Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்ட அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பங்கேற்கச் செய்வதற்கு அரசு முழு முயற்சிகளை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்று தீர்வை எட்டுவதற்கு அரசுக்கு ஒத்துழைக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்தார்.

அத்துடன் 13ஆவது அரசியல் திருத்தச்சட்டத்தை உடன் நடைமுறைக்குக் கொண்டுவருமாறும் ஜனாதிபதியிடம் அவர் கோரினார். தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பொது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பிலும், அதற்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கான ஒழுங்குப் பத்திரமொன்றைத் தயாரிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு சிறந்த களம் எனவும், அதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கவேண்டுமெனவும் அரசு தொடர்ந்தும் அழைப்பு விடுத்து வருகின்றது.

அந்த வகையில் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய கடப்பாட்டில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாரிய பொறுப்புள்ளது. அதனால் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அக்கட்சிக்குப் பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்டாயம் பங்கேற்கச் செய்வதற்கு அரசு உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியிடம் வலியுறுத் தினார். அத்துடன் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதன் மூலம் கூட்டமைப்பை தெரிவுக் குழுவுக்கு அழைத்து வர முடியும் எனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.

கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களில் பேசப்பட்ட முக்கிய விடயங்களை தெரிவுக்குழு முன்னிலையில் சமர்ப்பிக்குமாறும் ரணில் ஜனாதிபதியிடம் கோரினார்.

இதற்குப் பதில் அளித்த ஜனாதிபதி மஹிந்த, கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு அழைத்து வருவதற்கான சகல முயற்சிகளையும் அரசு இப்போதும் மேற்கொண்டு வருகின்றது. தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பதே அரசின் விருப்பமும் கூட. 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. விரைவில் இதற்கு சாதகமாக ஒரு நிலை ஏற்படும் என்றார்.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கான ஒழுங்குப் பத்திரத்தைத் தயாரிப்பதற்கு ஐ.தே.க. தமது கருத்துகளை ரணில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார். அத்தோடு, நாடாளுமன்றத் தெரிவுக்குழு கலந்துரையாடல் மற்றும் ஒழுங்குப் பத்திரத்தைத் தயார் செய்தல் தொடர்பில் ஏனைய எதிர்க்கட்சிகளுக்குத் தெளிவுபடுத் துவதற்குத் தாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் ஜனாதிபதியிடம் கூறினார்.

இச்சந்திப்பின்போது அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, பஸில் ராஜபக்ஷ, டளஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அரசைப் பிரதிநிதித்துவப் படுத்தியும், ஐ.தே.கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜோஸப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ரவி கருணாநாயக்க முதலான எம்.பிகளும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திடீர் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கொழும்பு அரசியல் வட்டாரத்தில் நேற்று பரபரப்பாகப் பேசப்பட்டது.

0 Responses to கூட்டமைப்பு பங்கேற்க்காவிட்டால் தெரிவுக்குழுவுக்கு ஜ.தே.க. வராது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com