நாட்டில் தற்போதுள்ள நிலமைகளை அறிந்து கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஜெனீவாவில் கடந்த 18ம் திகதி ஆரம்பமாகியுள்ள 20வது மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை பிரதிநிதிகள் இந்த அழைப்பினை விடுத்துள்ளனர்.
இதன்போது இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலை குறித்து, இந்த விஜயத்தின் போது நவனீதம்பிள்ளையால் அறிந்துக் கொள்ள முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் சிறுவர் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களத பெற்றோர்களுடன் இணைக்கப்பட்டுள்ளமை, புனர்வாழ்வளிப்பு, மீளமைப்பு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்தும் மனித உரிமைகள் தொடர்பிலான ஏற்பாடுகளையும் அவர் நேரடியாக பார்வையிடமுடியும் என இலங்கை பிரதிநிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரேரணைகள் தொடர்பிலும் அறியமுடியும் என்பதுடன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரேரணைக்கு அப்பால், ஐக்கிய நாடுகளுடன் தொடர்ந்தும் ஒத்துழைத்து செயற்படவே அரசாங்கம் விரும்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி கோரி இலங்கைக்கு அனுப்பிய கடிதத்திற்கு இலங்கை அரசு அண்மையில் உத்தியோக பூர்வமற்ற பதில் ஒன்றினை அனுப்பியுள்ளது.
இருப்பினும் அதற்கான பதிலை மனித உரிமைகள் ஆணையாளர் அனுப்பவில்லை. எனினும் நவிப்பிள்ளையின் இலங்கை வருகைக்கு தடை பிறப்பிக்க வில்லை எனவும் அவரது குழுவினரின் விஜயத்திற்கே அரசு தடை விதித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனையடுத்து ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 20ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையினைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களால் இலங்கைக்கு வருவதற்கு நவிப்பிள்ளைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சர்வதேச நாடுகளுடைய தலையீடுகள் நாட்டில் தேவையற்றது எனவும் அதனை மக்கள் விரும்பவில்லை எனவும் அரசு பகிரங்கமாக கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to நவிப்பிள்ளையை இலங்கைக்கு வருமாறு அரசு அழைப்பு