பிரான்சிலும் – கிரேக்கத்திலும் நேற்று நடைபெற்ற தேர்தல்கள் இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட ஐரோப்பிய பொருளாதார கொள்கைகளின் வயிற்றில் பூகம்பத்தை இறக்கியிருக்கிறது.
பிரான்சில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பிரான்சியோ கொலன்ட அமோக வெற்றி பெற்றுள்ளார்.
அதிபர் மாளிகைக்குள் அவருடைய வரவு பிரான்சில் மட்டுமல்ல 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலுமே சூறாவளியை கிளப்பிவிட்டுள்ளது.
கடந்த 2008 ல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தை வெற்றி கொள்ள ஐரோப்பிய ஒன்றியமும் – சர்வதேச நாணய நிதியமும் இணைந்து போட்ட பொருளாதார மீதம் பிடித்தல்கள் மறுவிசாரணைக்கு வரப்போகின்றன.
இன்று காலை கருத்து வெளியிட்ட ஐரோப்பிய பொருளியல் அறிஞர்கள் பிரான்சிய அதிபர் கொலன்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தையும் அழைத்து மறுபடியும் பேச்சுக்களை ஆரம்பிப்பார் என்று தெரிவித்துள்ளனர்.
முதலாளிகளை காப்பாற்றுவதன் மூலமாக பொருளியல் மந்தத்தை வெற்றி கொள்ள முடியும் என்ற கடந்த பத்தாண்டுகால ஐரோப்பிய பொருளியல் சிந்தனைகள் பாரிய உடைவுகளை சந்திக்கப் போகின்றன.
கொலன்ட வெற்றி பெறக்கூடாது என்று ஜேர்மனிய வலதுசாரி தலைவர் அஞ்சலா மேர்க்கல் வெளிப்படையாகவே பிரச்சாரங்களை செய்திருந்தார்.
தேர்தலில் கொலன்ட வெற்றி பெற்றதும் உடனடியாக அவருக்கு போன் செய்து வரும் 15ம் திகதி பதவி ஏற்க முன் தம்மை சந்திக்கும்படி கேட்டுள்ளார்.
இன்றோடு முன்னாள் அதிபராகிவிட்ட ஸார்கோஸியுடன் இணைந்து அஞ்சலா மேர்க்கல் போட்ட திட்டங்களே ஐரோப்பா மீது பாரிய ஆதிக்கம் செலுத்தி வந்தன.
அந்தத் திட்டங்களின் அடுத்த கட்டம் என்ன.. இதுதான் ஜேர்மனிய தலைவரின் இப்போதைய துடிப்பு.
மறுபுறம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதிய பிரான்சிய அதிபருடன் நேற்றிரவே தொலைபேசி வழி தொடர்பு கொண்டு அவசர அழைப்பு விடுத்தார்.
வரும் மே 18 – 19 இரு தினங்கள் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி – 8 நாடுகளின் மாநாட்டில் அவரை அவசரமாக சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் – பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இரு நாடுகளும் நெருங்கிய உறவைப் பேண இது அவசியம் என்றும் கூறினார்.
இந்த சந்திப்புக்கள் நடைபெற முன்னரே இன்று அதிகாலை ஆசிய பங்குச் சந்தையில் வயிற்றோட்டம் ஆரம்பித்துவிட்டது.
கடந்த பெப்ருவரி மாதம் விழுந்ததைப் போல ஜப்பானின் நிக்கி பங்குச் சந்தை மூன்று வீதம் வீழ்ச்சியடைந்து, அதிர்ச்சி உண்டாக்கியது.
ஸார்கோஸி – அஞ்சலா மேர்க்கல் இருவருடைய யோசனைகளுக்கும் அமைவாக வியூகம் வகுத்த ஆசிய சந்தையின் நிலை வெங்கலக் கடைக்குள் யானை புகுந்தது போலாகியிருக்கிறது.
மறுபுறம்..
ஐரோப்பிய ஒன்றியமும், சர்வதேச நாணய நிதியமும் போட்ட மீதம் பிடித்தல் நிபந்தனைகளால் நொந்து நூலான கிரேக்கத்திலும் நேற்று ஆட்சி மாறியிருக்கிறது.
