அரசாங்கம் புலம்பெயர் மக்களை இங்கு வந்து முதலீகளை செய்யுங்கள் என கூறிவிட்டு மறுபுறம் அவர்களை கடத்திக் கொலைசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கதிரன் கலைக்கழகத்தின் கதிரவன் சஞ்சிகையின் 10வதுவெளியீட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வாசிப்பு மனிதனை தூய்மையாக்க வேண்டும் என்றால் வாசிக்கும் வீதம் அதிகமாக இருக்கவேண்டும். கடந்த காலங்களில் மட்டக்களப்பில் பத்திரிகைகள் வாசிக்கும் வீதம் அதிகரித்துள்ளது.
நாங்கள் தமிழ் மொழியை எடுத்து நோக்குவோமாக இருந்தால் பேச்சுவழக்கில் இரு விதம் இருக்கின்றது. இந்த இந்த மொழியை பேசும் மூன்று தமிழ் இனம் இந்த ஈழத்திலே வாழ்ந்து கொண்டுள்ளது. மலையத்தில் ஒரு பேச்சுவழக்கு, யாழ்குடாவில் ஒரு பேச்சுவழக்கு மட்டக்களப்பில் ஒரு பேச்சுவழக்கு, மட்டக்களப்பிலும் பல்வேறு இடங்களில் பல்வேறு பேச்சுவழக்குகள் உள்ளன. இஸ்லாமிய சகோதரர்களிடையே பேச்சு வழக்குகள் இருக்கின்றன.
இவ்வாறு தமிழ் மொழியில் பல்வேறு பேச்சுவழக்குகள் உள்ளன. அவ்வாறு அந்ததந்த பிரதேசங்களில் உள்ள பேச்சுவழக்குகளை நாங்கள் வளர்ப்போமாக இருந்தால்,இவ்வாறான சஞ்சிகைகள் மூலம் அவற்றை வெளிக்கொணருவோமாக இருந்தால் அவை பாராட்டுக்குரியதாக இருக்கும்.
தற்போது ஊடகங்களை பொறுத்தவரையில் அனைவரும் ஒரு ஊடகத்தினை ஆக்கக்கூடியதாக நிலைமை மாறிவிட்டது. எனக்கு கணிணி அறிவு இருக்குமானால் நானும் ஒரு இணையத்தளத்தை உருவாக்க முடியும். ஆனால் சிலர் தனது கருத்தை வேறு ஒரு போலி அமைப்பு மூலம் வெளியிடும் நடவடிக்கைகளை சில ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவுள்ளது.
முகமூடி போட்ட அமைப்புக்களாக அறிக்கை விடுவது அவர்களைன் கோழைத்தனத்தை வெளிக்காட்டுகின்றது. சிலர் அறிக்கைகள் விடும்போது தமது பேச்சு மொழியிலேயே அறிக்கை விடுவதால் யார் அதனை செய்கின்றார்கள் என்று இலகுவாக கண்டறிய முடிகின்றது. உலகத்தில் இருந்து வெளிவரும் பல இணையத்தளங்களுடன் எனக்கு தொடர்பிருக்கின்றது.யார் என்ன இணையத்தளத்துக்கு அனுப்புகின்றார்கள் என்பது கூட எனக்கு தெரியவந்துள்ளது. இது ஒரு ஆரோக்கியமான விடயமாக இருக்கமுடியாது.
சில அரசியல்வாதிகள் தங்களால் நேரடியாக கருத்து கூறமுடியாமல் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அறிக்கையென்பது நிச்சயமாக தேவை. ஒரு அரசியல்வாதிக்கு இன்னும் பன்மடங்கு தேவை. அரசியலில் அறிக்கை விடுவதும் ஒரு அரசியல்தான். என்னைப் பொறுத்தவரையில் ஒரு விடயம் பிழையாக இருந்தால் நான் நெஞ்சுத்துணிவுடன் நேரடியாகவே எனது பெயரிலேயே அறிக்கைகளை வெளியிடுவேன்.
நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு கிடைக்குமாக இருந்தால், புலம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக முதலீடுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தால் இங்குள்ள வெளியீடுகளுக்கு பெரும் பங்களிப்பு ஆற்றுவார்கள்.
ஆனால் அரசாங்கம் புலம்பெயர் மக்களை இங்கு வந்து முதலீகளை செய்யுங்கள் எனகூறிவிட்டு மறுபுறம் அவர்களை கடத்திக் கொலைசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இந்தச் சம்பவம் அண்மையில் யாழில் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் இலண்டனில் இருந்து வந்த ஒருவர் பெரும் வர்த்தக நிலையம் ஒன்றை யாழில் நிர்மாணித்திருந்தார்.அதனை தங்களிடம் தருமாறு பலர் கூறியிருந்தனர். ஆனால் அதனை அவர் மறுத்திருந்தார். அவர் தற்போது அவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாத நிலை உள்ளது. இதுதான் இன்று இலங்கையில் இருக்ககூடிய வராலாறாக இருக்கின்றது.
நாங்கள் எமது வரலாறு, பண்பாடு, கலை, கலாசாரம், மொழி ஆகியவற்றை காப்பாற்ற வேண்டுமாகவிருந்தால் அதனை பாதுகாக்கக்கூடிய அரசியல் சக்தியை இனங்கண்டு இந்த அரசியல் சக்தியை பலப்படுத்தினால் மட்டுமே தமிழன் தமிழனாகவும் தமிழ் தமிழாகவும் வாழும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
புலம்பெயர் மக்களை முதலீடு செய்யுங்கள் என்று கூறிவிட்டு கடத்திக் கொலை செய்கிறது அரசாங்கம்!
பதிந்தவர்:
தம்பியன்
21 May 2012
0 Responses to புலம்பெயர் மக்களை முதலீடு செய்யுங்கள் என்று கூறிவிட்டு கடத்திக் கொலை செய்கிறது அரசாங்கம்!