திமுக தலைவர் கலைஞர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ’’உள்ளன்போடு என்னை நேசிக்கும் பேராசிரியப் பெருந்தகை எனக்கு வாழ்த்துக் கட்டுரை எழுதி ஆங்காங்கு நீயும், ஏனைய உடன்பிறப்புகளும் அந்நாளை அகமும் முகமும் மலர்ந்திட நீயும், நின் குடும்பத்தினரும் குதூகலத்துடன் கொள்கை நெறி குன்றாமல் கொண்டாட வேண்டுமென்று, குற்றால அருவியென தமிழைக் கொட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்ணாவுக்குப் பிறகு எனக்கு வாய்த்த அண்ணனாக; அவர் இருப்பதை எண்ணியெண்ணி என் பணியில் மேலும் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு அவரது வாழ்த்துக் கட்டுரை எத்துணை இன்பத்தை பொழிந்திடக் கூடியது என்பதை எங்கள் இருவரையும் எழுபதாண்டு காலத்திற்கு மேலாக அறிந்துள்ள திராவிடச் செல்வங்களாம் உனக்கும், உன் போன்றார்க்கும் நான் விளக்கி எழுதத் தேவையில்லை. அவரைப் பெரிதும் மதிக்கும் நான் யார் என்பதையும் - அன்பைப் பொழிந்து என்னை வாழ்த்திடும் அவர் யார் என்பதையும் இருவரும் ஒருவருக்கொருவர் அறிந்தே இருக்கிறோம்.
பெரியார் பாசறையின் மாணவர்களாக - அண்ணாவின் பாடி வீட்டுத் தோழர்களாக - அவரும், நானும் புகழோடு தோன்றிய அந்தக் காலந்தொட்டு - இன்று சூரியனுக்கு ஆதரவு திரட்டி சுயமரியாதை உணர்வின் சூடு தணியாமல் திராவிடத் தமிழர்கள் வாழ வேண்டும் என்ற குறிக்கோள் நிறைவேறிட அமைந்த பாசறையாம் தி.மு.கழகத்தில்;
அதற்கு நீர் பாய்ச்சி வேர் வளர்த்து விழுதுகளும், கிளைகளும் தழைத்தோங்கும் தருணத்தில், அதனைப் பாதுகாக்கும் வேலியின் காவலர்கள் பலர் இருந்தும்; அந்தக் காவலர்கள் வரிசையில் தலைமைக் காவலர்களாக நானும், அவரும் நெடிதுநாள் உழைத்து; அவர் 90வது அகவையையும், நான் 89வது அகவையையும் அடைந்திருக்கிறோம் என்றால்; நாங்கள் இந்த வாழ்க்கையில் இன்பத்தை துய்த்தோம் இல்லை; இல்லற சுகத்தைப் பெரிதென எண்ணிக் கிடந்தோமில்லை.
சோதனை, வேதனை என்று சுழன்றோடும் வாழ்க்கையில் இயற்கை இழுத்துச் செல்லும் திசையில் சென்றும் - லட்சிய வெற்றி யடைந்திட வேண்டும் என்ற உறுதி ஒன்றையே உயிராகக்கொண்டு; உழைத்து, களைத்து - இன்றைக்கு உன் போன்றோர் ஊட்டும் உற்சாகத்தால்; கை வண்டியில் நகர்ந்தும் - கம்பு ஊன்றி நடந்தும் - கண்மணி என நாம் போற்றும் கொள்கைகளைக் காத்திடத்தான் இந்த வயதிலும் துடித்துக் கொண்டிருக்கிறோம்.
எங்களுக்குத் துணையாக தளபதிகளும்; தளகர்த்தர்களும்; தானாடாவிடினும் தன் தசை யாடும் என்ற உறவும் உணர்வும் ஒரு சிறிதும் அகலாத “உடன்பிறப்புக்களே” என எப்போது நான் உச்சரிப்பேன் எனத் தவம் கிடக்கும் தன்மானத் தமிழின திராவிடர் பட்டாளமும் - எண்ணிக்கையில் ஐம்பது லட்சம் பேரை நெருங்குகிற வண்ணம், ஒரு பெரும் கடலாக காட்சி தரும் இந்தக் கழகக் கோட்டையில் தொடர்ந்து 43 ஆண்டுகளுக்கு மேலாக காவல் பணி புரிகிறேன்.
