”செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்களில் உயிருக்குப் போராடும் இலங்கைத் தமிழர்களை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்” என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய கொடிய அடக்குமுறையால் தமிழ் இனப் படுகொலையால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தமிழ் நாட்டிற்கு அடைக்கலம் தேடி தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களில் பலரை பொய்வழக்குகள் போட்டு சிறைகளில் அடைத்தும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தாலும், பிணையில் விடுவித்தாலும் மீண்டும் கைது செய்து செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்துத் துன்புறுத்தும் கொடுமை கடந்த ஆட்சியிலும் நடைபெற்று இப்போதும் தொடர்கிறது.
அவர்களில் சிலர் தாய் தந்தை உறவினரை தமிழகத்திலேயே பிரிந்து சிறப்பு முகாமில் வேதனையில் வாடுகின்றனர். எனவே அவர்கள் தங்களை சிறப்பு முகாமிலிருந்து விடுவித்து, திறந்தவெளி முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு தொடர்ந்து அறவழியில் போராடி வருகின்றனர்.
ஜூன் 16 ஆம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள 11 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்துப் போராடி வருகிறார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்ட செந்தூரன், பராபரன், செல்வராஜ், நர்மதன், சதீஷ்குமார், சேகர், செல்வா, ஜெகதாபன் ஆகிய 8 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனவே தமிழக அரசு செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
0 Responses to உயிருக்குப் போராடும் ஈழத் தமிழர்களை விடுதலை செய் - வைகோ