Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2009 ஆம் ஆண்டு, சிங்கள பேரினவாதத்தினால் தமிழர் தாயகப் பகுதிகளும், வளங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்த கொடிய போரில், படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களையும் நினைவுகூரும் நிகழ்வு லண்டனில் நேற்று மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்வில் பொதுச்சுடரினை ஈகப்பேரொளி முருகதாசனின் தாயார் திருமதி. வர்ணகுலசிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகச்சுடர் ஏற்றும் போது வானமும் தனது பங்கிற்கு கண்ணீர்த் துளிகளைத் தூவி அம் மக்களுக்காக தனது இரங்கலை தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து பிரித்தானியத் தேசியக் கொடியும், தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. முதலில் பிரித்தானியத் தேசியக் கொடியை அக்ட் நவ் அமைப்பின் உறுப்பினர் Mr. Graham Wilson அவர்கள் ஏற்றி வைக்க பிரித்தானிய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழீழத் தேசியக் கொடியை பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தை சேர்ந்தவருமான மாறன் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக் கொடி வணக்கப் பாடல் ஒலிபரப்பப்பட்டது.

சிறீலங்கா அரச படைகளால் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், தாயக விடுதலைப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்காகவும், இதுவரைகாலப் பகுதியிலும் போரின்பால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காகவும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தைத் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களைக் காக்கக்கோரி உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரனும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமருமான உருத்திராபதி சேகர் அவர்கள் ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிக்கு மக்கள் தீபம் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

மலர்வணக்க நிகழ்வின் பின, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரனின் உரை அகன்ற திரையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

நிகழ்வில் Mr.Virendra Sharma - MP for Ealing & Southall, Ealing Counciler Mr.Julian Bell, Dr.Onkar Sohota, ACT NOW அமைப்பின் நிறுவனர் Mr.Tim Martin, Mr. Ruthrapathy Sekar - Deputy Prime Minister of TGTE, Mrs. Balambihai Murugathash - Mminister of TGTE, மற்றும் IBC வானொலியின் கலையக பணியாளர் ரத்னா, ஆகியோர் உரையாற்றினர்.

சிறப்புரையினை தமிழீழ உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான கெளதம் வழங்கினார். அவர் அங்கு உரையாற்றுகையில்,

நம் ஈழ மக்களுடைய விடுதலையைப் பெற்றுத்தராமல், மக்களின் முகத்தில் நிரந்தரமஅன மகிழ்ச்சியைப் பார்க்காமல் அண்ணனால் (தலைவரால்) இந்த உலகத்தைவிட்டுப் போகமுடியாது. ஒரு வேளை ஈழமண்ணைவிட்டுப் போயிருக்கலாம், ஆனால் இந்த உலகத்தை விட்டுப் போகமுடியாது.

ஆனாலும் அண்ணன் வரும் வரைக்கும், அண்ணனோட சொல்! அண்ணனுடைய கட்டளை! வரைக்கும் நாங்க காத்துக்கிட்டு இருந்தா நம்மளைப் போல ஏமாளி வேற யாராகவும் இருக்கமுடியாது.

"ஈழத் தமிழன் திரும்பிவரும் காலத்திலே நீ இருக்கவேணும் எரிமலையின் கோலத்திலே" நமது பயணம் தொடரணும், நமக்கான விடுதலையை வென்றெடுக்க வேண்டும். என்றார்.

ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டிருந்த இந் நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் உண்மை நிலையை எடுத்துக்காட்டும் நாடகம் அரங்கேற்றப்பட்டு இறுதியில் உறுதியேற்போடு நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தது.

0 Responses to எழுச்சியோடு உணர்வுபூர்வமாக லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நிகழ்வு | காணொளி இணைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com