இந்த அராஜக ஆட்சியைக் கவிழ்ப்பதுதான் எனது ஒரே இலக்கு. நான் எவரிடமும் மண்டியிடப்போவதில்லை. இவ்வாறு சூளுரைத்தார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.
நேற்று விடுதலை செய் யப் படுவதற்கு முன்பதாக கொழும்பு புதுக்கடை நீதி மன்ற வளாகத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்களிடம் ஓரிரு நிமிடங்கள் உரையாற்றும் போதே பொன்சேகா இவ்வாறு சூளுரைத்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு:
சிறையில் என்னை அடைத்து என்னை அடக்கிவிடுவதற்கு அரசு கடந்த காலங்களில் முயற்சி செய்தது. அது முடியாமற் போனதால் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனது உடல்நிலை ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியிருக்கிறது. எனக்காகப் பாடுபட்ட எனது நாட்டு மக்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டார் பொன்சேகா.
வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின்னர் பொன்சேகா மக்கள் மத்தியில் பேசியவை வருமாறு எனக்காக மக்கள் சிந்திய கண்ணீரை நான் ஒருபோதும் மறந்துவிட மாட்டேன். எனக்கு நேர்ந்த அசாதாரணத்துக்காக மக்கள் பட்ட வேதனையையும் மறந்துவிட மாட்டேன்.
இன்று முதல் மக்களுக்கான எனது பணி மீண்டும் தொடரப்போகிறது. எமது மக்களுக்காக என்னை நான் தியாகம் செய்வேன். மக்கள் எனக்கு பாரியதொரு சக்தியை வழங்கியுள்ளார்கள். அரசியல் பலிவாங்கல்களுக்கு உட்பட்ட எனக்கு நியாயம் கிடைக்க எனது மக்கள் என்னோடு தொடர்ந்தும் இருக்க வேண்டும்.
வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக நான் இருப்பேன். படையினர் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த வெற்றியை தொடர்ந்தும் பாதுகாப்பேன். மக்கள் மத்தியில் சந்தோஷமும், சமாதானமும் நிலைத்து நாட்டில் ஜனநாயகமான ஆட்சியை கொண்டுசெல்ல நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.
நான் மீண்டும் இந்த நாட்டுக்காக என்னைத் தியாகம் செய்வேன். என் உயிரைக் கொடுத்தேனும் எம் மக்கள் சந்தோஷமாக வாழ வழிசமைப்பேன். உங்கள் அனைவருக்கும் வெற்றி உண்டாகட்டும்! என்றார் பொன்சேகா.
0 Responses to பழி வாங்காமல் விடமாட்டேன்