அதற்காக நீ எனக்கு நடத்தவிருக்கும் பிறந்த நாள் விழாவினை நன்றி தெரிவிக்கும் விழாவாக நான் நினைப்பேனே தவிர; எனக்குப் பொருத்த மான விழா ஒன்றை; தேவையான விழா ஒன்றை; பேராசிரியரும், நீயும், உன் போன்றோரும் எடுத்தீர்கள் என எண்ணி நான் என்னை ஏமாற்றிக் கொள்பவனல்ல என்பதை நீ அறிவாய் அல்லவா?
இன்னும் பெருந்தொண்டு; பெரியார் வழி நடக்கும் தொண்டு. பேரறிஞர் அண்ணாவின் மொழிகளை இதயத்தில் பதித்து, தொடரும் தொண்டு என்ன என்பதை அறிந்து என்றென்றும் இந்த இனம் காக்கும் தலைவர்கள்தான் நம்மை வழி நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து நடைபோடுவாய் எனக் கூறும் இந்த வேளையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரங்களை, பெரியாரும், அண்ணாவும் நமக்காக உச்சரித் தார்கள் என்று எண்ணுவது மட்டுமல்லாமல்; எதற்காக உச்சரித்தார்கள் என்பதையும் சிந்தித்து தெளிவுபெற வேண்டும். தெளிவு பெற்று நமது இயக்கப் பணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படும் நெளிவுகளை நிமிர்த்தி; கட்டுப்பாடு போற்றி களங்களில் நாம் காணும் வெற்றிகளுக்கு பின்னரும் கண்ணியம் கவசமாகட்டும். ஒற்றுமை உரமாகட்டும். என்றுரைக்கின்றேன்.
தேர்தல் வெற்றிகள் மட்டுமல்ல நமக்கு முக்கியம். நம் இன ஒற்றுமையை உருவாக்கினோம் எனும் நிலைதான் என்றென்றும் கரிகால்பெருவளத்தான் கட்டிய “கல்லணை” போன்ற உறுதியை நமக்குத் தரவல்லது. இதையெல்லாம் மனத்தில் கொண்டுதான்
நமது அமைப்புக்களில் ஏற்படும் கீறல்களையும், பிளவுகளையும் போக்குவதற்கு வழி காண நானும், பொதுச் செயலாளரும், தலைமைக் கழகத்தின் தளகர்த்தர்களும் அமர்ந்து பேசி மாவட்டந்தோறும் கழகத்தில் கட்டிக் காக்கப் படும் ஒற்றுமை, சுட்டிக்காட்டப்படும் வேற்றுமை இவற்றையெல்லாம் கணக்கிட்டு - இவற்றுக் கோர் இறுதி முடிவு காணக் குழு ஒன்றினை; தலைமைக் கழகச் சார்பில் நியமித்தோம்.
அந்தக் குழுவினர் நாம் குறிப்பிட்ட இடங் களுக்குச் சென்று, நிலைமைகளை ஆராய்ந்து, ஒரு தரப்பு புகார்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல், இரு தரப்பு நியாயங்களையும் எடுத்து விளக்கிடும் அறிக்கை ஒன்றை தலைமைக்கு தந்துள்ளார்கள்.
அந்த அறிக்கைத் தொகுப்பைக் காணும் நேரத்தில் அண்ணா பெயரால் ளியிடப்பட்டிருந்த நூல் ஒன்று எனக்குக் கிட்டியது. “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று மதுரை மாநில மாநாட்டையொட்டி, அண்ணா எழுதிய அருமையான எழுத்தோவியம் அது. “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று அண்ணா சொல்லிய அந்த வாசகத்தை துணைக்கு வைத்துக்கொண்டு குழுவினர் கொண்டு வந்து தந்த அறிக்கைத் தொகுப்பை நானும் பேராசிரியரும் பார்வையிட்டோம்.
