இலங்கையில் புனர்வாழ்வு பெறாத விடுதலைப் புலிகள் என்று அரசால் கூறப்படுபவர்கள் சிலர் அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா சம்பந்தருக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையே நடைபெற்ற ஒரு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அநேகமானவர்கள் திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர்கள் என்றும், தங்களுடைய தொழிலை பார்த்துக் கொண்டு ஒழுக்கமாக வாழ்ந்து வந்தவர்கள் என்றும் தான் பாதுகாப்புச் செயலரிடம் தெரிவித்ததாக சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அவர்களை தடுத்து வைப்பதற்கோ அல்லது கைது செய்வதற்கோ எந்தவிதமான காரணமும் இல்லை என்றும், அவர்களுக்கு புனர்வாழ்வு தேவையில்லை என்றும் தான் எடுத்துக் கூறியதாகவும் அவர் கூறுகிறார்.
எனவே அவர்கள் தாமதமில்லாமல் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலரிடம் தெரிவித்ததாகவும் சம்பந்தர் கூறுகிறார்.
அவர்களின் கைதுக்கான காரணமும் தமக்கு விளக்கப்பட்டதாகவும், எனினும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி,அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தனக்கு அவர் வாக்குறுதி அளித்ததாகவும் கூட்டமைப்பின் தலைவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், திருகோணமலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலேயே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என்றும், போருக்கு பின்னர் இன்னமும் அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து எந்த பேச்சும் இடம்பெறவில்லை எனவும் சம்பந்தர் கூறுகிறார்.
ஆனால் இதற்கு முன்னர் அந்த விஷயம் குறித்து பேசப்பட்டதாகவும், ஆனாலும் அரச தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் இராணுவப் பிரசன்னம் போன்றவை குறித்து பாதுகாப்புச் செயலருடன் நடைபெற்றக் கூட்டத்தில் பேசுவதற்கு வசதிகள் இருக்கவில்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
0 Responses to சம்பந்தர் | கோட்டாபய சந்திப்பு பேசப்பட்டது என்ன?