தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராசா உள்பட 14 பேரை கடந்த ஆண்டு சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
இதில் ராசா தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஆ.ராசாவும் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றில் கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்தார். தனது மனுவில், வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். ராசாவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ராசாவுக்கு ஜாமீன் வழங்கி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஷைனி உத்தரவிட்டார்.
ரூ.20 லட்சத்துக்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான உத்தரவாதப் பத்திரம் கொடுத்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்தார்.முன்னதாக ராசாவின் விடுதலையை எதிர்நோக்கி கனிமொழி உள்ளிட்ட திமுக தலைவர்கள் சிபிஐ நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர்.
0 Responses to 2ஜி விவகாரம் | ஆ. ராசாவுக்கு நிபந்தனை ஜாமீன்