நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்?
முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப் பொறுத்தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க பார்வையாளர்களாக ஏராளமானோர் தொலைதூரத்தில் இருந்தார்கள். இந்த உண்மை, ஐ. நா. அவையின் மனிதாபிமானச் செயல்பாடுகளுக்கான தலைவர் சர் ஜோன் ஹோல்ம்ஸ் சானல் 4இல் வெளிப்படையாகக் கூறிய ஒரு கருத்தில் மிக நன்றாகவே பிரதிபலித்தது:
‘சர்வதேசச் சமூகத்திலிருந்து யாராவது தடுத்து நிறுத்துவார்கள் என்று இலங்கை அரசு ஒருபோதும் நம்பவில்லை. அதன் கணிப்பு சரியானதே. ஆனால் சில ராஜதந்திர ஆட்டங்கள் இதைச் சுற்றி நடந்தன.’ ஆகவே நீண்ட காலமாக நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போர் ரத்தக்களரியில் முடிந்தமை வழமையான, தர்க்கரீதியானது என நாம் பார்க்க முடியாது. மாறாகக், கள்ளத்தனமாகக் கணக்கிடப்பட்ட சர்வதேச அரசியல் விளையாட்டின் விளைவாகவே பார்க்கப்பட வேண்டும். உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், பொலிசார் அடித்தபோதும் துன்புறுத்தியபோதும் இழுத்துக் கைதுசெய்தபோதும், அந்தந்த நாடுகளின் வீதிகளில் பல மாதங்களாக நின்றனர். ஓலமெழுப்பினர். விம்மினர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது எதிர்த்து நின்றனர். பொதுமக்கள் சதுக்கங்களைக் கைப்பற்றியிருந்தனர். விரைவு நெடுஞ்சாலைகளை மறித்தனர். பலர் தீக்குளித்தனர். இவை எங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் மைய நீரோட்ட ஊடகங்கள் இவற்றுக்கு எத்தகைய முக்கியத்துவமும் வழங்கவில்லை. இனப் படுகொலை இடம்பெறுவதைப் பற்றி உணர்வுபூர்வமான செய்திகள் எதையும் வெளியிடவில்லை.
இப்படியான சூழ்நிலையில்தான் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்ற முதலாவது வீடியோ முக்கியத்துவம் பெறுகிறது. இது வெளிவந்தமை அன்றைய சூழலை ஆட்டங்காணவைத்தது. இலங்கை அரசாங்கத்தைத் தவிர வேறு எவருக்கும் அந்த வீடியோவைப் பொய்யெனச் சொல்லிப் புறம் தள்ளிவிடுவதற்கான துணிவு இருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் வழமைபோலவே இதையும் மறுத்தது. இப்படி மறுப்பது என்பது அவர்களுக்கு ஒரு சடங்கு மாதிரி.
இந்த வீடியோ பிரதிகள் கிடைத்தபோது உண்மையிலேயே என்ன செய்வது என எங்களுக்குத் தெரியவில்லை. இவற்றை வெளியிடுவதற்குச் சரியான, பொருத்தமான வழியைக் கண்டுபிடிக்கும்வரை அவை இரண்டு கிழமைகளாக எங்களிடமே இருந்தன. இக்காலங்களில் சானல் 4 தொலைக்காட்சியுடன் எமக்கு எந்தவிதமான உறவும் இருக்கவில்லை. ஆனால் இலங்கை ராணுவத்தால் நடாத்தப்படுகின்ற அகதிகள் முகாம்களுக்குள் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பான ரகசியப் புலனாய்வு அறிக்கை ஒன்றை வெளியிட முயன்ற சானல் 4இன் பத்திரிகையாளர் ஒருவர் நாடுகடத்தப்பட்டிருந்தார் என்பதை நாம் அறிந்திருந்தோம். ஆகவே இந்த வீடியோவைச் சர்வதேச மனித உரிமைகள் குழுக்களுக்கும் ஐ.நா. அங்கங்களுக்கும் அனுப்புவதோடு நின்றுவிடாமல் அந்தக் குறிப்பிட்ட பத்திரிகையாளரையும் தொடர்புகொள்ள முயன்றோம். ஏனெனில் அப்படியான ஒருவர்தான் இந்த ஆதாரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இருப்பார் என்பதை உணர்ந்திருந்தோம். ஆனால் அவர் அங்கு இருக்கவில்லை. ஆனாலும் சானல் 4 தொலைக்காட்சியின் வெளிநாடுகளுக்கான செய்திப் பிரிவினரோடு தொடர்புகொண்டு இதன் பின்னணியை விளக்கினோம். இவ்வாறுதான் சானல் 4 தொலைக்காட்சியுடனான உறவுக்கு இறுதியாக வந்தடைந்தோம்.
