ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள 16 கருணை மனுக்களில் ஒன்று கூட இதுவரை தீர்க்கப்படவில்லை என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி எழுப்பி உள்ள குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பார்லிமென்ட் வளாகத்தில் பத்திரி்கையாளர்களிடம் பேசிய சிதம்பரம் கூறியதாவது: தற்போது குறை கூறும் பா.ஜ., தலைவர் அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த போது 6 வருடங்களில் 14 கருணை மனுக்களில் ஒன்று கூட தீர்க்கப்படவில்லை; அவருக்கு பின் சிவராஜ் பாட்டீலின் பதவி காலத்திலும் 14 மனுக்களில் ஒன்று கூட தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்தன; மொத்தமிருந்த 28 கருணை மனுக்களில் 2, அப்துல் கலாமின் பதவி காலத்தில் தீர்க்கப்பட்டது; அந்த 26 மனுக்களுடன் மேலும் 5 கருணை மனுக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பட்டன.
பிரதீபா பாட்டீல் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு மூன்றரை ஆண்டுகளில் நிலுவையில் இருந்த 31 மனுக்களில் 16 மனுக்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்; கருணை மனுக்கள் விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிரான, முற்றிலும் உண்மையற்ற கருத்துக்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் தெரிவித்து வருகின்றனர்; 2001ம் ஆண்டு பார்லிமென்ட் வளாக தாக்குதல் வழக்கில் குற்றவாளி அப்சல் குருவிற்கு 2004ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது; அவரது கருணை மனுவும் தற்போது நிலுவையில் உள்ளது. இவ்வாறு சிதரம்பரம் தெரிவித்துள்ளார்.
0 Responses to அத்வானி கருத்துக்கு சிதம்பரம் மறுப்பு