சிறீலங்கா அரசு பல்வேறு ஆட்டங்களை போட்டு கடந்த 70 வருடங்களாக உலகை ஏமாற்றி இப்போது ஏமாற்ற முடியாத கட்டத்தில் அமெரிக்கா புறப்படுகிறது. முற்றத்தை கிளறி நாசமாக்கிய நாம்பன் மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போட்ட கிளரி கிளின்டன் பாராட்டுக்குரியவர். இது குறித்த செய்தி:
ஜனாதிபதியின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்ட திட்டவரைபடத்துடன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்றைய தினம் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களது இந்த பயணமானது ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு பொறுப்புக் கூறக்கூடிய வகையில், அமெரிக்காவினால் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் முழுமையான செயற்திட்ட வரைபினை ஈடுசெய்யும் நோக்கில் அமையும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் எதிர்வரும் 18ம் திகதி நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்ட வரைபை அவரிடம் கையளித்து அந்நாட்டின் இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயரதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் அமெரிக்கா செல்லும் அரசின் தூதுக்குழுவில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த திட்ட வரைபானது ஜனாதிபதியின் திட்ட ஆலோசனையுடன் இரகசியமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது இதனால் இந்த அறிக்கையின் விபரங்களை நாட்டில் உள்ள அனைவருக்கும் பகிரங்கப்படுத்த அரசு அக்கறை காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Responses to முற்றத்தைக் கிளறிய கட்டாக்காலிக்கு மூக்கணாங்கயிறு போட்ட அமெரிக்கா