கூடங்குளம் அணு உலை மூலம் தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசுக்கு இலங்கை அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த அணு உலை வல்லுனர்களும், ஆராய்ச்சியாளர்களும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தால் தமிழக கடலோர பகுதிக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் அச்சறுத்தலாக அமைந்துள்ளது.
சில எதிர்பாராத காரணங்களால் கதிர்வீச்சு கசிவு ஏற்படுமானால் அதன் பாதிப்பு இலங்கை வரை இருக்கும். ஏனெனில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதிக்கும் இடைப்பட்ட தூரம் 240 கி.மீட்டர்தான்.
பசுமை வீடுகளின் வாயுக்களின் வெளியேற்றம் அதிகரிக்கும் பட்சத்தில் இயற்கை பேரிடர்களான புயல், சூறாவளி, பெருமழை போன்றவை ஏற்படும். தவிர இந்தியாவில் இதுவரை அதிகபட்சமாக 200 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் உலைகள்தான் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் முறையாக 1000 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய அணுமின் உலை திட்டத்தை இந்தியா செயல்படுத்த உள்ளது. அந்த அணு உலையை நிர்வகிப்பதில் சிறிய தவறு நிகழ்ந்தாலும், பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்று இலங்கை அணு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதுபற்றி இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை மந்திரி படாலி சம்பிகா ரணாவகா கூறியதாவது:-
கூடங்குளம் அணு உலை விவகாரம் எங்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. வெளியுறவு துறை அமைச்கம் வாயிலாக இந்திய அரசாங்கத்துக்கு நாங்கள் கடிதம் எழுதி இருக்கிறோம். இந்தப் பிரச்சினையில் பரஸ்பரம் புரிந்து கொள்ளு தல் அடிப்படையில் பணியாற்ற விரும்புகிறோம். மேலும் கூடங்குளம் அணு மின் நிலையம் மூலம் இலங்கைக்கு அச்சுறுத்தல் ஏதாவது இருக்கிறதா? என்று அணு எரிசக்தி ஆணையம் மூலம் ஒரு சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தை சர்வதேச அணுசக்தி ஆணையத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். எங்கள் கடிதத்துக்கு இந்தியாவிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறோம். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கும்போது சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் வழிகாட்டுதலை இந்தியா கடைப்பிடிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Responses to கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்திற்கு இலங்கை எதிர்ப்பு