சிறீலங்கா இனவாத அரசு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எதையும் செய்யவில்லை. அவர்களுடன் இணைந்து போருக்கு சகலவிதமான உதவிகளையும் செய்த இந்திய அரசும் தனது தார்மீகக் கடமைகளை கடுகளவும் பொறுப்புடன் செய்யவில்லை என்பது தமிழ் மக்களின் கவலையாக உள்ளது.
இப்போது இந்திய தூதுக்குழு ஒன்று சிறீலங்கா புறப்படுகிறது. இதற்கு முன்னர் கனிமொழி, டி.ஆர்.பாலு, தொல். திருமாவளவன் போன்றவர்கள் அடங்கிய குழு புறப்பட்டுப் போய் என்ன நடந்தது.. எதுவுமே நடக்கவில்லை.
ஒரு முறை மேற்கொண்ட பயணத்தால் யாதொரு பயனும் ஏற்படாமல் போன பின்னரும் இன்னொரு குழுவை அனுப்பி என்ன பயன்.. காந்தியின் உயிரற்ற சிலையை உடைத்ததற்கு விழுந்தடித்து, கண்டனம் தெரிவித்த இந்திய நடுவண் அரசு, உயிருள்ள மக்கள் உயிருடன் துடிக்கத் துடிக்க புதைகுழியில் போட்டு மூடப்பட்டபோது கண்டிக்கவில்லை.
முதலில் இந்தியா தன்னைத்தானே சில கேள்விகளைக் கேட்க வேண்டும்…
தமிழர்களை அழிப்பதற்கு இந்தியா உதவும்போது சிங்கள அரசு கன வேகத்தில் செயற்படுவது ஏன்..?
மாறாக..
தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால் சிங்கள அரசு எதையுமே செய்ய மறுப்பது ஏன்..?
இரண்டு கேள்விகளையும் ஒரே தராசில் போட்டு நிறுத்தால் சிறீலங்கா இனவாத அரசு யார்..? அவர்களுடைய நோக்கம் யாது..? என்பதை புரியலாம். இந்தியப் படையை இலட்சக் கணக்கில் அனுப்பி புரியாததை இந்தியா வெறும் பதினைந்து பேரை அனுப்பியா புரியப்போகிறது..?
சரணடையுங்கள் நாங்கள் உங்களுக்கு எல்லா உதவிகளும் செய்கிறோமென சொன்ன சிங்கள அரசு செய்ததென்ன..? இசைப்பிரியாவுக்கு நடந்தது தெரிந்ததே…
மிகுதியாக சரணடைந்து, காயப்பட்டவருக்கு நடந்தது என்ன.. இன்றுவரை அவர்கள் மனிதர்களாக வாழ முடியாத அவலமே தொடர்கிறது..
வெள்ளைவான் கடத்தல்கள் இக்கணம்வரை முடிந்தபாடில்ல.. யாழில் உள்ள மக்கள் பலத்த அச்சத்துடன் வாழ்கிறார்கள். வன்னியில் பிடித்து முகாம்களில் அடைக்கப்பட்டவர்களின் வாழ்க்கைபோல இன்று யாழ். குடாநாடே சிறைக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது.
வடக்கின் வசந்தமென போலிப் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.. யதார்த்தத்தில் எதுவுமே நடந்தபாடில்லை.. கடந்த 62 வருடங்களில் சிங்கள அரசு தமிழருக்கு எதுவும் செய்யவில்லை.. இனிமேலும் செய்யப் போவதில்லை.. இதுவே யதார்த்தமான உண்மை.
இந்தியா அரசு செய்ய வேண்டியது என்ன..?
சிங்கள இனவாத அரசு முதலில் மக்களை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும்..
சிங்கள இனவாத மதவாத ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்த வேண்டும்..
இராணுவத்தை பலாலி முகாமுக்கு உடனடியாக திருப்ப வேண்டும்..
சிவில் நிர்வாகம் இயல்பாக நடைபெற வழிவிட வேண்டும்…
அரசியல் பிரச்சனைக்கு தீர்வை உடன் அறிவிக்க வேண்டும்…
எதுவுமே நடக்கவில்லை..
இந்தியக் குழு அங்கு போய் என்ன பயன்..?
இதுவரை..
இந்தியாவால் இலங்கை தமிழருக்கு உருப்படியாக எந்தப் பயனும் கிடைக்கவில்லை.. சிங்கள இனவாதத்தாலும் எதுவும் கிடைக்கவில்லை..
அழிவை அள்ளி வழங்கத் தெரிந்தளவு இருவருக்குமே ஆக்கத்தை வழங்கத் தெரியவில்லை..
இந்திய – சிறீலங்கா பாக்குவெட்டிக்குள் தமிழர்கள் பாக்காக சிக்குண்டதே இன்றுவரை அவர்களின் கண்ணீருக்குக் காரணம்.
நேற்றய யாழ். உதயன் செய்திகள் வடக்கின் வசந்தம் எத்தனை இலட்சம் லீட்டர் சாராயத்தில் வளர்க்கப்பட்டுள்ளது என்பதை தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது.
யாழ்ப்பாணத்தில் டாஸ்மாக் அமோக வளர்ச்சி பெற்றிருப்பதைப் பார்த்து புல்லரித்து இந்திய தூதுக்குழு சிறீலங்காவை பாராட்டவும் ஓர் அரிய வாய்ப்புள்ளது.
ஆனால்..
யாழ். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.. எல்லோரையும், எல்லாவற்றையும் அவர்கள் சரியாக அடையாளம் கண்டு வைத்திருப்பதால் அமைதியாகவே இருக்கிறார்கள்.
குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு என்பது பழமொழி..
மற்றப்படி
அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை.
ஏனென்றால் இவர்களை யாழ். மக்களுக்கு முன்னரே தெரியும்.
அலைகள்
குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு.. யாழ். மக்களுக்கு இவர்களை முன்னரே தெரியும்...
பதிந்தவர்:
ஈழப்பிரியா
09 April 2012
0 Responses to குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு.. யாழ். மக்களுக்கு இவர்களை முன்னரே தெரியும்...