சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப் பரப்புரையின் மூலம் சர்வதேச வல்லரசு நாடுகளின் சகலவிதமான ஆதரவோடு, ஒருபுறம் வரலாறு காணாத பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்புப் போரை மேற்கொண்டதோடு மறுபுறம் பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு இனவழிப்பை நிகழ்த்தியது.
வட்டக்கச்சி, முரசுமோட்டையிலிருந்து வெலிக்கண்டல், புளியம்பொக்கணை, இருட்டுமடு, ஒலுமடு, தர்மபுரம், நெத்தலியாறு, சுண்டிக்குளம், கல்லாறு, விசுவமடு, தொட்டியடி, பன்னிரண்டாம்கட்டை, ரெட்பானா, பிரமந்தனாறு, தேராவில், உடையார்கட்டு, வள்ளிபுரம், சுதந்திரபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை மற்றும் முள்ளியவளை, வற்றாப்பளை என அங்கே ஒவ்வொரு கிராமங்களிலும் வீதிகளிலும் செறிவாகப் பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகள் மீது சிறிலங்காப் படையினர் பரவலான எறிகணைத் தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் நிகழ்த்தி பொதுமக்களைக் கொல்லுகின்ற வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்தப் பிரதேசங்களில் மக்கள் நிலைகள் மீது சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டபோதிலும், சற்று இடவசதி இருந்ததாலும் பொதுமக்கள் பதுங்குகுழிக்குள் காப்பெடுத்துக் கொண்டதாலும் மக்களுக்கு சுமாரான உயிரிழப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் இலங்கையரசு புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய 12 கிலோமீற்றர் நீளம்கொண்ட பகுதிகளைப் ‘பாதுகாப்பு வலையமாக’ அறிவித்தது. அதற்கு முன்னர் சுதந்திரபுரத்தை ‘பாதுகாப்பு வலயமாக’ இலங்கையரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்தப் பகுதியில் இலங்கைப் படையினரின் மோசமான எறிகணை வீச்சுக்களால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனால் இலங்கையரசு அறிவித்த ‘பாதுகாப்பு வலையத்திற்குள்’ செல்ல மக்கள் தயங்கியபோதிலும், இலங்கைப் படையினர் ‘பாதுகாப்பு வலையம்’ இல்லாத ஏனைய பகுதிகளில் குறிப்பாக மக்கள் வாழும் பகுதிகளில் கடுமையான எறிகணை வீச்சை நிகழ்த்தியதால் வேறுவழியின்றி அனைத்து மக்களும் அரசு அறிவித்த அந்தப் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று தஞ்சமடைந்தார்கள்.
ஆனால், அரசு அறிவித்த அந்தப் ‘பாதுகாப்பு வலையத்துக்குள்’ தான் இனிமேலும் இல்லாதவாறான ஆட்டிலறி, மோட்டார், பல்குழல் எறிகணை வீச்சுக்களையும் கனரக, இலகுரகப் படைக்கலன்களையும் கொண்டு மிகச்செறிவான தாக்குதல்களை இலங்கைப்படை மக்கள்மீது நிகழ்த்தியது.
இதனால், ஒவ்வொரு மணித்துளியும் மக்கள் அங்கே கொல்லப்பட்டும் காயப்பட்டுக் கொண்டுமிருந்தனர். இறுதியாக புதுமாத்தளனிலிருந்து படிப்படியாகப் பின்வாங்கி முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பிற்குள் மூன்று இலச்சக்கணக்கான மக்கள் ஒதுங்கினர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை நிலைகுலையச் செய்யவேண்டுமானால் அல்லது நிர்மூலமாக்க வேண்டுமானால் அவர்களது இதயமாகவும் ஒருமித்த தாங்குசக்தியாகவும் விளங்கும் அந்த மக்களைத் தாக்கினாலே அதை சாத்தியப்படுத்த முடியுமென்பதை இலங்கைப் படையினர் வல்லரசுநாடுகளின் துணையோடு நன்கறிந்து இந்தத் திட்டமிட்ட இனப்படுகொலையை நிறைவேற்றினர்.
ஏனெனில், 2006-யூலை மாவிலாற்றிலிருந்து 2009-ஏப்பிரல் ஆனந்தபுரம் வரைக்குமான சுமார் மூன்றுவருடகாலப் போரில் ஒவ்வொரு நிலப்பரப்பையும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கான நூற்றுக்கணக்கான சமர்களில் இராணுவத்தினர் பல்லாயிரக்கணக்கான உயிர்விலையைக் கொடுக்க நேர்ந்தது.
மூன்று வருடங்களாக நீடித்த இந்தப் போரில் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். படையினரின் இறப்புகள் தென்னிலங்கை மக்களுக்குத் தெரியாதவாறு மகிந்தவின் குடும்ப அரசபயங்கரவாதம் மிகவும் இரகசியமாக மூடிமறைத்தது.
