புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக முதலில் வேட்பாளரை அறிவித்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் ஜூன் 12ல் நடைபெறும் என்று அறிவித்தது.
அடுத்ததாக ஐஜேகே, மாவட்டச் செயலாளர் சீனிவாசனை வேட்பாளராக அறிவித்து, களப்பணிக்கு அனுப்பியுள்ளது. ஆனால் தேர்தலில் நிற்க வேண்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், பாஜக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் ஆணையத்தை குறை கூறி தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவித்துவிட்டன.
தேர்தல் ஆணையமும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளை மதிப்பதில்லை, அவர்கள் மீது நடவடிக்கை என்ற ரீதியில் செயல்பட்டுக்கொண்டிருப்பதால், தேர்தல் ஆணையத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக 49 ஓ போட்டு தங்களது கண்டனத்தை தெரிவிப்போம் என்று திமுக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ரகுபதி பொதுக்கூட்ட மேடையிலேயே பேசினார்.
இந்த நிலையில் இடைத்தேர்தல் களத்தில் தேமுதிக போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார். விரைவில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் 50க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் வாய்ப்பு கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் செலவுகளையும், ஆளும்கட்சி மற்றும் தேர்தல் ஆணையத்தின் பிரச்சனைகளையும் சமாளிக்கும் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை விரும்புகிறது.
இந்த நிலையில் தேமுதிக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஜாகீர் உசேன் செலவு செய்ய தயாராக இருப்பதால், அவருக்கே வாய்ப்பு தரப்படலாம் என்று புதுக்கோட்டை தேமுதிகவினர் எதிர்ப்பார்க்கிறனர்.
இருப்பினும், இதே பலத்துடன் உள்ள திருப்பதி, கருப்பையா ஆகியோரும் வேட்பாளர் சீட்டை வாங்கிவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
0 Responses to தேமுதிக வேட்பாளர் இவர்தானா... இவர்தானா...!