அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லரி கிளிண்டன் அம்மையார் தனது இரண்டு நாள் இந்தியப் பயணத்தின் நிறைவில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து வழங்கிய செய்தியாளர் மாநாட்டில், வர்த்தகம், தேச பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு என பல பரிமாணங்களில் இந்திய அமெரிக்க உறவு பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது பற்றியும் தனது இந்தப் பயணத்தின்போது இந்திய வெளியுறவு அமைச்சருடன் தான் விவாதித்ததாக ஹில்லரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
இரான் அணு ஆயுதத்தை அடைவதைத் தடுக்கின்ற சர்வதேச முயற்சிகளில் இந்தியாவும் நல்ல பங்காற்றக்கூடிய ஒரு நாடாக அமெரிக்கா காண்கிறது என்று ஹில்லரி கூறினார்.
இரானுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருவது அதன் எண்ணெய் வளம்தான். இந்நிலையில் இரானிடம் இருந்து எண்ணெயை வாங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. அப்போதுதான் இரான் மீது அழுத்தம் அதிகரிக்கும் என அமெரிக்கா வாதிடுகிறது.
இரான் அணு ஆயுதம் பெறுவதை தடுக்கும் முயற்சிகளில் அமெரிக்காவுக்கு உறுதுணையாக இந்தியா செயல்பட்டுவருவதாக கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
இரான் அணுஆயுத விவகாரத்துக்கு ஒரு நல்ல தீர்வு எட்டப்படும் வகையில் அதன் மீது அழுத்தம் குறையாமல் பார்த்துக்கொள்ளும் விதமாக இரானிடம் இருந்து பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியா பெட்ரோலியம் வாங்கக்கூடிய மாற்று இடங்கள் பற்றி விவாதிப்பதற்காக விசேட தூதுவர் ஒருவரை அமெரிக்கா இந்தியாவுக்கு அடுத்த வாரம் அனுப்பிவைக்கும் என்றும் கிளிண்டன் அம்மையார் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா, இந்தியா தனது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய வெளிநாட்டு இறக்குமதிகளை பெரிதும் சார்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
அதேநேரம் இந்தியா தனது எரிசக்தி தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதற்குரிய ஒரு முக்கிய ஆதாரமாக இரான் அமைந்துள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.
இந்தியா வெளிநாடுகளில் இருந்து பெட்ரோலிய எண்ணெய் வாங்கும் அளவுது வருடம்தோறும் அதிகரித்துவருகிறது என்றாலும் இரானிடம் இருந்து இந்தியா பெட்ரோல் வாங்கும் அளவு குறைந்துவருகிறது என்றூ கிருஷ்ணா குறிப்பிட்டார்.
ஹில்லரி கிளிண்டன் தனது பயணத்தின் அடுத்த கட்டமாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்கிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வரும் ஜூன் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார்.
0 Responses to இரானிடம் பெட்ரோலியம் வாங்குதல் கிளிண்டன் | கிருஷ்ணா கருத்து