விடுதலைப் புலிகளுக்கு எறிகணை வெடிபொருள் பற்றாக்குறை பின்வாங்கல்களுக்கு மிக மூலக்காரணியாக இருந்தபோதிலும், தாமே சொந்த மண்ணிலே சொந்தவளத்தைப் பயன்படுத்தி பல எறிகணைகள், வெடிபொருட்கள் மற்றும் படையப்பொருட்களை உற்பத்திசெய்து முழுமையான சக்தியையும் பயன்படுத்தி இறுதிவரை போரிட்டார்கள். எறிகணைத் தாக்குதல்களுக்கு மாற்றீடாக விடுதலைப்புலிகள் சிறப்புக் குறிச்சூட்டு அணிகளைiயும் கனரகப் பீரங்கி அணிகளையும் உருவாக்கி மன்னாரிலிருந்து இறுதிவரைக்குமான சமர்களில் பல்லாயிரக்கணக்கான சிறிலங்காப் படையினரைக் கொன்று குவித்தனர்.
இந்த நீண்ட மரபுவழி மறிப்புப்போரின்போது, பல ஆயிரக்கணக்கான போராளிகள் எமது சுதந்திர இலட்சியத்திற்காக போராடி வீரமரணத்தைத் தளுவியுள்ளார்கள். இவர்கள் தங்கள் இறுதி மூச்சுவரை இருபத்துநான்கு மணிநேரமும் பெரும் சமரளுத்தங்களின் மத்தியிலும் சளைக்காது போராடினார்கள்.
ஆனந்தபுரத்தையடுத்து, முல்லைத்தீவின் சாலைப் பகுதியிலிருந்து வட்டுவாகல் வரைக்கும் மே-17, 2009 வரை ஒவ்வொரு அடி நிலத்தைப் படையினர் கைப்பற்றுவதற்கும் தம்மில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிடவேண்டியிருந்தது. போரில் வெற்றியின் தருணங்கள் என்பது இறுதிக்கணத்தில்கூட மாறமுடியும். இதற்கு விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் பல நிகழ்வுகள் உண்டு.
இந்தத் தருணத்தை விட்டால் இனி ஒருபோதும் விடுதலைப்புலிகளை அழித்துவிட முடியாதென்ற உண்மையை அரசதரப்பு நன்கறிந்திருந்தது. முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் விடுதலைப்புலிகள் ஏதோவொரிடத்தால் தாக்குதல்செய்து போரைத் திசைமாற்றிவிடக் கூடாதென்பதற்காக பொதுமக்கள் மீது மிகமோசமான திட்டமிட்ட தாக்குதல்களைச் செய்தனர்.
விடுதலைப்புலிகளை மக்கள் மத்தியில் வெறுப்பையுண்டுபண்ணி, அவர்களை மக்கள் மத்தியிலிருந்து தனிமைப்படுத்தினாலே இந்தப்போரை வெல்லமுடியுமென்ற ஒரேநோக்கத்திற்காக அந்த மக்களைத் தாக்கி, ஒரு இலச்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களைப் படுகொலைசெய்து, மாபெரும் போர்க்குற்றத்தை இழைத்தனர் இலங்கைப்படையினர்.
இதற்காக அங்கே மக்கள் பதுங்குகுழிக்குள்கூட ஓய்வெடுக்க முடியாதவாறு எல்லா முனைகளிலிருந்தும் சகலவிதமான எறிகணைகளாலும் படைக்கலன்களாலும் மக்கள் மீது செறிவாகத் தாக்கிக்கொண்டேயிருந்தார்கள். காயப்பட்ட மக்கள் சிகிச்சைபெற முடியாதவாறு மருத்துவமனைகளைத் தாக்கினார்கள். அந்த மக்களுக்கான மருந்து விநியோகத்தைத் தடுத்தார்கள்.
காயப்பட்ட மக்களை வெளியே அப்புறப்படுத்துவதற்கான சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் கப்பலின் வரவைத் தடுத்துநிறுத்தினார்கள். அந்த மக்களுக்கு வெளியாலிருந்து தருவிப்பதற்கான உணவு விநியோகத்தைத் தடுத்தார்கள். பட்டினிச்சாவைத் தடுப்பதற்காக ஒருவேளை உணவு வாங்குவதற்காக பசியோடு வரிசையாக குழுமிநின்ற மக்கள்மீது மிகவும் துல்லியமாகத் தாக்கினார்கள். மொத்தத்தில் 2008 இன் இறுதிக்காலத்திலிருந்து மே-18, 2009 இறுதிநாள்வரை அவர்கள் தொடர்ந்து திட்டமிட்ட பாரிய தாக்குதல்களை மக்கள்மீது நிகழ்த்திக்கொண்டேயிருந்தார்கள்.