நீங்கள் இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பின் முக்கியமான ஒரு அங்கத்தவர். இந்த அமைப்பு எப்படி உருவானது என்பதைப் பற்றி எங்களுக்குக் கூறுவீர்களா?
இப்பொழுது தலைமறைவாக வாழும் பல பத்திரிகையாளர்கள் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சி ஒன்றே இந்த அமைப்பின் உருவாக்கம். இதன் முதலாம் கூட்டம் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெர்லின் நகரில் நடைபெற்றது. இதில் பதினைந்து தமிழ், சிங்களப் பத்திரிகையாளர்களும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். நீண்ட நேர அலுப்பான விவாதங்கள் நம்மை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து நிறுத்தின. கூட்டான குழுவொன்றை உருவாக்குவதற்கான தேவையையும் முக்கியத்துவத்தையும் நாம் உணர்வதற்கு இந்த விவாதங்கள் நம்மை நிர்ப்பந்தித்தன. அதாவது நாம் தனித்தனியாகச் செய்யும் வேலைகளைக் குழுவொன்றினூடாக ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம் என்பதையும் உணர்ந்தோம். ஆனால் பிற்காலங்களில் நாம் முன்னெடுத்த செயல்பாடுகள் நமது குழுவின் ஆரம்ப நோக்கங்களை மேலும் தீவிரமாக மாற்றின. ஏனெனில் நாம் குறிப்பிடத்தக்க சர்ச்சைக்குரிய சவாலான விடயங்களைக் கையில் எடுக்கவும் அவற்றுக்கு முகங்கொடுக்கவும் வேண்டி இருந்தது. கடந்த மூன்று வருடங்கள் மிகவும் சவாலான காலங்கள். ஆனால் நாங்கள் அவற்றை எல்லாம் கடந்து வந்தோம். ஆனால் எமது அமைப்பு தனித்திருக்கின்ற மனிதர்களின் கூடாரமாகவோ சமூகநல நிறுவனமாகவோ உருவாவதிலோ மாறுவதிலோ ஒருவருக்கும் விருப்பமிருக்கவில்லை. இவையெல்லாம் நம்மை மேலும் இறுக்கமாக ஒன்றிணைய வைத்தன.
இலங்கையிலிருந்து நீங்கள் வெளியேற்றப்பட்ட பின்புலத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான எனது முடிவு அன்றைய சூழ்நிலையால் உருவானது. நானாக நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானிப்பதற்குள்ளாகப் பலர் என்னை வெளியேறும்படி நீண்ட காலத்திற்கு முன்பே அறிவுறுத்தினர். சாதாரணமாக இலங்கையில் இவ்வாறான விடயங்களுக்காக முன்கூட்டியே எச்சரிக்கப்படுவதில்லை. ஆகவே இது தொடர்பான கடிதங்கள் அனுப்புவதோ பயமுறுத்துவதோ வழமையாக நடைபெறுவதில்லை. இதனால் இவ்வாறான முடிவுகள் நமது உள்ளுணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட எதிர்வினைகளாகவே இருக்கின்றன. அதாவது பயங்கரமான சுழல்கள் நம்மை சூழ்ந்துவருவதை நாம் உணர்கின்ற சந்தர்ப்பங்களில் நமது உள்ளுணர்வானது நாம் வாழ்வதற்கு ஏற்றவகையில் நம்மை வழிநடாத்தும். நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முதலான