Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனிவாவில் அரசு பிரகடனப்படுத்திய இராஜதந்திரப் போரில் அது தோற்றுவிட்டாலும், அங்கே நடந்த அரசியல், இராஜதந்திர முயற்சிகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.

அப்படி ஜெனிவாவில் நடைபெற்ற மேலும் பல விடயங்களின் தொகுப்பு வருமாறு:

தீர்மான இறுதி வரைபு வெளியாவதற்கு பல நாட்கள் முன்னதாகவே, ஜெனிவாவில் இந்திய அமெரிக்க இராஜதந்திரிகள் இரகசியமான ஆலோசனைகளில் மூழ்கியிருந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மான வாசகம் திருத்தப்படவேண்டும் என் பதில் இந்தியா ஒற்றைக்காலில் நின்றது.

இந்தப் பேரத்தில் மிகவும் முக்கிய பங்கை ஆற்றியவர், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கான இந்தியாவின் புதிய தூதர் திலிப் சின்கா ஆவார். ஜெனிவாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு 5 நாட்கள் முன்னதாகவே அவர் ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் இருந்து ஜெனிவாவுக்கு வந்திருந்தார். அமெரிக்க அதிகாரிகளுடன் உடனடியாகவே அவர் ஆழமான ஆலோசனைகளை நடத்தினார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு சின்காவுக்கு இரவு விருந்தளித்தார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்த விருந்தை ஒழுங்கு செய்தது. அதற்குக் காரணம், இந்தியாவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலையாவது வகித்து ஒதுங்கி நிற்குமாறு வலியுறுத்துவதேயாகும்.

ஜெனிவாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலராக இருந்தவர் திலிப் சின்கா. இலங்கைக்கு ஆதரவாக இந்தத் தடவை இந்தியா நடந்துகொள்ளாது என்பதை அந்த இரவு விருந்தின்போதே சின்கா, பிரீஸுக்குத் தெளிவுபடுத்திவிட்டார்.

உள்நாட்டு விவகாரங்களினால் இந்தமுறை இலங்கையைக் காப்பாற்ற முடியாது என்று அவர் கைவிரித்து விட்டார். விருந்து முடித்து வெளியே வந்த இலங்கை அமைச்சர் ஒருவர், தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கப் போகிறது என்பதைப் பகிரங்கமாகக் கூறினார். அதேவேளை, வாக்கெடுப்புக்கு முதல்நாளான புதன்கிழமை இரவு மிகக் கடுமையான இராஜதந்திர பேரம் பேசல்கள் இலங்கை அமெரிக்க இந்தியத் தரப்புகளில் இடம்பெற்றன.

தீர்மானத்தில் திருத்தம் செய்வதற்கு அமெரிக்கப் பிரதிநிதி எலின் டொனஹேயுடன் பேரம் பேசுமாறு திலிப் சின்காவுக்கு புதுடில்லியில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்மானத்தைத் திருத்துவதற்கு அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் விரும்பவில்லை. அப்படிச் செய்வது இலங்கையை வழிப்படுத்துவதாக அமையாது என்று அவை கருதின. ஆனால், திலிப் சின்கா மிகக் கடுமையாக, விடாப்பிடிப் போக்குடன் இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர், திருத்தமாட்டேன் என்று அமெரிக்கா பிடிவாதம் பிடித்தால் இந்தியா தீர்மானத்தை எதிர்க்கும் என்று மிரட்டினார். 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா முன்னின்று தோற்கடித்ததையும் அவர் நினைவுபடுத்திச் சுட்டிக்காட்டினார்.

கடைசியாக இந்தியாவின் வழிக்கு வந்தது அமெரிக்கா. தீர்மான வாசகங்கள் திருத்தப்பட்டன. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசின் ஒப்புதலுடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆலோச்னை மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கலாம் என்ற இந்தியாவின் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்துக்கு ஹங்கேரி, ருமேனியா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, மொனாக்கோ, ஸ்பெயின், லித்வேனியா, பின்லாந்து, சைப்ரஸ், குரோசியா, பல்கேரியா, ஸ்லோவேனியா, எஸ்தோனியா, செக் குடியரசு, லக்சம்பேர்க், கிறீஸ், இஸ்ரேல், ஸ்லோவாக்கியா, மோல்டா, ஜோர்ஜியா, சுவிற்சர்லாந்து, சோமாலியா, கனடா, கமரூன், லிச்சன் ஸ்டைன், நோர்வே, டென்மார்க், சுவீடன், அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், போர்த்துக்கல், ஆஸ்திரியா, போலந்து, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 40 நாடுகள் துணை அனுசரணை வழங்கியிருந்தன.

இவற்றில் 13 நாடுகள் மட்டுமே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்த முறை வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருந்தன. 40 நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருந்தாலும், இந்தியாவின் அழுத்தங்களுக்கு அமெரிக்கா பணிந்து போக வேண்டியிருந்ததால், முன்னைய வரைபின்படி அதிக நெருக்குதல்களைக் கொடுக்கும் வகையிலான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது போனது என்று அமெரிக்க இராஜதந்திரிகள் கூறுகிறார்கள்.

0 Responses to ஜெனிவாவில் இறுதிக் கணங்கள்!- அம்பலத்துக்கு வரும் மேலதிக தகவல்கள்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com