கனடா-ரொன்றோவில் முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையில் கனேடிய தமிழர் பொது அமைப்புக்களின் கூட்டிணைவில் இவ்வெழுச்சி நிகழ்வு குயின்ஸ் பார்கில் இடம்பெற்றிருந்தது.
கனேடிய அரசியல் பிரமுகர்கள் மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் சமூக அமைப்பு பிரதிநிதி உட்டப பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
நா.த.அ ரசாங்கத்தின் உதவிப் பிரதமர் ராம் சிவலிங்கம், கனடா தமிழர் இணையத் தலைவர் வின் மகாலிங்கம், கனடிய மருத்துவர் சங்கத் தலைவி மருத்துவர் ராஜேஸ் லோகன், சர்வதேச மன்னிப்புச் சபைப் பிரதிநிதி ஜோன் ஆர்கியூ மற்றும் நா.த.அரசாங்கத்தின் தேர்தல் ஆணையாளர் செல்வம் சிறிதாஸ் ஆகியோர் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தனர்.
கனேடிய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் தொடங்கின.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தி வைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபிக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
என்.டி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுபினர் பேராசிரியர் கிரெய்க் ஸ்கொட் அவர்களது உரையில்:
இராஜபக்சவின் குடும்பம் தமிழ் மக்களின் பிரதேசங்களை சிங்கள மயமாக்க நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றது. யுத்தப் படுகொலைகளை ஏற்றுக் கொள்ளாது மறுத்து வருகின்றது. ஆனால் லண்டனில் உள்ள சனல்-4 தொலைக் காட்சி நிறுவனம் தகுந்த ஆதாரங்களைத் திரட்டி திரைப்படமாக வெளளியிட்டுள்ளது. அதனை நாம் பாராளுமன்றத்தில் பார்வையிட்டோம். அதைப் பார்த்து முடிந்ததும் நாமெல்லோரும் மௌனித்து விட்டோம். இனிமேலும் ஸ்ரீலங்கா அரசின் கூற்றினை நாம் நம்பப் போவதில்லை. யுத்தத்தின் போது இடம்பெற்ற கொலைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டுமென கனடா அரசு வற்புறுத்தி வருகின்றது. அதுமாத்திரமல்ல பொது நலவாய நாடுகளின் அடுத்த மாநாட்டினை சிறிலங்காவில் நடாத்த அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றது என தெரிவித்தார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் கனடா பிரிவின் பிரதி நிதியான ஜோன் ஆர்கியூ அவர்களின் உரையில் :
கனடாவில் மாத்திரமல்ல சர்வதேச நாடுகள் எங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தாம் கௌரவத்துடனும், தன்மானத்துடனும் வாழ வழி வகுக்கப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பி வருகின்றனர். சிறிலங்கா அரசு மனித உரிமைக்கு மதிப்பளிக்காது பல்லாயிரக் கணக்கான தமிழர்களைக் கொன்றழித்தது. கொன்றழிக்கப்படாதிருந்தால் இன்று இக்கூட்டத்தில் மேலும் அதிகளவு தமிழ் மக்கள் கலந்து கொண்டிருப்பார்கள். ஸ்ரீலங்கா அரசு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டு தமிழனத்துக்கு சாதகமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மக்களாகிய உங்களுக்கு உரிமை வழங்கப்படும் வரை நாம் உங்களுடன் இணைந்து போராடுவோம் என தெரிவித்தார்.
நா.த. அராசாங்கத்தின் தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அவர்களது உரையில் :
மே மாதம் 18ம் திகதி எம்மவரது உள்ளங்களை உறைய வைத்த தினம். சிங்கள அரசு பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் அரங்கேற்றிய நிகழ்வு. மக்களை ஓட ஓட விரட்டி கொன்றழித்து, பாடசாலை வைத்தியசாலைகள் எங்கும் குண்டுகளை வீசி கொன்றழித்த நாள். அதனை இன்று வெற்றி விழாவாகக் கொண்டாடுகின்றது. தமிழர்களாகிய நாம் அழிய மாட்டோம். சாம்பலில் இருந்து உயிர்த்து எழும் பீனிக்ஸ் பறவையைப் போன்று உயிர்த்து எழுவோம். இன்றைய தினத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் வானொலி சேவையை ஆரம்பித்துள்ளோம். ஒரு மணி நேர வானொலி நிகழ்ச்சியை தமிழீழம், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உட்பட ஆசிய பிராந்தியத்தில் கேட்க முடியும். காலப் போக்கில் ஏனைய நாடுகளிலும் கேட்கும் படியாக இருக்கும். தமிழ் ஆங்கில மொழிகளிலும் பின்னர் சிங்கள மொழியிலும் சேவை நடாத்தப்படும் எனக் கூறினார்.
லிபரல் கட்சி எம்.பி.திரு. ஜிம் காரியியானிஸ் தமிழினம் தமது உரிமைகளை வென்றெடுக்க லிபரல் கட்சி ஆதரவளிக்கும் எனக் கூறிய கட்சித் தலைவர் பொப் றேயின் செய்தியினை வாசித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியிடம் கையளித்தார்.
நா.த.அசராங்கத்தின் பிரதிநிதி ஈழவேந்தன் உரையாற்றுகையில் :
ஒரு நாட்டிலே இனப் படுகொலை மேற்கொள்ளப்படும் போது அதிலே தலையிடுவதற்கு மூன்றாவது நாடுகளுக்கு உரிமையுண்டு என 'ஜெனசைட்' என்ற நூலில் இருந்து மேற்கோள் காட்டி உணர்ச்சி வசமாகப் பேசினார். சிறிலங்காவில் நடைபெற்றது மனித உரிமைக்கு மாறான யுத்தமல்ல. அங்கு நடைபெற் றது இனப் படுகொலை தான் என வலியுறுத்திப் பேசினார்.
கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் உரையாற்றுகையில் :
ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு உரிமை வேண்டுமாயின் நாம் இங்கிருந்து குரல் கொடுக்க வேண்டும். துக்க தினமான மே 18ம் திகதி பற்றிய அறிக்கை ஒன்றினை நான் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் வாசித்தேன். 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற் கொள்ளப்பட்டு வந்துள்ளது. அதனால் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தும், புலம் பெயர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஸ்ரீலங்கா அரசு தமிழினத்துக்கு எதிரான மேற்கொண்டு வரும் அநீதியான செயல்கள் குறித்து கனடா அரசும் பிற நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் ராதிகா வேண்டுகோள் விடுத்தார்.
கனடியத் தமிழர் பேரவை சார்பாக அதன் இயக்குனர்களில் ஒருவரான டாக்டர் சாந்தகுமார், கனடாத் தமிழர் இணையம் சார்பாக நாதன்வீரவாகு, படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் வேலுப்பிள்ளை தங்கவேலு ஆகியோர் உட்பட மற்றும் பலரும் உரையாற்றினார்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி சியான் சின்னராசாவும், செல்வி சசி காசிநாதனும் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.



0 Responses to கனடாவில் தமிழீழத் தேசிய துக்க நாள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது