இதுவரை காலமும் விக்கிலீக்ஸ் என்ற இரகசிய வெளியிடுகை உலகத்தை நாளுக்கு நாள் திகைக்க வைத்து வந்தது.
இப்போது அதிலிருந்து வேறுபட்டு வத்திக்கான் லீக்ஸ் என்ற புதிய அதிரடி நூல் வெளியாகி கத்தோலிக்க சமய தலைமைப் பீடத்தை ஓர் உலுக்கு உலுக்கியுள்ளது.
பாப்பரசரும் அவருடன் சம்மந்தப்பட்ட அதி உயர் பீடமும் பார்த்தால் அதிர்ச்சியடையக் கூடிய இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தி ஆதாரங்களுடன் இந்த நூல் வெளியாகியுள்ளது.
வத்திக்கானில் உள்ள அதி உயர் மதபீடத்தின் கிரிமினல் வேலைகள், உயர் பதவி வழங்குவதில் இருந்த புறக்கணிப்புக்கள் போன்ற பல விடயங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.
இத்தாலிய பத்திரிகை நிருபர் ஜின்லுக்கி நூஸி என்பவர் இதை வெளியிட்டுள்ளார்.
இந்த நூல் நீண்ட காலமாகவே வத்திக்கானில் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் பிரச்சனைகளை உலகின் முன்னால் ஒளியடித்துக் காட்டியுள்ளது.
இதில் உள்ள ஆவணங்கள் எப்படி இத்தாலிய பத்திரிகையாளர் கைகளுக்கு வந்தன என்ற கேள்வி வத்திக்கானை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சுமார் பத்து வருடங்களுக்கு முன் வத்திக்கானில் நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்தி கலக்கல் என்ற தமிழ் நூல் தமிழகத்தில் வெளியானது தெரிந்ததே.
இது ஒருவர் நேரடியாக கண்ட அனுபவங்களின் தொகுப்பாகும், படிக்கும் போது அதிர்ச்சியடைய வைக்கும் பல விடயங்களை உள்ளடக்கிய தமிழ் நூலாகும்.
அதுபோல மேலும் பல செய்திகள் அவ்வப்போது வத்திக்கான் பற்றி கசிந்துள்ளமை கவனிக்கத்தக்கது :
வத்திக்கானின் பண முதலீடு – இத்தாலிய மாபியாக்களின் தொழிற்பாடு – போலந்து வழியாக வத்திக்கானுக்குள் ரஸ்யாவின் கே.ஜி.பி உளவுப்பிரிவு நடாத்திய நாடகம் – இஸ்லாம் கிறீத்தவ மோதல் என்று ஏகப்பட்ட விடயங்கள் இதற்குள் குவிந்து கிடக்கின்றன.
காலம் மெல்ல மெல்ல இவற்றை அம்பலத்திற்குக் கொண்டுவர வாய்ப்புள்ளது.
மேலும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மதகுருக்களின் விவகாரங்களும் மலிந்து கிடக்கின்றன.
வருங்காலத்தில் மத ஆலயங்கள் மியூசியங்களாக மாறும் என்ற கணிப்பை நோக்கி மதங்களும் -மதுரை ஆதீன மடங்களும் நடக்கின்றனவா என்ற கேள்வியை இந்த நிகழ்வுகள் சாதாரண மக்களின் உள்ளத்தில் ஏற்படுத்துவதை மறுக்க இயலாது.
அலைகள்
0 Responses to வத்திக்கானுக்கு வத்தி வைக்க வந்த புதிய புத்தகம்