Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று:-

முள்ளிவாய்க்காலின் மூன்றாம்ஆண்டில் நிற்கின்றோம்.
இதுவரை உலகில் சொல்லப்பட்;டதும் அகராதிக்குள் இருப்பவையுமான வார்த்தைகள்எதனாலும் முள்ளிவாய்க்கால் தரும் வெறுமையையும்,திகைப்பையும் பெரும்சோகத்தையும் கூறிவிடமுடியாது. எத்தனை காலமானாலும் அணைக் கமுடியாத தீயை எம் வாழ்வினுள் வீசி எறிந்து போய் இருக்கிறது முள்ளிவாய் க்கால்.

இனம்ஒன்றின் நம்பிக்கைக்கூறுகள் கொலுகொலுத்து தகர்ந்தநாள் அது. சின்னஞ்சிறு குழந்தை களையும்,தள்ளாத வயதினரையும்,உயிருக்காக ஓடிஓடி பதுங்குகுழிகளுக்குள் புகுந்தமக்களையும்கொன்றுகுவித்து அதன்மீது ஏறிநின்று இந்த சிங்களம் வெற்றிக்கொடியை நாட்டியபோது ஏற்பட்டஅதிர்ச்சியைவிட,அந்த கொடூரத்தை சர்வதேசம் மௌனமாக அங்கீகரித்து நின்ற குரூரம் இன்னும் அதிர்ச்சியை தந்தது.தந்துகொண்டும் இருக்கிறது.
முள்ளிவாய்க்காலின் மூன்றுஆண்டுகளுக்கு பின்பாக எங்கு நிற்கிறது எம் இனம்.தமிழீழம் முழுமையும் சிங்களதேசத்தின் படைகளின் கொடும் பிடிக்குள் விழுந்துகிடக்கிறது.பாரம்பரிய வாழ்விடம் என்ற சொற்தொடருக்குள் இருக்கும் தேசியஇனத்துக்கான அடையாளத்தைதுடைத்தெறிந்துவிட மிக மும்முரமாக தமிழர் அல்லாதோரை கொண்டுவந்து குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.எங்கள் நிலம் என்றும் எங்கள் மண் என்ற நினைப்பு இனி ஒருபோதும் தமிழர்களின் மனதில் தோன்றவே கூடாது என்பதற்காக பல் இன கலப்பு பிரதேசங்களாக வடக்கு-கிழக்கை மாற்றிவருகிறார்கள்.

இது புறம் இருக்க..

முள்ளிவாய்க்காலில் நடந்தது மாத்திரமே இனஅழிப்பு என்று நாம் உரத்து குரல் எழுப்பி வரும் இந்த மூன்றுவருடங்களில் இனஅழிப்பும் இனசுத்திகரிப்பும் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.இதற்கு எதிராக எழுப்பபடும் சிறிய முனகல்கூட உடனடியாக அழிக்கப்பட்டு மர்மமரணம் என்றும் வாவிக்குள் பிணம் என்றும் பாழடைந்த கிணற்றுக்குள் பிரேதம் என்றும் பதியப்பட்டு முடிக்கப்படுகின்றன.புதைகுழிக்குள் மண்போட்டு மூடப்படுகின்றன. தமிழர் தாயகத்தின் மண்ணையும் கடலையும் நம்பி அதிலே தமது உழைப்பை தந்த மக்களின் நிலங்களும் கடலை அண்டிய பிரதேசங்களும் சிங்கள ஆயுதப்படைகளின் துணையுடன் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.இவை எல்லாவற்றையும்விட மரணம் எந்த நேரமும் யாருக்கும் எப்போதும் எப்படியும் நேரலாம் என்ற மரணஅச்சுறுத்தல் தமிழர்கள் அனைவருக்குள்ளும் புகுத்தப்பட்டுள்ளது.

சிங்களநுகர்வு பொருட்களுடன் சிங்களகலாச்சாரம் பௌத்த திணிப்பு என்பன நிறைந்ததாகவே தமிழரின் தினசரி நுகர்வும் வாழ்வுத்திசையும் மாற்றப்பட்டுவருகின்றது.இந்த நிலைமைகள் இன்னும் சிறிதுகாலம் தொடர்ந்தால் ஈழத்தமிழ்தேசிய இனம் என்பதே இல்லாது ஒழிக்கப்பட்டுவிடும் அபாயம் தெரிகிறது.

