகபோக வாழ்வுக்கு இப்போது முதல் வேட்டு விழுந்துள்ளது.
மியன்மார் ஜிந்தா இராணுவ சர்வாதிகாரிகறுக்கு சிறீலங்காவுக்கு ஆதரவு கொடுப்பது போலவே இந்தியாவும், சீனாவும் போட்டி போட்டு ஆதரவு கொடுத்து அநீதியான ஆட்சி நிலவ உதவியுள்ளன. சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவிடும் என்று பயந்து இந்தியாவும், இல்லை இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துவிடுமென்று பயந்து சீனாவும் சர்வாதிகாரிகள் சுகபோக வாழ்வு வாழ துணை போயுள்ளன. இரண்டு நாடுகளும் ஆசியாவில் எத்தகைய மடைத்தனமான கொள்கைகளை பின்பற்றுகின்றன என்பதற்கு மியன்மாரும், சிறீலங்காவுமே மிக நல்ல உதாரணங்களாகும். தற்போது பர்மாவிலும், சிறிய அளவு சிறீலங்காவிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எதிர்காலத்தில் சிறிய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. என்னவென்று தெரியவில்லை ஆனால் எங்கோ ஒரு ஒளிக்கீறு தெரிகிறது என்பதே இங்கு முக்கிய விடயமாகும்.
டென்மார்க் பர்மாவின் அபிவிருத்திக்காக 100 மில்லியன் குறோணர்களை ஒதுக்கியுள்ளது. டேனிஸ் தூரலாயமும் பர்மாவில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் சுகி அம்மையாருக்கு முக்கிய மந்திரிப் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கிளம்பியுள்ளது. பர்மாவில் ஏற்படும் சர்வாதிகார வீழ்ச்சி சிறீலங்காவிலும் பிரதிபலிக்கப்போகிறது என்பதே உண்மையாகும். 58 மில்லியன் பர்மீய மக்களின் அடிமை வாழ்வில் இந்த நிகழ்வு ஒரு திருப்பம் என்பதவில் மறு கருத்துக்கு இடமில்லை. அரசியல் மாற்றத்திற்கான அடுத்த கட்ட பணிக்குள் போகிறோம், இந்த நாட்டில் புதிய அரசியல் ஏரா இன்று ஓடப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
அலைகள்
இன்று பர்மாவில் நாளை சிங்களவனின் நாட்டில். ஈழத்தில் எப்போது?