மதுரை மாநகர் எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் பெத்தானியாபுரத்தில் அ.தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் நடிகர் ராமராஜன் பேசியபோது,
’’இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மக்களுக்கு பயன்தரக்கூடிய எண்ணற்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அறிவித்து வரும் திட்டங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பயன் தரக்கூடியதாக உள்ளது.
விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு மடிக்கணினி, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், உதவித்தொகை இவை அனைத்தும் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்கள். மற்ற மாநிலங்கள் அனைத்தும் முதல்வர் அம்மாவின் திட்டங்களை வியந்து பார்க்கிறது.
ஆனால் கலைஞரும், விஜயகாந்தும் அரசை குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். விஜயகாந்த் எனக்கு முன்பே கதாநாயகனாகி விட்டார். நான் அவர் நடித்த சிவப்பு மல்லி உள்பட 4 படங்களுக்கு உதவி டைரக்டராக இருந்தேன். அவருக்கு வசனம் சொல்லிக் கொடுத்தவன் இந்த ராமராஜன். அவர் மதுரைக்காரர். எனக்கும் மதுரை அருகே உள்ள மேலூர் தான் சொந்த ஊர்.
விஜயகாந்த் நன்றி மறக்கக்கூடாது. ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தால் என்ன கதி ஏற்படும் என்று விஜயகாந்த் உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அவர் மட்டுமே ஜெயித்தார். துணைக்கு ஒரு ஆளை கூட சட்ட மன்றத்துக்கு அழைத்து செல்லமுடியவில்லை.
ஆனால் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் தன்னுடன் 28 பேரை சட்டசபைக்கு அழைத்து சென்று எதிர் கட்சி தலைவராகி உள்ளார்.
இதற்கு முதல்வர் அம்மாதான் காரணம். இதனை விஜயகாந்த் புரிந்து கொள்ள வேண்டும். முதல்-அமைச்சர் அம்மாவை எதிர்த்தால் முதலமைச்சராகிவிடலாம் என்று விஜயகாந்த் கனவு காண்கிறார். அது பலிக்காது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு சக்கரவர்த்தி. ஆனால் அரசியலில் மக்கள் ஏற்க வில்லை. அரசியலுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரைத்தான் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். சிவாஜி கணேசனை விட பெரிய நடிகர் இல்லை விஜயகாந்த். மக்களோடு கூட்டணி கடவுளோடு கூட்டணி என்று விஜயகாந்த் மக்களை ஏமாற்ற பார்க்கிறார். மக்களை அவர் ஏமாற்ற முடியாது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். முதல்வர் அம்மா பிரதமராக வருவார். அப்போது தமிழகத்திற்கு தேவையான மத்திய அரசின் உதவிகள் முழுமையாக கிடைக்கும்’’ என்று தெரிவித்தார்.
விஜயகாந்துக்கு வசனம் சொல்லிக்கொடுத்தவன் நான்; நன்றி மறக்கக்கூடாது | நடிகர் ராமராஜன்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
15 May 2012
0 Responses to விஜயகாந்துக்கு வசனம் சொல்லிக்கொடுத்தவன் நான்; நன்றி மறக்கக்கூடாது | நடிகர் ராமராஜன்