கனடா தமிழ் இளையோர் அமைப்பு தியாகி பொன். சிவகுமாரன் நினைவாக ’தமிழீழ மாணவர் எழுச்சி நாள்’ மாநாட்டினை கடந்த 9ஆம் திகதி நடத்தியிருந்தது.
இம்மாநாடானது தமிழீழப் போரின் தியாகி பொன். சிவகுமாரனின் தன்னலமற்ற அர்ப்பணிப்பினை மாணவர்களுக்கு எடுத்து விளக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவரின் அர்ப்பணிப்பு தமிழீழ விடுதலைப் போரில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் போராட்டத்தில் இணைவதற்குப் பாதையமைத்துக் கொடுத்திருந்தது.
முதலில் அமைதி வணக்கமும் மலர் வணக்கமும் இடம்பெற்றன. கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட தியாகி பொன்.சிவகுமாரனின் வாழ்வும் கல்வித் தரப்படுத்தலுக்கெதிரான அவரது போராட்ட அர்ப்பணிப்பும் தொடர்பான கருத்தாக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் ஒன்ராறியோ புதிய ஜனநாயகக் கட்சியின் தவிசாளரான திரு. நீதன் சண் அவர்கள் முதன்மைப் பேச்சாளராகக் கலந்து சிறப்பித்தார். அவர் அங்கு உரையாற்றும்போது, "எமது தாயக விடுதலைப் போரில் தமிழ் இளையோரின் பங்களிப்பு முதன்மையானது.
இளையோர் என்ற வகையில் நாம் தொடர்ந்தும் எம்முடன் பழகும் ஏனைய இளையோர்களுக்கு எமது போராட்டம் தொடர்பான நியாயத்தினை விளக்குதற்கு கடமையுடையவர்களாக உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
கனடா தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் செல்வன் நாவேந்தன் தம்பிராஜ் பேசும்போது, "தியாகி பொன். சிவகுமாரன் அவர்கள் இளையோர்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரது துணிவும் குறிக்கோளும் என்றென்றும் மறக்க முடியாதவை.
இளையோர் என்ற வகையில், அவரது வழியைப் பின்பற்றி எமது இன அடையாளங்களைக் காப்பது எமது கடமை. இவரையும் தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த பல்லாயிரம் மாவீரர்களையும் என்றென்றும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
யோர்க் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பும் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாக தமிழ் மாணவர் அமைப்பும் நிகழ்வில் நடைபெற்ற கருந்தரங்குகளை ஒழுங்குபடுத்தி முன்னெடுத்திருந்தன.



0 Responses to கனடா தமிழ் இளையோர் அமைப்பின் தமிழ் தேசிய மாணவர் எழுச்சி நாள்