இவ்வாறாக இலங்கை அரசு ஒரு இராணுவ வெற்றியைப் பெற்றுவிடுவதற்காக மிகக் கோழைத்தனமாக அந்த அப்பாவிப் பொதுமக்களை வதைத்துக் கொன்றது. தமிழீழப் போராட்டத்தின் எந்தச் சமரும் சந்தித்திராத உயிர், உடல் இழப்புக்களை இலங்கைப் படையினர் அங்கே எமது மக்களுக்கு இழைத்தனர். எங்களுடைய உறவுகள் அங்கே இரத்த ஆற்றில் நீந்தினர். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் இரகசியமாக நடந்தவையல்ல.
இருந்தாலும் அவர்கள் மிக உறுதியோடுதான் இருந்தார்கள். எதுவானாலும் வரட்டுமே என இறுதிவரைக்கும் நின்று எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போரை உலகறியச் செய்துள்ளார்கள். சிங்கள அரசபயங்கரவாதத்தின் உண்மைத் தோற்றத்தை உலகுக்குக் காட்டியுள்ளார்கள். சிங்களத்துக்கு சகலவகையிலும் உதவிய நாடுகளை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளனர்.
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் மண்ணிலே கடைசிநிமிடம் வரை சாவைத் துச்;சமாக எண்ணி சழைக்காது போராடிய எங்கள் வீரத் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பெற்றுவளர்த்து அவர்களோடு தூணாக நின்ற பொதுமக்கள் அனைவரினதும் தியாகங்கள் என்றும் உலக சரித்திரத்தில் நிலைத்துநிற்கும்.
கடந்த மாதங்களாக பல்வேறு இணையத்தளங்களில் தலைப்புச் செய்திகளாக வாசிக்கப்பட்ட விடையம், “ஐ.நா. மனிதவுரிமை சபையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எடுத்தது” என்பதே. நீதி வேண்டிப் போராடும் அனைத்துத் தமிழ் மக்களும் இந்தச் செய்திகளை வாசிக்கும் பொழுது மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஆனால், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் தீர்மானத்தில் என்ன உள்ளடக்கி இருக்கின்றது என்பதை தெளிவாக உற்று நோக்குவோமானால், அதில் ஆயிரமாயிரம் தமிழ் மக்களை கண்மூடித்தனமாய்க் கொன்றுகுவித்த சிங்கள இனவெறியரசு தம்மைத் தாமே விசாரணை செய்வதாக உருவாக்கிய இராஜதந்திர முறையில் கூறப்படும் “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை" ஆகும்.
அதாவது கொலைகாரன் தன்னையும் தனக்கு உதவியாக இருந்த சகாக்களையும் காப்பாற்றுவதற்கு தானே எழுதிய தீர்ப்பே அதில் காணப்படுகின்றது. அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தச் சொல்லியே அமெரிக்காவின் தீர்மானம் அடிப்படையாக அமைந்திருக்கின்றது. இதுவே இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் அந்தத் “தீர்மானம்" ஆகும்.
இலங்கையரசின் “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை" பல்வேறு சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களாலும், பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகளாலும், அரசியல் பிரமுகர்களாலும் நிராகரிக்கப்பட்டு, அவர்களால் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றே வலியுறுத்தப்படுகின்றது. அத்தோடு, நிலத்திலும் புலத்திலும் ஈழத்தமிழ் மக்கள் இலங்கையரசின் அறிக்கையை உள்ளடக்கத்தின் அப்பால் முற்றாக நிராகரிக்கின்றனர்.
அதன் அடிப்படையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் தமது அரசியல் வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்கின்றனர். ஐ.நா. முன்றலில் ஈகைச்சுடர் முருகதாஸ் திடலில் பல்லாயிரக்கணக்கான ஐரோப்பிய புலம்பெயர் தமிழ்மக்கள் திரண்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி தமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார்கள்.
ஆனால், ஒருசில தமிழ் அமைப்புகள் அமெரிக்காவின் தீர்மானத்தை (இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை உள்ளடக்கி அமைந்திருக்கும்) வரவேற்பதாக அறிவித்துள்ளார்கள்.
அதாவது ஆகக்குறைந்தளவு போர்க்குற்ற விசாரைணையைக்கூட உள்ளடக்கி எழுதப்படாத அமெரிக்காவின் சுயநலம் கருதி கொண்ட அறிக்கை, ஈழத்தமிழர்களின் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனவழிப்பையும் அத்தோடு ஈழத்தமிழர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெறுவதற்கான சுதந்திரத்தையும் குழிதோண்டிப் புதைப்பதாகவே கருதவேண்டும்.
