முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா இன்று தனது சொந்த தொகுதியான நீலகிரிக்கு வந்தார். அங்கு திமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்பு தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஆ.ராசா பேசுகையில்:
அவினாசி-அத்திக் கடவு திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. செயல்படுத்தமுடியுமா? என்ற நிலையில் இருந்த அந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினோம். ஆனால் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். தமிழக முதல்வர் மற்றும் இந்த தொகுதி எம்.எல்.ஏ. மக்களின் குறை தீர்க்க அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதற்கு நாங்கள் எந்த வகையிலும் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.
நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறோம். நீலகிரியில் கலைஞர் என்னை போட்டியிட சொன்னபோது சற்று யோசித்தேன். நான் பள்ளி, கல்லூரிகளில் படித்தபோது அங்கு சுற்றுலாதான் சென்றுள்ளேன். மற்றபடி எனக்கு நீலகிரியை பற்றி எதுவும் தெரியாது என்றேன்.
ஆனால் கலைஞர் கண்டிப்பாக நீ போட்டியிட வேண்டும். கொங்கு மக்களும், நீலகிரி மக்களும் அன்பானவர்கள். உன்னை வெற்றிபெற செய்வார்கள் என்றார். அதன்படி என்னை வெற்றிபெறச் செய்தீர்கள்.நான் மத்திய மந்திரியாக இருந்தபோதுகூட இந்த வரவேற்பு இல்லை. 1 1/2 ஆண்டு கழித்து வந்த எனக்கு நீங்கள் அளித்த வரவேற்பு உற்சாகத்தை தந்துள்ளது. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
நீலகிரி மக்களின் குறைகளை தீர்க்காமல் இங்கிருந்து செல்லமாட்டேன். நான் மத்திய மந்திரியாக இருந்த போது 30 கோடி தொலை தொடர்பு இணைப்புகள் தான் இருந்தது. அது தற்போது 100 கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு காரணம் நான்தான். 100 கோடி தொலை தொடர்பு இணைப்புகள் மூலமாக உங்களுடன் நான் தினமும் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்றார்.
2ஜி ஸ்பெக்ரம் ஊழல் வழக்கில் சிறைசென்றிருந்த ஆ.ராசா அண்மையில் ஜாமினில் வெளிவந்தார். தமிழகம் வருவதற்கு அவருக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்த போதும், குறிப்பிட்ட கால எல்லைக்குள் சென்றுவர பின்பு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் வந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கபப்ட்டது. பின்பு திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆ.ராசா பின்னர், நீலகிரி தொகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
100 கோடி தொலைத்தொடர்பு இணைப்புக்கள் மூலம் உங்களுடன் பேசுகிறேன்: ஆ.ராசா
பதிந்தவர்:
தம்பியன்
10 June 2012



0 Responses to 100 கோடி தொலைத்தொடர்பு இணைப்புக்கள் மூலம் உங்களுடன் பேசுகிறேன்: ஆ.ராசா