Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயகப் பெண்கள், குழந்தைகள் நலன் காப்பதற்காக “தாய்மை” ஆரம்பகட்ட கருத்தரங்கும் கலந்துரையாடலும் 101 Town Centre Blvd, மார்க்கம் நகரசபை மண்டபத்தில் கடந்த 9ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பொதுச் சுடரினை மார்க்கம் நகரசபை உறுப்பினர் லோகன் கணபதிப்பிள்ளை, மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர் செல்வி ஜெனிற்றா நாதன், சமூக ஆர்வலர் சாண் தயாபரன் ஆகியோர் ஏற்றி வைத்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கனடாப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசனும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

செல்வி ராதிகா சிற்சபைஈசன் மற்றும் லோகன் கணபதிப்பிள்ளை இருவரும் கருத்துத் தெரிவிக்கும் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல், கனடிய பிரதான ஊடகங்களையும் உள்வாங்கி, தாயகப் பெண்களின் அவலங்களை புள்ளி விபரங்களுடன் சமர்ப்பித்து, சர்வதேச மயப்படுத்தி, அவர்களுக்கான நிரந்திரத் தீர்வினை பெற்றுக்கொடுக்கவும் கனடாத் தமிழ்ப் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடர்ந்து உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அதற்கு பக்கபலமாக தாமும் இருப்போமெனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர் செல்வி ஜெனிற்றா நாதன் தமது கருத்தினை தெரிவிக்கும்போது, பாதிக்கப்பட்ட மக்களின் தரவுகளை ஆதாரங்களுடன் கூடிய புள்ளி விபரங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு பிரதேசவாரியாக தரப்படுத்தி என்னென்ன மறு வாழ்வாதாரங்கள் அளிக்கப்பட வேண்டுமென விரிவான விளக்கத்தினை தந்தார்.

மேலும், அமைப்புகள் சார்ந்த உறுப்பினர்களும் பொது மக்கள் சார்ந்தவர்களும் தமது கருத்துக்களையும் தரவுகளையும் சிறப்பாக வழங்கினர். ஆரம்ப கட்ட வேலைத் திட்டங்களுக்கு பலர் அன்றைய தினமே பண உதவியினை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

போரின் எச்சங்களை சுமந்து கொண்டு வாழ்வாதாரத்திற்கும் வழியின்றி வாழும் மக்களை பரிதாபமாக பார்ப்பதைத் தவிர்த்து, பலமுள்ளவர்களாக மாற்றுவோமென கனடியத் தமிழ்ப் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு உறுதி எடுத்துக்கொண்டதோடு, “தாய்மை” நிகழ்வை விரிவுபடுத்தி அடுத்த கட்ட வேலைத்திட்டத்தை விரைந்து எடுத்துச் செல்வோமென அன்றைய நிகழ்வை நிறைவு செய்தனர்.

0 Responses to கனடாத் தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பினர் நடாத்திய “தாய்மை” கருத்தரங்கமும் கலந்துரையாடலும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com