கடைசி மூன்று மாதங்களும் எனது நாளந்த வாழ்வின் வழமையான செயல்பாடுகளை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தேன். ஏனெனில் நான் எழுதுவது மனித உணர்ச்சிகளைக் கிளர்ச்சியடைய வைக்கக்கூடியது எனவும் இதன் விளைவால் ஏற்படும் பாதிப்புகள் மீள் நிவர்த்திக்க முடியாதவை எனவும் என் நண்பர்களும் சகசெயல்பாட்டாளர்களும் சிந்தித்தனர். ஆகவே எனது வீட்டிலிருக்காது தூரத்தில் எங்கேயாவது இருந்தேன். ஒரு நாள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைசெய்யப்பட்டார். இவர் நம்முடன் பல போராட்டங்களில் முன்னணியில் இருந்த பலரில் ஒருவர். நான் தமிழராகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ இல்லாது இருந்தபோதும்கூட, எனக்கு நெருக்கமாக இருந்த நண்பர்கள் நான் நாட்டைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டுமெனச் சிந்தித்தார்கள். இதன் பின் மூன்று கிழமைகள் நாட்டிற்குள் இருந்துவிட்டுத் தலைமறைவாகச் சென்றேன். அன்று நான் எடுத்த முடிவு சரியானதா என நிச்சயமில்லாது இருந்தபோதும், பிற்காலங்களில் நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றவற்றைக் கூட்டிப் பார்க்கிறபோது எனது முடிவு சரியானது என்பதை உணர்ந்தேன்.
மே 2009இல் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான உங்களது எதிர்வினை என்ன?. அப்பொழுது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
இப்போது போலவே போரின் கடைசிக் காலங்களில் நான் தலைமறைவாகவே இருந்தேன். இதனால் 2006ஆம் ஆண்டு மார்கழி மாதம் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டேன். நான் நாட்டைவிட்டு மிகத் தூரத்தில் வாழ்ந்தபோதும், இலங்கைக்குள் ஊடக வேலைசெய்யும் என்னுடைய சகநண்பர்கள் பலரைவிடக் குறிப்பிட்ட சூழ்நிலை மற்றும் சம்பவங்கள் தொடர்பாகப் பல தகவல்களை நன்றாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு நிலையிலேயே எப்பொழுதும் இருக்கிறேன். இக்காரணத்திற்கான பின்னணி, மற்றவர்களைவிட எனக்கு அக்கறை அதிகம் என்பதல்ல. மாறாக இலங்கையில் இருக்கின்ற பல்வேறு தடைகள் காரணமாக அங்குச் செயல்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு இல்லாத சலுகை எனக்கு இருக்கிறது. அதாவது அனைத்து மூலாதாரச் சக்திகளுடனும் தொடர்பு கொண்டு எல்லாவகையான தகவல்களையும் எந்தத் தடைகளும் இல்லாது பெற்றுக்கொள்வதற்கான வழிகள் எனக்கு இருக்கின்றன. இந்த ஓர் உண்மையாலும், தலைமறைவாக இருந்தபோதும், நான் எழுதுவதைப் பிரசுரிக்கப் பத்திரிகைகள் இருக்கின்றமையாலும் எனது பத்திரிகையாளர் தொழிலைத் தொடர முடிகிறது.