ஆரம்பத்தில் இருந்து அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட இலங்கையரசின் அறிக்கை அமெரிக்காவின் தீர்மானத்தால் அங்கீகாரத்தைப் பெறுகின்றது.
இன்றுவரை எந்தவித தயக்கமும் அல்லாமல் தமது விடுதலை அவாவை தமிழ்மக்கள் நிலத்தில் தெரியப்படுத்தி உள்ளார்கள். தமிழ் ‘சிவில்’ சமூகம் இதை ஆவணமாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பியுள்ளது.
இன்றுவரை எந்தவொரு சர்வதேச வல்லரசு நாடுகளின் சுயநல விருப்புக்கும் சிக்காமல் தமது சுதந்திர தமிழீழத்தை அடைவதற்கு நீதியான, உண்மையான, நேர்மையான விடுதலைப் போராட்டத்தையே ஈழத்தமிழர்கள் நடாத்துகின்றார்கள்.
எந்தவொரு வரலாற்றிலும் இடம்பெறாத உன்னதமான போராட்டமே ஈழத்தமிழர்களின் போராட்டம். அதற்காகவே தமது உயிர்களை முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் அர்ப்பணித்தார்கள்; அதனூடாகத் தமது உன்னத இலட்சியத்தை உயிர்வாழ வைத்தார்கள். அந்த உன்னத இலட்சியத்தை அடைவதற்கே உலகத் தமிழ்மக்கள் தமது ஆணையையும் ஆதரவையும் கொடுத்தார்கள்.
அரசியல் செய்யவேண்டும், சர்வதேசம் எம்முடன் பேசவேண்டும் என்ற காரணத்தால் நாம் உண்மைகளை மறைக்கமுடியாது; அநீதியை ஏற்கமுடியாது. அதன் பொருட்டு பின்விளைவுகளை ஆராயாமல் அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் ஈழத்தமிழர்களின் விடுதலைப் பேரவாவை சவப்பெட்டிக்குள் தள்ளிவிடும். ‘நினைப்பது கிடைக்கவில்லை என்பதால் கிடைப்பதை எடுப்போம் என்பதற்கு’ இது விளையாட்டுப்பொருள் அல்ல. இது ஒரு இனத்தின் இருப்புக்கான விடுதலைப் போராட்டம்.
வரலாறு எம்மை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. எமது தேசம், வரலாற்றில் என்றுமில்லாதவாறு மும்முனை நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. ஆயினும், உரிமைக்கான போராட்டம் எக்கட்டத்திலும் கைவிடப்படமுடியாதது. போராடுவோம்! இறுதி மூச்சுள்ளவரை, இலட்சியப் பயணத்தை தொடர்வோம்; போராடுவோம்! விடுதலைக்கான பாதையென்பது வீழ்ச்சிகளால் விலகுவதோ, துரோகங்களால் துவண்டுவிடுவதோ அல்லது பின்னடைவுகளால் பின்வாங்கி விடுவதோ அல்ல. மாறாக, தடைகளைத் தகர்த்து விழ விழ விடாமுயற்சியுடன் எழுவது.
பேரவலம், துக்கம், தோல்வியென்ற சொற்களைப் பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் வரலாற்றை நாம் குறைத்துக் கூறிவிடமுடியாது. எமது மக்கள் கண்டிராத பேரவலங்களோ, துக்கங்களோ அல்ல முள்ளிவாய்கால்;. எமது மண்ணிலே காலாகாலம் அவற்றைக் கண்டுபழகியவர்கள் எமது மக்கள். நாம் மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற ஒரு தேசிய இனம்.
எனவே, முள்ளிவாய்க்காலென்பது தமிழர் வீரத்தின் குறியீடாகப் பதிவுசெய்யப்படவேண்டும். அது ஈழத்தமிழரின் உரிமைப்போரட்டத்தை மற்றுமொரு பரிமாணத்திற்கு அழைத்துச்செல்கிறது. அந்தப் பரிமாணத்தினூடாக, எமக்குக் கிடைத்த வழிகளில் நாம் போராடவேண்டும்.
உண்மையில் முள்ளிவாய்க்கால் என்பது ஒரு முடிவல்ல் அது எமது ஆயுதப் போராட்டத்திற்குத்தான் காலவரையறையற்ற மௌனிப்பைக் கொடுத்ததேயொளிய எமது உரிமைப்போராட்டத்திற்கான முடிவைக்கொடுக்கவில்லை.
நாம் இன்றும் எமது உரிமைக்காக ஏதோவொருவடிவில் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். எமது சுதந்திர இலட்சியம் நிறைவேறும்வரை எமக்குக் கிடைத்த வழிகளில் நாம் தொடர்ந்து போராடுவோம்.
0 Responses to உரிமைப்போரை உலகமயப்படுத்திய முள்ளிவாய்க்கால் வீரம்! | கலைவண்ணன்