நேற்று:-

உலக விடுதலைவரலாற்றில் ஒரு இனம் தனது விடுதலைக்காக இத்தனை தூரம் சென்றிருக்குமா என்று விழிவிரிய வைக்கும் தியாகங்களும் அர்ப்பணங்களும் நிறைந்ததாக தமிழீழவிடுதலைப்புலிகளின் போராட்டவரலாறு திகழ்கிறது. தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி பழைய பாராளுமன்றபோராட்ட தலைமை ஓய்ந்து உட்கார்ந்த வேளையில் எழுந்த பிள்ளைகள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைக்காக பயணித்தார்கள்.

விடுதலைக்காக இந்த இனம் கொடுத்த விலைகள் மிகப்பெரியது.விடுலைக்காக இந்த இனம் சென்ற தூரம் மிகமிக கனமானது.மண்ணின் விடுதலைக்கான போராட்டத்தில் விண்ணிலும் ஏறிய இதன் விடுதலைவீரர்கள் இன்னொரு புறத்தில் நீருக்கும் கீழேயும் மூழ்கி விடுதலைக்காக சமராடினர்.இந்த புள்ளிவரைதான் விடுதலைப்பாதை என்றும் இவ்வளவுதூரம்தான் விடுதலைக்கான பாதை என்று எதுவுமே வரையறுக்கப்பட்டு இருக்கவில்லை.விடுதலையை அடைவதற்கு எது எது சாத்தியமோ அத்தனையையும் செய்திருந்தது இந்த இனம்.எல்லாவிதமான முயற்சிகளையும் செய்திருந்தது.
ஒற்றை மனிதன் ஒருவனின் நெஞ்சுக்குள் பிரவாகம் எடுத்த உறுதியுடனும் இலட்சிய தெளிவுடனும் ஆரம்பித்த இந்த விடுதலைப்போராட்டம் மனிதவரலாறு காணாத ஒரு முயற்சியை தமது மக்களின் விடுதலைக்காக எடுத்திருந்தது. வேட்டைத்துப்பாக்கியின் தோட்டாக்களை திரும்பவும் பாவிப்பதில் ஆரம்பித்த இதன் முயற்சியும் தேடலும் வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே உரிய நீர்மூழ்கி தொழில்நுட்பத்தையும் விடுதலைக்காக கட்டிஅமைத்திருந்தது.கைத்துப்பாக்கிகளே மிக அரிதாகவும் கைக்கு எட்டாமலும் இருந்த ஒரு காலகட்டத்தில் 70களின் இறுதியில் விமானஓட்டியாக பயில்வதற்காக ஒருவரை அனுப்பிய தலைமையின் தீர்க்கதரிசனமும் விடுதலைக்கனவும் கொண்டதாக இருந்த போராட்டம் இது.

மரபுரீதியான படைக்கட்டுமானங்களையும் படைப்பிரிவுகளையும் அமைத்து அதன் உச்சமாக விமானப்படையையும் வானத்தில் வலம் வரவிட்டிருந்தது.வானத்திலும் விடுதலையின் ஆளுமை வீச்சை தெரிவித்திருந்தது. எதிரிகளின் படைச்சமல நிலைக்கு சமனான படைக்கட்டமைப்பு மட்டும் இல்லாமல் எமது மக்களின் வாழ்வுநிலையை உயர்த்துவதற்கான அனைத்து சமூககட்டமைப்புகளையும் அமைத்திருந்தது.பிறந்த ஒரு குழந்தையில் இருந்து மரணிக்கும் ஒரு முதியவர்வரை அனைவர்க்கும் தேவையான எத்தனையோ கட்டமைப்புகளையும் அதனூடான உதவிகளையும் வழங்கி ஒரு தேசமாகவே எழுந்து நின்றிருந்தது.மிக நீண்ட காலமாக அடிமைப்பட்டிருக்கும் ஒரு இனத்தில் இயல்பாகவே தோன்றக்கூடிய சமூக குறைபாடுகளையும் மூடத்தனங்களையும் உடைத்தெறிந்து விடுதலைக்கு அண்மித்த ஒரு இனமாக நிற்கவைத்தவர்கள் எமது வீரர்கள்.

