ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிராக யோசனையின் பின்னணியில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் அவரின் அலுவலக பணியாளர்கள் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கைக்கு எதிராக பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் யோசனைக்கு இவர்கள் உதவியுள்ளதாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் குற்றம் சுமத்தியுள்ளார்.
பேரவையில் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர், இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்துடன், நவநீதம்பிள்ளையின் ஆசிய பிராந்திய அலுவலகப் பணிப்பாளர் ரோரி மன்கோவன், பலருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் தகவல்களையும் தமரா குணநாயகம் இணைத்துள்ளார்.
அதில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழுவுக்கான விசாரணைகள் மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான யோசனை என்பவற்றுக்கு நவநீதம்பிள்ளையும் அவரது பணியாளர்களும் உதவியுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இது ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை என்பவற்றின் நடுநிலைத்தன்மை, மற்றும் நாடுகளுக்கு இடையில் அந்த நிறுவனங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை என்பவற்றுக்கு குந்தகம் விளைவிப்பதாக தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
தமரா குணநாயகத்தின் இந்த கடிதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றிய உடன் நவநீதம்பிள்ளைக்கு அனுப்பப்பட்டதாக இலங்கையின் ஜெனீவா தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா யோசனையின் பின்புலத்தில் நவநீதம்பிள்ளையும் அவரின் பணியாளர்களும்?
பதிந்தவர்:
தம்பியன்
08 June 2012



0 Responses to அமெரிக்கா யோசனையின் பின்புலத்தில் நவநீதம்பிள்ளையும் அவரின் பணியாளர்களும்?