எனது தலைமறைவு வாழ்க்கையின் முதல் மூன்று வருடங்களும் நான் தொடர்ச்சியாக ஒன்றிரண்டு சிங்களப் பத்திரிகைகளுக்குப் பத்திகளும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிவந்துள்ளேன். என்னைப் போன்றவர்களின் குரல்களும் வெளிவருவதற்கு ஓரளவான ஜனநாயக வெளியை வைத்திருப்பதற்கு இந்தப் பத்திரிகைகள் முயல்கின்றன. இவற்றில் ஒவ்வொரு கிழமையும் வன்னியில் என்ன நடக்கிறது என்பதையும் அந்த அழிவுகளையும் கொடூரங்களையும் எழுதினேன். இவை வெறுமனே தமிழ் மக்களை என்ன செய்கிறார்கள் என்பதை வெளியிடும் கட்டுரைகளல்ல. மாறாக என் மக்களின் தார்மீக அறத்தை உயிர் வாழவைப்பதற்கான அவாவினாலான ஒரு போராட்டமே. இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
தென்பகுதியில் நடைபெற்ற தொடர்ச்சியான முடிவற்ற வன்முறைக் காலச் சுழல்களில் வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். பயங்கரமான காலங்களினூடாக வாழ்ந்திருக்கிறேன். மிகவும் கோரமான, காட்டுமிராண்டித்தனமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன். ஆனால் 2009 விதிவிலக்கானது. என்னுடைய வாழ்க்கையில் மிகவும் நிம்மதியிழந்த மனச் சோர்வடைந்து வாழ்ந்த காலங்கள் அவை. அப்பொழுது மனிதர்களுக்கு நடந்த பயங்கரமான துன்பங்களும் சோகங்களும் அழிவுகளின் அளவுகளும் கணக்கிடவோ கற்பனைசெய்யவோ முடியாதவை. இந்தப் பேரழிவுகளினதும் இன அழிப்பினதும் ‘தினசரிச் செய்திகள்’ உள்வாங்கவோ கூறவோ முடியாதளவிற்கு மோசமானவையாக இருந்தன. ஆனால் இவற்றைப் பற்றித் தெற்கில் இருந்த அறியாமைக்கும் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதளவிற்கு உணர்வில்லாதவர்களாக இருந்ததற்கும் சாட்சியாக இருந்தமை என்னை மிகவும் பாதித்தது. மிலேச்சத்தனமான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களாக நீங்கள் இருக்கும்போது குறிப்பிடத்தக்களவு தார்மீக அறத்தை உணரக்கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள். ஏனெனில் என்ன நடத்திருக்குமென உங்களுக்குத் தெரியும். நீங்கள் எந்த விதமான மனப் பாதிப்பில் இருந்தபோதும், அழிவானது உடல்ரீதியாக இருப்பின் உங்களது விதியை நீங்களே காணக்கூடியவராக இருப்பீர்கள். ஆனால் மோசமான போர் வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களைப் புரிந்தவர்களினூடான ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவராக நீங்கள் இருக்கும்போது, உங்களது சமூகத்தின் கூட்டு ஆன்மாவானது இவ்வாறான மிருகத்தனமான, பயங்கரமான போர்க்குற்றங்களைப் புரிந்தவர்களால் பிரதிநிதித்துவப்படுத்துகின்றபோது, இவ்வாறான போர்க்குற்றங்கள் புரிந்தவர்களின் உணர்ச்சிகளைப் பகிர்ந்தும் பகிராததற்கும் அப்பால், அவர்களின் குற்றங்களைக் கூட்டாக நியாயப்படுத்தும் சமூகத்தைப் பிரதி நிதித்துவப்படுத்துகின்றபோது, நீங்கள் தார்மீக அறந் தொடர்பான அதல பாதாளப் படுகுழியில் வீழ்வீர்கள். ஏனெனில் நீங்கள் எவ்வாறு உங்கள் தோலை உரித்துக்கொண்டு எவ்வாறு வெளியில் வரமுடியாதோ, அப்படித் தான் சமூகத்தின் கூட்டு அடையாளத் திலிருந்தும் நீங்கள் உடனடியாகப் பாய்ந்து வெளிவர முடியாது.
நாம் எந்தவிதமான குறிப்பிடத்தக்க எதிர்ப்பு களையும் காட்டாது இருந்தமையானது இவ்வாறான அழிவுகள் நடைபெறுவதற்கு நாமும் உடந்தையாக இருந்ததையே காட்டுகின்றது. சுய சீரழிவு நமக்குள் ஏற்படுவதற்கு இந்த நிலை காரணமாக இருக்கின்றது. இது தார்மீகம், அறம் தொடர்பானது ஆகவே வெளியே தெரியாது. இவ்வாறான இனப் படுகொலையும் அழிப்பும் போர்க் குற்றங்களும் நடப்பது தொடர்பான சிறிதளவான அக்கறைகூடக் காட்டாமல் விட்டமையால், நாம் கூட்டுச் சமூகமாக இருக்கிறோம் என்பதைக் கூறுவதற்கான தார்மீக அடிப்படையைக் கூட நாம் இழந்துள்ளோம். எங்களுடைய குற்றவுணர்வானது எங்களது ஆன்மாவை முடமாக்கியுள்ளது. அது நமது ஆன்மாவை உள்ளிருந்தே அரிக்கிறது. ஒரு சிங்களவராக நான் பெற்ற அனுபவம் இதுதான்.
