சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல் பீரிசைச் சந்திப்பதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பதற்கு, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இத்தகவலை கூட்மைப்பு மறுத்துள்ளது.
நடந்து முடிந்த ஐ.நா மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசுக்கெதிராக தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து சிறிலங்காவில் தமிழ் மக்களின் தற்போதைய நிலை குறித்தும் தீர்மானம் தொடர்பில் சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், அரசியல் தீர்வு விடயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அறிந்துகொள்வதற்காகவே ஹிலாரி, கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சிறிலங்க வெளியுறவுத்துறை அமைச்சர் பீரிசுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதற்கான அழைப்பை ஹிலாரி விடுத்திருந்தார். அதன்படி பீரிஸ் எதிர்வரும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் அமெரிக்கா பயணமாகவுள்ளார்.
இந்நிலையில் பீரிசின் வருகைக்கு முன்னர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவிற்கு வருகை தருமாறு ஹிலாரி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனிடமிருந்து எதுவிதமான அழைப்பும் எமக்கு விடக்கப்படவில்லை எனவும் அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால் சென்று தற்போதைய நிலைகள் குறித்து அமெரிக்காவிடம் கூட்டமைப்பு விபரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அரச தரப்பிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பீரிசின் சந்திப்பிற்கு முன் கூட்டமைப்பை அமெரிக்கா சந்திக்க முயல்கின்றதா? என அரசாங்கத்தில் கேள்வியெழும்பியுள்ளது.
ஜெனிவாக் கூட்டத்தொடருக்கு முன்னர் சிறிலங்காவுக்கான வருகையை மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் அரச தரப்பைச் சந்திப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சந்தித்திருந்தனர். எனவே தற்போதும் பீரிசை சந்திப்பதற்கு முன்னர் கூட்டமைப்பை அமெரிக்கா சந்தித்து விடுமோ என்ற குழப்பநிலை அரச தரப்பில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Responses to கூட்டமைப்பிற்கு ஹிலாரி அழைப்பு குழப்பத்தில் கூட்டமைப்பும்