Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பாவித்தமை தொடர்பில் நீதியான பக்கச்சார்பற்ற விசாரணை அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இறுதி மோதல்களின் போது கொத்துக் குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தும் வகையில் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவே கருத்துவெளியிட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓமியோபதி சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, "போரால் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட பலரின் உடல்களின் செல் துண்டுகள் இருக்கின்றன. தேவையான மருத்துவத்தைப் பெறுவதற்கு மாவட்ட வைத்தியசாலைகளில் உரிய வசதி இல்லை. அதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான முழு விவரத்தையும் அரசாங்கம் திரட்ட வேண்டும்.

அதேவேளை, இறுதிப் போரில் கொத்துக் குண்டுப் பாவனை தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர், "கொத்துக்குண்டுகள் வீசப்பட்டமைக்கு ஆதாரபூர்வமான சாட்சிகள் எதுவும் இல்லை. மக்கள் வழங்கிய முறைப்பாடுகளில் மாத்திரமே இவை பற்றிக் கூறப்பட்டுள்ளன. அவை வீசப்பட்டாலும்கூட சர்வதேச சட்டத்துக்கு முரணானது இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

கொத்துக் குண்டுகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையே ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பரணகமவின் கருத்து வலியுறுத்தி நிற்கின்றது. இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் கோரியுள்ளார்.

உண்மையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவரவேண்டும் என அரசாங்கம் நினைக்குமானால், இது பற்றி பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

அதேவேளை, 'கோட்டா முகாம்கள்' என சித்திரவதை முகாம்கள் இருப்பதாக நாம் சுட்டிக்காட்டியபோதும் அவை மறுக்கப்பட்டன. எனினும், ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் இங்கு வந்தபோது அவற்றைப் பார்வையிட்டிருந்தனர். இதுபோன்ற விடயங்களில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துவதே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்.

சாலவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வீடுகள் திருத்தப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா வழங்கப்படுகிறது. எனினும், வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளைத் திருத்துவதற்காக கடன் வழங்கப்படுகின்றது. ஏற்கனவே வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வட்டி அறவிடப்படுகின்றது. இவ்வாறான பக்கச்சார்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமல், போரால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைத் திருத்த அரசாங்கம் இலவச உதவிகளை வழங்கவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவம் கொத்துக் குண்டுகளை பாவித்தமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்: சிவசக்தி ஆனந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com