புதிதாக வந்துள்ள கிரேக்கத் தலைவர் அன்ரோனியோ சமாரா ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் இரண்டும் தம்மீது போட்ட மீதம் பிடித்தல் கொள்கைகளை ஏற்க மறுத்துள்ளார்.
இவரைப்போல தேர்தலில் முன்னணி வகித்த கிரேக்கத்தின் இடதுசாரி கட்சியின் தலைவர் சுரிஸாவும் கிரேக்கம் இனி (ஈ.யு – ஐ.எம்.எப் ) நிபந்தனைகளுக்கு அடிபணியாது என்றுள்ளார்.
இரண்டு நாடுகளுக்குள்ளும் ஏற்பட்டுள்ள மாற்றம், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார திட்டமிடலில் ஓலைப்பாயை உதறிப்படுத்தது போன்ற புதிய நிலையை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது.
இதுபோல மற்றய நாடுகளிலும் பணக்காரருக்கு ஆதரவான வலதுசாரி ஆட்சிகள் படிப்படியாக தூக்கி வீசப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையில் டென்மார்க் பிரதமர் கெல தொனிங் சிமித் பிரான்சின் புதிய அதிபருக்கு வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கில் சோசலிச ஆட்சிக்கு தலைமை தாங்கினாலும் வலதுசாரி கொள்கைகளே சரி என்று கருதும் தலைவர் கெல தொனிங் சிமித்.
இவர் இரண்டு தோணியில் கால்வைத்து பயணிக்கும் திசை திக்கு தெரியாத பொருளாதார கொள்கைகளைத் திருத்தி இனியாவது புதிய புத்தி பெற கொலன்டவின் வரவு உதவலாம்.
நேற்று நடைபெற்ற டென்மார்க் என்கில்ஸ்லிஸ் கட்சி மாநில மாநாட்டில் சோசல் டெமக்கிரட்டி ஆட்சி வந்தும் சோசலிசம் வரவில்லை என்ற கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.
விளக்கு ஏற்றியும் வெளிச்சம் வராத ஆட்சி நடைபெறுகிறது என்பது அவர்களுடைய குற்றச்சாட்டாக இருந்தது.
இப்படியான தலைவர்களுக்கும் கொலன்ட நம்பிக்கை தர வழியிருக்கிறது.
இன்று..
பணக்காரருக்கு ஆதரவான றிப்பப்ளிக்கன் கட்சி அமெரிக்காவில் ஆட்சியில் இல்லாத காரணத்தாலேயே அந்த நாடு பொருளியல் நெருக்கடியில் இருந்து தப்பியுள்ளது.
முதலாளிகளுக்கு வாய்ப்பாக இருந்த பிரான்ஸ் – ஜேர்மனி இரண்டும் தோல்வியடைந்துள்ளன என்ற கருத்து ஐரோப்பாவில் வீச ஆரம்பித்துவிட்டது.
பிரான்சிய தேர்தலே அதற்கு உதாரணம்..
1995 ல் மித்ரேன் பிரான்சிய ஆட்சியில் இருந்து விலக ஜாக் சிராக்கின் காலத்தில் ஆரம்பித்த வலதுசாரி கொள்கைகள் ஐரோப்பா முழுவதும் பரவியது.
அதனால் உண்டான பின்னடைவுகளை சீர்செய்யும் புதிய காலம் ஐரோப்பாவில் மலர்கிறது..
கொலன்ட விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்… காலத்தில் ஏற்பட்டுள்ள அலை அவரை உன்னதமான இடத்திற்கு தூக்கப்போவது தெரிகிறது.
பொறுத்திருந்து பாருங்கள்…
புலம் பெயர்ந்த தமிழருக்கும் இது மிகவும் நல்ல காலமாக அமையப்போகிறது.
அலைகள்
0 Responses to பிரான்சிய | கிரேக்க தேர்தல் ஐரோப்பாவில் பொருளியல் அதிர்ச்சி