கட்டுப்பாடு மீறியோர் என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்தோரும்; அவர்களின் பெயர்கள் அறிக்கையிலே இடம் பெற்றிருப்பதை அறிந்து, தெரிந்து, தாம் இழைத்தது குற்றம்தான் எனத் தெளிந்து; என்னையும், பேராசிரியரையும் மற்றும் தலைமைக்கழகத்தினரையும் தொடர்பு கொண்டு “பிழை பொறுத்தருள்க” என்றும் கேட்கிறார்கள். “இனி பிழை நேராது” என்ற உறுதியும் அளிக்கிறார்கள். பிழை புரிந்தோர் யாரென்ற பட்டியலையும் பார்க்கின்றோம். இனி அப்பிழை நேராது என்று குற்றத்தை ஒப்புக்
கொண்டு தொடர்ந்து நமது கொடியின் கீடிநடிநடிநடிந நின்று; தொண்டு புரிய துடிப்பவர்களையும் காணுகின்றோம். இவர்களில் யார் பிழை புரிந்தோர் - யார் மீது வீண் பழி என்பதை ஆராய்ந்து அளவிட்டுத் தீர்ப்புச் சொல்ல நிலைமையும் இடம் தராது; நேரமும் போதாது.
லட்சக்கணக்கில் உறுப்பினராவது இருப்போரில் புகார்களுக்கு ஆட்பட்டோர் தொகை; அப்படி ஒன்றும் அளவிடற்கரியதல்ல. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலே உள்ளது தான். கட்டுப்பாட்டுக்குப் பெயர்போன பெரியாரின் நிழலில் வளர்ந்த நாம் “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்ற அண்ணா வின் பொன்மொழியையும் தள்ளி விடுவதற்கில்லை.
புகாருக்கு உரியவர்கள் மீது நடவடிக்கை என்கிறபோது; அந்தப் புகார்களைக் கொடுத்தவர்கள் மீதும் புகார் இருப்பதை நாங்கள் அறியாமல் இல்லை. இதற்குத் தீர்வு என்ன? “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்ற அண்ணாவின் பொன்மொழிதான்
நமக்குத் தற்காலிகத் தீர்வு. அப்படியென்றால் கழகத்திற்குத் துரோகம் புரிந்தோர், கழகத்தின் வெற்றிக்கு முட்டுக் கட்டையிட்டோர் - தலைமைக் கழகத்தின் தண்டனைக்கு உள்ளாக மாட்டார்களா; எனக் கேட்கலாம். தண்டனையைவிட மேலான கண்டனத்திற்கு உள்ளாவார்கள் என்பதும், எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் கவனிக்கப்படுவார்கள் என்பதும் நான் அளிக்கும் உறுதியான வாக்குறுதியென தம்பிமார்கள் நம்பிடுவார்களாக.
தவறிழைத்தோரைப் புரிந்து கொண்டோம் என்பதும்; கழகத்திற்குத் துரோகம் இழைத்தோர் திருந்தக் கூடும் என்ற நம்பிக்கையும் தான் - இதற்கு மேலும் இந்த இனமான இயக்கத்திற்கு எள்ளளவு இழிவு தேடிட எண்ணுவோர் எவராயினும் “மறப்போம் மன்னிப்போம்” என்றில்லாமல், கழகத்தை இழிமொழிக்கு உள்ளாக்காமல், இறுதிவரை கட்டுப்பாடு காப்போம் என்ற உறுதியை எனது பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் நானும் பெறுகிறேன். நீங்களும் பெற்றிடுவீர்.
நமது படைக்கலனாம் இனமானக் கொள்கையையும் - பாசறைகளாம் கழக அமைப்புக்களையும் - திராவிட இயக்க நூற்றாண்டு விழா கொண்டாடுகிற இந்த நேரத்தில் மேலும் வலுப்படுத்திடவும் - இங்கே தமிழகத்தில் தன்மான உணர்வு
பெருகிடவும் - ஈழத்தில் தனித் தமிழ்நாடு உருவாகிடவும் - “வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்; வாழ்வினில் உயர்ந்த பின் தமிழையே பழித்தார்” என்ற புரட்சிக் கவிஞரின் புயல் வரிகளுக்குப் பொருள் புரிந்து போர் முரசம் ஆர்த்திடவும் - நம்மைத் தயார்படுத்திக் கொள்ள சூளுரை ஏற்பதே இந்தச் சுய மரியாதைக்காரனின் பிறந்த நாள் வாழ்த்தாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to இந்தச் சுய மரியாதைக்காரனின் பிறந்த நாள் வாழ்த்து | கலைஞர்