விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியில் புகழ் பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அன்று சாமி வாழ வந்தான்புரத்தில் உள்ள கவுசிகமாநதி ஆற்றில் இறங்கினார். அங்கு 2 நாட்கள் சாமி தங்கினார்.
இன்று (09.05.2012) காலை 5.30 மணிக்கு சாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கருட வாகனத்தில் பொட்டல் பட்டியில் இருந்து சென்னல்குடி கோவிலுக்கு புறப்பட்டார். பக்தர்கள் சப்பரத்தை தூக்கி வந்தனர். சப்பரத்தின் மேல் இரும்பு குடை அமைக்கப்பட்டு இருந்தது.
அப்போது மேலே சென்ற மின்சார வயரில் இரும்பு குடை பட்டது. சப்பரத்தில் இரும்பு கம்பியை மாரீஸ்வரன் (வயது 17), அழகுராஜா (17), கார்மேகம் (17) ஆகியோர் பிடித்து வந்தனர். இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து 3 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
இதைகண்டு சப்பரத்தை தூக்கி வந்த மற்ற பக்தர்கள் கூச்சல் போட்டு அலறினர். இதனால் அங்கு பெரும் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மேலே சென்ற மின் வயரை துண்டித்து மின் சப்ளை நிறுத்தப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மின்சாரம் தாக்கி இறந்த 3 பேர் உடலையும் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி இறந்த கார்மேகம், மாரீஸ்வரன் இருவரும் கட்டிட தொழிலாளர்கள். அழகுராஜா மேலூர் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கோவில் விழாவில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பரிதாபமாக இறந்ததால், பொட்டல்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. இன்று காலை 7 மணியளவில் சப்பரம் மீண்டும் தூக்கப்பட்டு சென்னல்குடி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் | கோவில் திருவிழாவில் சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்!
பதிந்தவர்:
தம்பியன்
09 May 2012
0 Responses to விருதுநகர் | கோவில் திருவிழாவில் சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்!