தமிழர்-சிங்களர் உணர்வுத் தோழமை (solidarity) பற்றி என்ன கருதுகிறீர்கள்? தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் சிங்கள முற்போக்குவாதிகளின் பங்கு எவ்வாறு அமைய முடியும்?
மே 2009இல் இடம்பெற்ற தமிழ் மக்களின் இன அழிப்பிற்குப் பின் நாம் ஒரு முக்கியமான வரலாற்றுக் காலகட்டத்தில் நிற்கிறோம். ‘முற்போக்கு’, ‘உணர்வுத் தோழமை’ போன்ற சொற்களை நாம் திரும்பிப் பார்த்துப் புதிதாக வரைவிலக்கணம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் இந்தச் சொற்களுக்கு நாம் வழங்கி வந்த அர்த்தமும் வரைவிலக்கணமும் தமிழ் மக்களின் இன அழிப்பிற்குப் பின் மிகுந்த நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இந்த இனப்படுகொலை உலகத்தை உலுப்ப வேண்டிய பேரழிவு. இத்தகைய சூழலில் மௌனம் பேணுவது நடுநிலை என்று அர்த்தம் தராது. மௌனம் என்பது மறைமுகமான அங்கீகாரம். குறிப்பிடத்தக்க அளவு சிங்கள முற்போக்காளர்கள் படுகொலைகளுக்கு எதிராக இருந்தார்கள் என்பது உண்மைதான். எனினும், இன்னும் பலர் அயனெஸ்கோவின் ‘காண்டாமிருகம்’ எனும் அபத்த நாடகத்தில் வருகிற காண்டாமிருகங்கள் போல மாறிவிட்டனர். போர் தமிழ் மக்களுக்குக் கொண்டுவந்த பேரழிவுகள் ஒருபுறமும் என்றால், மறுபுறம் அது சிங்கள மக்களுக்கு என்ன செய்தது என்பதை நாங்கள் பார்க்க வேண்டி இருக்கிறது, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களுக்குச் செல்பவர் எவருக்கும் போர் ஏற்படுத்திய அழிவுகளை நேரடியாகப் பார்க்கக்கூடியதாக இருக்கும். அந்த அழிவுகளின் பிரம்மாண்டம் உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும். தமிழ் மக்களின் ஒன்றிணைந்த தேசிய வாழ்வு போருக்குப் பின்னர்கூட எப்படிச் சிதைக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். ஆனால் போர், சிங்கள மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிற அற/தார்மீகச் சீரழிவை நீங்கள் கண்ணால் பார்க்க முடியாது.
தமிழ் மக்களுக்கு எதிராக எத்தகைய குற்றத்தையுமே புரியவில்லை என்று அவர்கள் சொல்வதை எடுத்துக்கொள்ளுங்கள். எங்கள் மனத்தில் – சிங்கள மக்களின் மனத்தில்- உண்மையாகவே தமிழ்மக்களுக்கு நடந்த, கற்பனைக்கும் எட்டாத பயங்கரங்கள் நன்றாகத் தெரியும். அது எப்படி என்று கேட்கிறீர்களா?
