இலங்கையில் இடம் பெறும் ஆள்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் உயர் மட்ட விசாரணைகளை நடத்துமாறு ஐ.நா. இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஹொங் கொங்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு கோரிக்கை விடுத்துள் ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை அரசின் ஆள் கடத்தும் “கைத்தொழிலின்” மிக அசிங்கமான ஓர் அம்சம் கடந்த 9ஆம் திகதி பிரேம்குமார் குணரட்ணம் என்பவரை நாடுகடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இந்த நபர் 6ஆம் திகதி கடத்தப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் முன்வரிசை சோஷலிஸ கட்சியையும், மனித உரிமை அமைப்புகளையும் ஆஸ்திரேலிய அரசையும் உடனடியாக செயலில் இறங்கும்படி செய்துவிட்டது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொத்தபாய ராஜபக்ஷ உடனடியாகவே ஆள்கடத்தல் பற்றி எதுவுமே தெரியாது என்று அறிவித்திருந்தார். முன்னதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் பணிப்பாளர் லஷ்மன் ஹிலுகல்ல கருத்து வெளியிடுகையில்:
குணரட்ணம் மற்றும் திமுத்து ஆட்டிக ஆகியோரை அரசு கடத்துவதற்கான காரணம் எதுவுமே கிடையாது என்று கூறியிருந்தார்.பொலிஸ் தரப்புப் பேச்சாளர் அஜித் ரோஹண, குணரட்ணம் இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டு மட்டகொடவுக்கு கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் பொலிஸ் குற்றப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டார் என்று கூறினார்.
இந்தக் கடத்தலில் அரசு சம்பந்தப்பட்டுள்ளது என்பதை இது தெளிவாக்கியுள்ளது. கொலன்னாவ மேயரைக் கடத்த முயன்றார்கள் என்ற குற்றச் சாட்டில் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த கப்டன் தரத்திலான இரண்டு அதிகாரிகளும் வேறு இரு அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டார்கள். சம்பந்தப்பட்டவர்கள் கைதானவர்களால் படம்பிடிக்கப்பட்டு முக்கிய பத்திரிகைகளில் அந்தப் படங்கள் பிரசுரமாகி அவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர். ராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களைக் கைது செய்யப்போகையில் தவறுதலாக சம்பந்தப்பட்டவர்களை அவர்கள் கைது செய்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
அரசு ஆள்கடத்தல் கைத் தொழிலில் ஈடுபட்டள்ளது என்பதை இந்தச் சம்பவங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. சமீப காலத்தில் நடந்துள்ள ஆள்கடத்தல்களின் எண்ணிக்கை 60 ஆக அறிவித்துள்ளது.கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் வரை இவ்வாறான ஆள்கடத்தல்கள் தொடர்பாக நம்பகரமான விசாரணைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்க முடியாது.குணரட்ணம் மற்றும் திருமதி ஆட்டக்கல ஆகியோர் கடத்தப்பட்டது மற்றும் ஏனைய ஆள்கடத்தல்கள் தொடர்பாகவும் உயர்மட்ட விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடுமாறு ஐ.நா. மனித உரிமைய ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் கோத்தபாய ராஜபக்ஷ மிக உயர்ந்த பதவியில் இருப்பது மட்டுமல்ல ஜநாதிபதியின் சகோதரராக இருப்பதால் அவ்வாறான விசாரணை ஒன்று நடப்பது சாத்தியமில்லை என்று கூற வேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்றுள்ளது.
0 Responses to இலங்கையில் இடம் பெறும் ஆள்கடத்தல் சம்பவங்கள்