பொன்சேகா விடுதலை தொடர்பில் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பு பெரும்பான்மை இன அரசியல் பரபரப்பாகும். அதுவரை தமிழ் மக்களுடன் இணைந்து நாம் நிலைமைகளை நிதானமாக அவதானித்து வருவோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதில் தமிழ் பேசும் மக்களுக்கு பங்கு எதுவும் கிடையாது. அன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் எதிர்கட்சிகளின் பொது அபேட்சகராக அவருக்கு சுமார் இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சி கூட்டணிக்கு வெளியே அவர் சந்தித்த பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு இந்த வாக்குகள் கிடைக்கவில்லை.
அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவரது விடுதலையை நாமும் வரவேற்கின்றோம். அவரது விடுதலையின் காரணமாக மகிழ்ச்சி கொண்டாட்டங்களை நடத்துபவர்கள் நடத்தட்டும். ஆனால் நம்மால் பட்டாசு கொளுத்தி கொண்டாடமுடியாது. சிறையில் உள்ள நமது தமிழ் இளைஞர்களும் விடுதலையானால் நாமும் பட்டாசு கொளுத்தி கொண்டாடுவோம்.
நாட்டை பிடித்துள்ள நோய்களுக்கு பொன்சேகாவிடம் மருந்து இருக்கிறதா என்பது எமக்கு தெரியாது. எனவே தற்போதைய பொன்சேகா விடுதலை பரபரப்பு அடங்க வேண்டும். அன்றைய எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரது இன்றைய அரசியல் நிலைப்பாடுகள் என்ன என்பது தொடர்பில் முதலில் தெளிவு பிறக்க வேண்டும்.
சரத் பொன்சேகா விடுதலை தொடர்பில்கட்சியின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
சரத் பொன்சேகா தொடர்பில் நாட்டில், குறிப்பாகபெரும்பான்மை மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டைபிடித்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும் மக்கள், அவரைநோக்கிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டுள்ளது ஆச்சரியமானது அல்ல.
ஆனால் நாட்டை பிடித்துள்ள பிரச்சினைகளில் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும்உள்ளடக்கும் மனப்பாங்கு பெரும்பான்மை மக்களிடமும், பெரும்பாலானபெரும்பான்மை கட்சிகளிடமும் இல்லை.
எனவே எந்த ஒரு பெரும்பான்மை கட்சியையும், பெரும்பான்மை தலைவரையும் தமிழ் பேசும் மக்கள் முழுமையாக நம்பி விட முடியாது. குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில், குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக பெரும்பான்மை அரசியல் அமைப்புகளுடன் நாம் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. இது நடைமுறை அரசியல் ஆகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா இந்த அடிப்படையில்தான் பொது அபேட்சகராக எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். எதிர்காலத்திலும் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளும் உள்ளடங்கிய பொது வேலைத்திட்டத்தை அவர் ஏற்றுக் கொள்பவராக இருந்தால் எதிர்கட்சிகளுடன் அவரது கட்சியும் இணைந்து கொள்ளலாம். அதற்கு இடம் இருக்கின்றது.
அதேவேளையில்,யுத்தத்தை வெற்றிகொண்டவர் என்ற முறையில் அவரை கொத்திக்கொண்டு சென்று இன்றைய அரசைவிட சிங்கள பெளத்த தேசிய வாதத்தை முன்னெடுத்து குறுக்குவழியில் ஆட்சியை கைப்பற்றலாம் என்றும் சிலர் கனவு கண்டுக்கொண்டு இருக்கிறார்கள்.இது எமக்கு தெரியும்.
எனவே தேசிய பிரச்சினைகள் தொடர்பில் அவரது நிலைப்பாடுகள் என்ன என்பதுபற்றி சரத் பொன்சேகா நாட்டிக்கு தெரிவிக்கவேண்டும். இந்த தெளிவு பிறக்கும் வரை தமிழ் பேசும் மக்கள் அவசரப்படாமல் நடக்கும் சம்பவங்களை நிதானமாக அவதானிக்க வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
பொன்சேகா விடுதலை தொடர்பில் நிலைமைகளை நிதானமாக அவதானித்து வருகின்றோம்! | மனோ
பதிந்தவர்:
தம்பியன்
21 May 2012
0 Responses to பொன்சேகா விடுதலை தொடர்பில் நிலைமைகளை நிதானமாக அவதானித்து வருகின்றோம்! | மனோ