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரச படையினரின் மோசமான மூர்க்கத்தனத்தை நாம் பார்க்க நேர்ந்தது. 1987-1990 காலகட்டத்தில் ஏறத்தாழ 60,000 சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன; டயர் போட்டு எரிக்கப்பட்டன. எங்களுக்கெனவும் மனிதப் புதைகுழிகள். கடத்தல்கள். ‘காணாமல் போதல்கள்’ வன்புணர்வுகள், அன்னையர் முன்னணி போன்ற அமைப்புகள் என எல்லாமே இருந்தன. நினைவுச் சின்னங்களும் மரித்தோருக்காக எழுப்பப்பட்டன. எனவே இலங்கை அரசு என்னவெல்லாம் செய்யும் என்பது சிங்கள மக்களுக்குத் தெரியாததல்ல. எங்களுக்கு இத்தகைய அநியாயங்கள் நடக்கும்போது அவற்றுக்குப் பொறுப்பாக இருந்தது இலங்கை அரசு என்று சொல்ல நாங்கள் தயங்கியதில்லை. ஆனால் இப்போது இவ்வளவு அநியாயங்களும் தமிழர்களுக்கு நிகழ்கிறபோது, இலங்கை அரசு இப்படியெல்லாம் செய்யாது என்று சிங்கள மக்கள் சொல்கிறார்கள்! ஒடுக்கப்படுகிற சிங்கள மக்களைக்கூட இத்தகைய கருத்து நெருக்கமாக இந்தக் கொலைகார அரசிடம் இணைத்துவிடுகிறது.
எங்களுடைய அரசியல், அறவியல் அடிமைத் தளைகள் இவைதான்.
இந்தத் தளைகளை வேறு எவரும் அகற்ற முடியாது. ஏனெனில் இவை நாமாகவே மாட்டிக்கொண்ட தளைகள். இந்த நச்சுத் தளைகளை உடைப்பதில் தான் எங்களது – சிங்கள மக்களது – தார்மீக, அரசியல் விடுதலை தங்கியுள்ளது. ‘உணர்வுத் தோழமை’, ‘முற்போக்கு’ என்பதன் அர்த்தத்தைப் பற்றி மீளச் சிந்திப்பதற்கு இது ஒரு முன் நிபந்தனையாகும்.
எவ்வாறு இந்தத் தளையை உடைப்பது? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு.
எங்களுடைய நேரடியானதும் மறைமுகமானதுமான இரண்டு தளங்களிலும் எங்களுடைய ஒப்புதலோடுதான் தமிழ் மக்களின் இனப்படுகொலை எங்கள் கண்முன்னால் நிகழ்த்தப்பட்டது என்பதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தகைய ஒப்புதல் மூலம் மட்டும்தான் இன அழிப்பை நிகழ்த்திய இலங்கை அரசிடமிருந்து நாங்கள் விலகிக்கொள்ள முடியும். இலங்கை அரசிடமிருந்து மட்டும் அல்ல. இனப்படுகொலைக்குத் துணைபோன உலக வல்லரசுகளிடமிருந்தும் நாங்கள் விலகிக்கொள்ள முடியும். இன அழிப்பை மூடிமறைக்க இவர்கள் எல்லோருமே முயல்கிறார்கள்.
சிங்கள மக்களின் கூட்டு அடையாளம் என்பது தமிழ்மக்களின் இனப்படுகொலையை நிராகரிப்பதிலும் அந்த நிராகரிப்பை நியாயப்படுத்துவதிலுமே தங்கியிருக்கிறது. எனவே இனப்படுகொலை தொடர்பான எங்கள் பொறுப்பை ஒப்புக்கொள்வதன் மூலம் புதிய, தீவிரமான அரசியல் வழிமுறை ஒன்றை நாங்கள் தொடங்கலாம். இப்படி நாங்கள் செல்வது “தோற்றுப் போய் விட்ட” தமிழர்களுக்கு நாங்கள் வெளிப்படுத்துகிற பெருந்தன்மை அல்ல.
மாறாக, எங்களது, வெட்கம் மிக்க தார்மீக அடிமைத்தளையிலிருந்து எம்மை விடுவிப்பதற்கான துயரவாழ்வு இது. ஒடுக்கப்படுகிற தமிழ் மக்களுடன் அர்த்தம் பொதிந்த ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இதுவே வழி அமைக்கும். சிங்களத் தமிழ் உணர்வுத் தோழமைக் கான முதல் படி இங்கிருந்துதான் ஆரம்பமாக வேண்டும்.
பாஷண அபேவர்த்தன
தமிழில்: மீராபாரதி
நன்றி- காலச்சுவடு
முள்ளிவாய்க்கால் | மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன் | பாஷண அபேவர்த்தன!
பதிந்தவர்:
தம்பியன்
17 May 2012
0 Responses to முள்ளிவாய்க்கால் | மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன் | பாஷண அபேவர்த்தன!