Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடகொரியாவால் சீனா அந்தரமான நிலையில்

பதிந்தவர்: ஈழப்பிரியா 09 April 2012

வடகொரிய தலைவர் கிம் இல் சுங்கின் நூற்றாண்டு விழா வரும் 15ம் திகதி பெருமெடுப்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை கொண்டாட டென்மார்க்கில் இருந்து வடகொரிய – டேனிஸ் நட்புறவுச் சங்க உறுப்பினர்கள் 30 பேர் வடகொரியா புறப்பட்டுள்ளனர். இவர்கள் 14 தினங்கள் அங்கு நின்று கொண்டாட்டங்களை அவதானிக்க இருக்கிறார்கள்.

இதற்கிடையில் வரும் 12, 16ம் திகதிகளில் கிம் இல் சுங் ஞாபகார்த்தமாக புதிய ராக்கட்டை வடகொரியா ஏவ இருக்கிறது. இந்த ராக்கெட்டுக்கள் குறித்து இரண்டு சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன. முதலாவது அமெரிக்காவினுடைய குற்றச்சாட்டு, இதன்படி : தன்னுடைய அணு குண்டு தலை பொருத்திய ஏவுகணைகளை நெறிப்படுத்துவதற்கான சற்லைற்றை வடகொரியா ஏவுகிறது. இதன் மூலம் உலக அமைதிக்கு பாரிய அச்சுறுத்தலாக அது மாறியுள்ளது. இரண்டாவது தென் கொரியா உளவுப்பிரிவின் குற்றச்சாட்டு : வடகொரியா தன்னுடைய அணு குண்டை உருவாக்கி முடித்துவிட்டது, அதையே மர்மமாக பரிசோதித்துப் பார்க்கப்போகிறது என்று கூறியுள்ளது. புங்குய்யா – றி என்ற நகரத்தில் நிலத்தின் அடியில் சுரங்க வழி செய்யப்பட்டு அதன் கீழ் அணு குண்டு தலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. சமாதானத்திற்கான சற்லைற் என்று வேப்புக் காட்டியபடியே அணு குண்டை வெடிக்கப் போகிறது வடகொரியா என்று தென்கொரிய உளவுப்பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பாரிய பீதியைக் கிளப்பிவிட்டுள்ளதால் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இஞ்சி தின்ற குரங்குகளின் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஜப்பான் பற்றியாற்றிக் ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கியை டோக்கியோவின் பல பாகங்களிலும் நிறுத்தியுள்ளது. தமது வான்பரப்பிற்குள் ராக்கட் நுழைந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்று எச்சரித்துள்ளது. அதேவேளை வடகொரியாவின் நட்பு நாடான சீனாவுக்கும் இந்த விவகாரம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு அருகில் ஓர் அணு சக்தி வல்லரசு ஏற்படுவதை சீனா அறவே விரும்பவில்லை. இன்று வடகொரியா நண்பனாக இருந்தாலும், நாளை மேலை நாடுகளுடன் சேர்ந்து சீனாவுக்கு எதிராக திரும்பமாட்டாது என்பதற்கு யாதொரு உத்தரவாதமும் கிடையாது. ஈரானும் – ஈராக்கும் மோதியதைப் போல வடகொரியா – சீனா மோதலை தூண்டிவிட்டால் ஏவல் பேயே கூரையைப் பிடுங்கிய கதையாகிவிடுமென சீனா பயந்துபோயுள்ளது.

மறுபுறம் ஆபிரிக்க நாடான மாலியின் அதிபர் அமடு ருமானி ரேவுரா வரும் 22ம் திகதிக்குள் பதவி விலகிவிட வேண்டுமென இராணுவம் கோரியுள்ளது. இவருடைய பதவியை பாராளுமன்ற சபாநாயகர் பொறுப்பேற்று 40 தினங்களுக்குள் தேர்தலை நடாத்துவார் என்று ஒப்பந்தமாகியுள்ளது. பதவி விலகும் அதிபர் இராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போராளிக்குழுவினரை தனது பாதுகாப்புக்கு நியமித்ததால் ஏற்பட்ட குழப்பத்தில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இப்போது உலக நாடுகள் கொடுத்த கடும் அழுத்தம் காரணமாக மாலி இராணுவம் முகாம்களுக்கு திரும்ப உடன்பட்டுள்ளது.

அடுத்த முக்கிய விடயமாக சிரியாவில் நடந்துள்ள படுகொலைகள் தனக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஐ.நா செயலரும், சிரிய அமைதிப்பணி முகவருமான கொபி அனான் கூறியுள்ளார். படைகளை விலத்துவதாக தெரிவித்துவிட்டு ஆஸாட் படைகள் நடாத்திக் கொண்டிருக்கும் வன்முறைகள் அடியோடு ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்றும் தெரிவித்துள்ளார்.

அலைகள்

0 Responses to வடகொரியாவால் சீனா அந்தரமான நிலையில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com