ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலின் ஆப்த நண்பன் சார்கோஸி பிரான்சிய தேர்தலில் மண் கவ்விய பின்னர் தற்போது ஜேர்மனியில் அஞ்சலா மேர்க்கலின் ஆட்சிக்கதிரை ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஜேர்மனியின் மாநில தேர்தலில் மேர்க்கலின் சி.டி.யு சட்சி பாரிய பின்னடைவை சந்தித்திருக்கிறது.
ஜேர்மனியில் உள்ள நோர்ட் கெயின் – வெஸ்ற்பாளின் மாநிலங்களின் தேர்தலில் அவருடைய கட்சி ஒவ்வொரு நான்கு வாக்காளருக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் தமது கட்சி வாக்காளர்களை இழந்துள்ளது.
இந்தப் பின்னடைவானது..
எதிர் வரும் 2013 ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜேர்மனிய சான்சிலர் தேர்தலில் அஞ்சலா மேர்க்கல் தோல்வியடையக் கூடிய நிலையின் முதலாவது அறிகுறியாகும்.
டென்மார்க் கோப்பன்கேகன் பல்கலைக்கழக ஜேர்மனிய பிரிவு அரசியல் ஆய்வாளர் காள் கிறிஸ்டியன் லம்மர்ஸ் வரும் தேர்தலில் அஞ்சலே மேர்க்கல் அடையப் போகும் தோல்விக்கான அபாயச் சங்காக இதைக் கருதலாம் என்றார்.
கடந்தசில ஆண்டுகளாக..
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொரளாதார நெறிப்படுத்தலை இணைந்து முன்னெடுத்த இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக மேர்க்கலும் – ஸார்கோஸியும் இருந்தார்கள்.
பிரிட்டனை விரட்டியடித்து இவர்கள் இருவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் சக்தியாக தலையெடுத்து, பின் பொருளாதார சூறாவளியில் ஐரோப்பிய ஒன்றியத்தை சிக்குப்பட வைத்ததும் தெரிந்ததே.
மேலும்…
தமது தலைமைத்துவ தவறினால் கிரேக்கம் போன்ற நாடுகள் வங்குரோத்தடைய பெரு நிதியை ஒதுக்கி அதைக் காப்பாற்ற முயன்று தோல்வியும் கண்டனர்.
பிரான்சில் அதிபர் மாறி தற்போது புதிய தலைவராக ஒலந்த தேர்வாகியுள்ளார், இவரும் அஞ்சலா மேர்க்கலும் கீரியும் பாம்பும் போல எதிரெதினானவர்கள்.
ஆகவே பிரான்சிய அதிபருக்கு நட்பான சோசலிச கட்சித் தலைவரே ஜேர்மனிக்கும் சான்சிலராக வரவேண்டும் என்ற புதிய அரசியல் மேகம் கருக்கட்ட ஆரம்பித்துள்ளது.
இது இவ்விதமிருக்க..
நேற்று முன்தினம் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் யொய்ச மனுவல் பராசோ வைத்த கருத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்னொரு அவல நிலையைப் பறைசாற்றியுள்ளது.
ஒன்று கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியம் போடும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் இல்லை அதிலிருந்து விலகிச் செல்ல வேண்டும், நிபந்தனைகளையும் ஏற்காமல் விலகியும் செல்லாமல் இருக்க முடியாது என்று எச்சரித்துள்ளார்.
ஆக..
கிரேக்கம் விலகுகிறதா இருக்கிறதா என்பது முக்கியமல்ல.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விரும்பினால் விலகலாம் என்ற குரல் கேட்டுள்ளதே முக்கிய விடயமாகும்.
இப்படி…
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள தளர்வு கடைசியில் அஞ்சலா மேர்க்கலின் தலையில் இடியாக இறங்கி அவரை ஆட்சியில் இருந்து தூக்கி வீசினாலும் வீசலாம்.
இன்றைய அதிகாலை ஜேர்மனி அஞ்சலா மேர்க்கலின் நாற்காலி ஆடத் தொடங்கிவிட்டதாக எச்சரித்துள்ளது.
அலைகள்.
0 Responses to அஞ்சலா மேர்க்கல் அடுத்த தடவை ஆட்சிக்கு வருவது கடினம்