எல்லாவற்றிலும் மேலாக இதன் விடுதலைப்போராட்டவீரர்கள் தமது போர்ப்பாதையில் தியாகமும் அர்ப்பணமும் இதுவரை சொல்லாத தூரத்துக்கும்,; இதுவரை செல்லாததுமான தூரத்துக்கும் மிக அப்பால் சென்று தம்மை அர்ப்பணித்து விடுதலையை வென்றெடுக்க முயற்சித்தனர். வரையறுக்கபட்டதும் அங்கீகரிக்கப்பட்டதுமான எத்தனையோ தேசங்களைவிட அழகானதும் நீதியானதும்,ஊழலற்றதுமான ஒரு தேசத்தை நிறுவி அதனை நடாத்தி காட்டியது தமிழரின் விடுதலைஅமைப்பு. நேற்று எங்கள் தேசம் சிதைக்கப்பட்டும் எமது மக்கள் சிதறடிக்கப்பட்டபோதும் உலகம் என்ன விதமாக நடந்துகொண்டது என்று பாருங்கள். இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து துடைத்தெறிவேன் என்று பகிரங்கமாகவே பிரகடனம் செய்யும் ஈரானும்,எந்த நேரமும் ஈரானின் மீது அணுகுண்டை வீசிவிடுவேன் என சொல்லிக் கொண்டே இருக்கும் இஸ்ரேலும் சிங்களதேசத்துக்கு நேற்று எப்படி ஒன்று சேர்ந்து உதவினார்கள் என்று பாருங்கள்.
எப்போதும் பகைமுட்டிக் கிடக்கும் தென்கொரியாவும் வடகொரியாவும் நேற்று எப்படி சிங்களம் வெல்வதற்காக ஒருமித்து உதவினார்கள் என்று பாருங்கள்.காஸ்மீர் பிரச்சனைக்காகவும் புனித யுத்தத்துக்காகவும் அணு ஆயுதங்களை கூர்தீட்டிக் கொண்டேயுத்தசங்கு முழங்க எந்தநேரமும் தயாராக இருக்கும் பாகிஸ்தானும் இந்தியாவும் நேற்று எப்படித்தான் ஒரு கோட்டில் சிங்களத்துக்கு உதவ ஒன்றாக நின்றார்கள் என்று பாருங்கள். முதலாளித்துவ மேற்குலகும்,சோசலிசம் வாயளவில் பேசும் செஞ்சீனாவும் எப்படித்தான் ஓடிஓடி போட்டி போட்டுக்கொண்டு சிங்களத்துக்கு உதவினார்கள் என்று பாருங்கள்.

நாளை:-

இந்த முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வுகளின் பின் என்ன செய்ய போவதாக உத்தேசித்து இருக்கின்றோம்.அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவுவரை தூங்கியும் சோம்பியும் கிடக்க போகின்றோமா..இல்லை.இந்த நினைவுநாளிலேயே அதற்கான உறுதியை எடுக்க போகின்றோமா?பாரம்பரிய விடுதலைப்போராட்டங்களில் இருந்து மிகவும் வேறுபட்ட முறையிலான போராட்ட முறை ஒன்றை கைக்கொள்ள வேண்டிய தேவையை காலம் எல்லோர் கையிலும் திணித்துள்ளது. பேரினவாத சிங்களபேயரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது தாயகத்து மக்களின் அத்தியாவசிய தேவைகளை ஏதேனும் ஒரு விதத்தில் நிவர்த்தி செய்து அவர்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கியபடியே போராட்டத்தையும் கையிலெடுக்க வேண்டிய இரட்டை பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

எந்த சர்வதேசத்தின் நாடுகளுக்கான இறையாண்மை வரையறைகளை தனது இனஅழிப்புக்காக சிங்களம் பாவித்ததோ அதே சர்வதேச சட்டங்களில் இனஅழிப்புக்கு,போர்க்குற்றத்துக்கு என இருக்கும் சரத்துகளை கொண்டே சிங்களதேசத்தின் தமிழீழம் மேலான ஆதிக்கத்தை ஒழிக்க பாடுபடுவோம்.அப்படி செயற்படும் அமைப்புகளுக்கு ஆதரவு வழங்குவோம்.முள்ளிவாய்க்காலில் உச்சமான இனஅழிப்பு என்பது அறுபதுவருட வரலாற்றை கொண்டது.இந்த அறுபதுவருட இனஅழிப்பில் அழிக்கப்பட்ட அனைத்து தமிழ்மக்களதும் பெயரால் முள்ளிவாய்க்கால் நினைவில் உறுதி எடுப்போம்.

0 Responses to எதுவரை சென்றோம்..... எங்கு நிற்கின்றோம்..... ச.ச.முத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com