ரஷ்யாவின் புதிய அதிபராக விளாடிமிர் புடின் ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
தலைநகர் மாஸ்கோவில் பெருஞ்செலவில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்த ஆடம்பர விழாவில் அதிபர் புடின் பதவியேற்பு உரையை நிகழ்த்தினார்.
பிரதமராக பதவி வகித்த கடந்த நான்கு ஆண்டு கால இடவெளிக்குப் பின்னர், புடின் மீண்டும் அதிபர் நாற்காலியில் இன்று அமர்கிறார்.
இப்போது பதவி முடிந்து செல்லும் அதிபர் டிமிட்ரி மெட்வடேவும் விலாடிமிர் புடின் ஆதரவு-ஆளாகத்தான் பொதுவாக பார்க்கப்பட்டார்.
கடந்த மார்ச்சில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தேர்தலில் புடின் மூன்றாவது தடவையும் அதிபராக தெரிவானார்.
பதவிப் பிரமாணத்தின் போது பேசிய விளாடிமிர் புடின், ரஷ்யா தேசிய அபிவிருத்திக்கான புதிய தளமொன்றுக்குள் பிரவேசிப்பதாகக் கூறினார்.
‘புதிய மட்டத்தில், புதிய தரத்தில், புதிய பரிமாணத்தில் காரியங்களை நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. அடுத்து வரும் ஆண்டுகள் ரஷ்யாவின் பல தசாப்தங்களுக்கான தலைவிதியை தீர்மானிக்கப் போகிறது’ என்று ரஷ்யாவின் புதிய அதிபர் முழங்கினார்.
முன்னாள் சோவியட் அதிபர் மிஹாய்ல் கொர்ப்பச்செவ், முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெரலஸ்கோனி உட்பட இன்னும் பல தலைவர்களும் க்ரெம்ளின் மாளிகையில் நடந்த புடினின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
நீண்டகாலம் பதவியிலிருக்கவுள்ள அதிபர்
போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்ப்பு அணி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
புடின் அவரது அடுத்த 6 ஆண்டுகால பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்வாரானால் அவர் தான் சோவியட்டின் அதியுயர் தலைவர் ஜோசப் ஸ்டாலினுக்குப் பின்னர், நீண்டகாலம் பதவியிலிருக்கும் ரஷ்ய தலைவராகவும் திகழ்வார்.
இருந்தாலும், அவர் பெரிய பிரச்சனைகளுக்கு தொடர்ந்தும் முகங்கொடுக்க நேரிடும். அவர் உருவாக்கிய அரசியல் கட்டமைப்பில் சில சிதைவுகள் தெரிகின்றன, பொருளாதார வளர்ச்சியும் மந்த கதியில் இருக்கிறது, வடக்கு காக்காஸஸ் பிராந்தியத்தில் வன்முறைகள் தொடர்கின்றன.
க்ரெம்ளின் நிகழ்ச்சியை முன்னிட்டு அந்தப் பகுதி முழுவதுமே காவல்துறையினர் வேலி வேலியாக குவிக்கப்பட்டிருந்தனர்.
முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புடின் எதிர்ப்பாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
பொதுவாக இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அமைதியாகத் தான் ஆரம்பித்தது. ஆனால் ஆங்காங்கே போலிசார் கட்டுப்பாட்டை இழக்க நேரி்ட்ட போது, மோதல்களும் வெடித்தன.
கலகத்தடுப்பு போலிசாரின் தடுப்பையும் உடைத்துக்கொண்டு சிலர் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய முயன்றனர்.
எதிரணியைச் சேர்ந்த முன்னணி பிரமுகர்கள் பலர் இன்று கைதானவர்களில் உள்ளனர்.
இதேவேளை, போட்டியாக, புட்டினுக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியொன்றும் மாஸ்கோவில் நடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Responses to ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் பதவியேற்றார்